/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
ராமாயணத்தில் 'அணில் பக்தி': 'இலக்கிய பக்தி' பேசும் சுதா சேஷய்யன்
/
ராமாயணத்தில் 'அணில் பக்தி': 'இலக்கிய பக்தி' பேசும் சுதா சேஷய்யன்
ராமாயணத்தில் 'அணில் பக்தி': 'இலக்கிய பக்தி' பேசும் சுதா சேஷய்யன்
ராமாயணத்தில் 'அணில் பக்தி': 'இலக்கிய பக்தி' பேசும் சுதா சேஷய்யன்
ADDED : நவ 03, 2024 11:08 AM

எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை முன்னாள் துணைவேந்தர், 30க்கும் மேற்பட்ட இலக்கிய, ஆன்மிக நுால்களை எழுதியவர், பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை தமிழில் கொண்டு வந்ததில் பெரும் பங்காற்றியவர், சமய இலக்கிய, காப்பியங்களில் புலமை பெற்றவர், சொற்பொழிவாளர் என பல திறமைக்கு சொந்தக்காரர் டாக்டர் சுதா சேஷய்யன்.
மத்திய அரசின் செம்மொழி ஆய்வு நிறுவன துணை தலைவர் பதவி சமீபத்தில் தேடி வந்த மகிழ்ச்சியில் உள்ளவர், தினமலர் நாளிதழுக்காக 'இலக்கியங்களில் பக்தி' என்ற தலைப்பில் நம்மிடம் பேசிய தருணங்கள்...
மக்களை நெறிப்படுத்த ஆன்மிகம் அவசியம். அது தமிழ் இலக்கியங்களில் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் 'பழந்தமிழில் பக்திஇலக்கியம் இல்லை என்றும் சங்க காலத்தில் பக்திக்கு முக்கியத்துவம் இல்லை' என்றும் ஒரு கூற்று உள்ளது. அவ்வாறு இல்லை.
சங்க இலக்கிய காலத்தில் தமிழ் மக்கள் ஆழ்ந்த பக்தி உணர்வு கொண்டிருந்தனர். தொல்காப்பிய காலத்திலேயே கடவுள் வழிபாடு குறித்த தகவல், வகைப்பாடு தமிழ் மண்ணில் இருந்துள்ளன. மாயோன் (முல்லை- திருமால்), சேயோன் (குறிஞ்சி -முருகன்), இந்திரன் (மருதம்), வருணன் (நெய்தல் - கடற்கரை தெய்வம்) கொற்றவை (பாலை) என தமிழ் நிலப்பரப்புகளில் ஐவகை நிலம் என்றும், ஐந்திணை என்றும், எந்த நிலங்களில் எந்த தெய்வங்களை வழிபட்டனர் என்றும் காண முடியும்.
வசீகரித்த காதல், வீரம்
'சங்க இலக்கியங்களில் காதல், வீரத்தை பற்றி தான் குறிப்பிடப்படுகின்றன. மற்றவை இல்லை' என சிலர் குறிப்பிடுவது வழக்கம். ஒரு திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்படும் முக்கிய விஷயங்கள் தான் மக்கள் மனதில் நிற்கிறது. அதே வகையில் காதல், வீரம் பற்றிய தகவல்கள் சற்று நமக்கு புலப்படும் வகையாக சங்க இலக்கியங்களில் அமைந்து இருக்கலாம்.
அந்த தகவல்களுக்குள் ஆழ்ந்து பார்த்தால் தெய்வ வழிபாடு, பறவைகள் வலசை போன முறை, கணவன் தான் இருக்கும் ஊரில் இருந்து மனைவிக்கு செய்தி சொல்ல முற்பட்டது போன்றவையும் பார்க்கலாம்.
தலைவனும், தலைவியும்
சந்தித்தனர் என்பது காதல். சந்திப்புக்கு தோழி உதவினார் என்றால் அங்கு நட்பை பற்றிய தகவல் கிடைக்கிறது. தலைவன் வேறு ஊருக்கு சென்று பொருள் ஈட்டுகிறான் என்றால் அங்கு பொருளாதாரம் குறிப்பிடப்படுகிறது. சங்க இலக்கியங்களில் காதல், வீரம் மட்டுமே உள்ளதாக பார்க்கக்கூடாது.
தொல்காப்பியத்தில் முல்லை நிலத்தில் நாட்டை ஆளும் மன்னர்களுக்கு உவமையாக திருமாலை குறிப்பிடும் மரபு இருந்துள்ளது. காக்கும் கடவுளாக அந்நில மக்கள் திரு மாலை பார்த்துள்ளனர் என்ற செய்தியும் சங்க பாடல்களில் காணப்படுகின்றன.
புறநானுாற்றில் புலவர் காவேரி பூம்பட்டினத்து காரிக் கண்ணனார் இயற்றிய 'கருநிற மேனி கண்ணன் (கிருஷ்ணன்), அவனுடைய அண்ணன் வெண்நிற மேனி கொண்டவன். இந்த இருவரை போல நீங்கள் நிலைபெற்று வாழ வேண்டும்' என அரசர்களை வாழ்த்தும் பாடல் இடம் பெற்றுள்ளது.
அணில் பக்தி
சங்க இலக்கியத்தில், ராம கதைகளில் இருந்து ஓரிரு தகவல்களை, பிற்காலத்தில் வந்த காவியகர்த்தாக்கள் கையாண்டு உள்ளதை பார்க்க முடிகிறது. ராம காதையில், ராமன் கடலுக்கு மேல் பாலம் கட்டும்போது அணில் உதவி செய்தது வால்மீகி, கம்பர், துளசிதாசர் ராமாயணங்களில் இடம்பெறவில்லை. வால்மீகிக்கு பின் வந்த ராமாயணங்களின் பட்டியலில், கவிஞர் ரங்கநாதரால் தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட (கோனா புத்தா ரெட்டி) ரங்கநாத ராமாயணத்தில் இக்கதை தென்படுகிறது. இலக்கியங்களில் இக்கதை தொண்டரடி பொடியாழ்வாரின் பாசுரங்களில் முதன்முதலில் தென்படுகிறது.
'குரங்குகள் பாறையை கொண்டு போய் போடும் போது, தான் எவ்விதத்தில் உதவி செய்வது என பார்த்த அணில் கடலுக்குள் போய் உடலை ஈரப்படுத்தி அந்த ஈரத்துடன் மணலில் புரண்டு, அந்த மணல் துகளுடன், குரங்குகள் போட்டுள்ள பாறைகளுக்கு இடையில் உதிர்த்து விட்டதாம். எப்படியாவது உதவ வேண்டும் என்ற அந்த அணிலை போல...' என குறிப்பிடுகிறார் ஆழ்வார்.
ஓர் அணில் உதவி செய்தது என்பது போன்ற எண்ணம் அந்த காலகட்டத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை.ஆழ்வார் பாடிய இந்த செய்தியை கம்பர் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கம்பருக்கு பின்னால் வந்த இந்த தகவல் ரங்கநாத ராமாயணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை 'உடுத பக்தி' (அணில் பக்தி) என தெலுங்கு மக்கள் குறிப்பிடுவர். அவர்கள் பக்திக்கு அணிலை போல் இருக்க வேண்டும் என்பர்.
மொழிகளை கடக்கும் இலக்கியம்
ராமேஸ்வரம் கடற்கரையில் நடந்ததாக எண்ணப்படுகிற ஒரு நிகழ்ச்சியின் பாரம்பரியம் தெலுங்கு மொழியில் ராமாயணத்தில் அமைகிறது என்றால் இலக்கியத்திற்கு அந்த மொழியில் மாத்திரம் அல்லாமல் அண்டைய பகுதிகளிலும் வசிக்கும் மக்களிடையேயும் அதன் தொடர்ச்சி காணப்படும்.
பம்கிம் சந்திர சட்டர்ஜி 'ஆனந்த மடத்தில்' பாடியதில் இடம் பெற்ற 'வந்தே மாதரத்தை' தமிழில் பாரதியார் பாடினார். ஒரு பகுதியில் ஒரு நிலப்பரப்பில் உள்ள இலக்கியத்தின் உணர்வு, அதே நிலப்பரப்பில் வாழக்கூடிய மக்களுக்கு வேறு மொழிகளில் பேசினாலும் கூட அந்த இலக்கியங்கள் அவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும். எல்லை, மொழிகளை கடந்தும் கூட இலக்கியங்கள் தொடரும் என்பதற்கு 'உடுத பக்தி', 'வந்தே மாதரம்' உதாரணங்கள் என்கிறார்.