தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/உலகை வெல்லும் இளைஞர் படை

உலகை வெல்லும் இளைஞர் படை

உலகை வெல்லும் இளைஞர் படை


ADDED : நவ 01, 2026 03:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 03:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– எல்.உமாசங்கர் –

ஒரு கண்டுபிடிப்பு பிறக்கும் போது உலகம் வியக்கும். வியப்பு தணியும் போது யுகம் பிறக்கும். செயற்கை நுண்ணறிவு இப்போது அந்த இரண்டாவது பிறப்பின் வாயிலில் நிற்கிறது. நேற்று வரை அது ஒரு மாயாஜாலம். இன்று அது ஒரு தொழில் கருவி. மாயத்தில் நிற்பவன் வேடிக்கை பார்ப்பான்; கருவியாக மாற்றுபவன் எதிர்காலத்தை வடிப்பான்.

இதற்கு முன் எந்தப் பேராற்றலும் இவ்வளவு வேகமாக மனிதக் கரங்களுக்கு வந்ததில்லை. நீராவிப் பொறியால் தொழில் உலகம் மாற ஒரு நுாற்றாண்டு; மின்சாரம் ஆதிக்கம் செலுத்தப் பல தசாப்தங்கள்; இணையம் உலகை இணைக்கப் பல ஆண்டுகள். ஆனால் செயற்கை நுண்ணறிவு உலகெங்கும் கால்பதிக்கச் சில மாதங்களே போதுமானதாக இருந்தது.

இந்த வேகம் ஒரு பெரும் மயக்கம். ஒவ்வொரு வாரமும் புதிய மாதிரி; புதிய கருவி. இந்த மயக்கத்திற்குப் பின்னணியில், சந்தை தன் கணக்கை தொடங்குகிறது. எவ்வளவு தயாரிப்புகள் வேரூன்றின, எவ்வளவு பெரிய தளங்களுக்குள் கரைந்தன, எவ்வளவு புது உருவம் வடித்தன என்பதைக் காட்டும் கண்ணாடிகள் இப்போது வெளிவருகின்றன. இது அழிவு அல்ல; இது துாய்மைப்படுத்துதல். காட்டில் எல்லா விதைகளும் மரமாவதில்லை; தகவமைப்பவை மட்டுமே வாழும்.

தொழில்நுட்ப உலகில் மூடப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் வீழ்ச்சி அல்ல, அடுத்த முயற்சிக்கான பாடம். வியப்பு என்பது ஒரு மின்னல் போல. ஒரு நொடி வெளிச்சம் தரும். பிறகு மறைந்துவிடும். தொழில் என்பது வீட்டில் எரியும் விளக்கு போல. தினமும் எரிய வேண்டும். மின்னலை வைத்து வீட்டுக்கு வெளிச்சம் போட முடியாது.

இதற்கு சமீபத்திய உதாரணத்தைப் பாருங்கள். கைப்பேசிக்கு மாற்றாக வருகிறது என்று சொல்லி, சட்டையில் குத்தும் ஊசி போன்ற கருவிகளும், திரையே இல்லாத சிறு பெட்டிகளும் பெரும் ஆரவாரத்துடன் வந்தன. அறிமுக விழாவில் உலகமே கைதட்டியது. ஆனால் கடைக்கு வந்தபோது மக்கள் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்டார்கள்: இதை என் கைப்பேசியே செய்யுமே... இதற்கு நான் ஏன் தனியாக பணம் கொடுக்க வேண்டும்?

பதில் இல்லாததால் அந்தத் தயாரிப்புகள் காணாமல் போயின.

இதே கதைதான் மின்னஞ்சலைத் தானாக எழுதும் கருவிகளுக்கும் நடந்தது. ஆரம்பத்தில் பலரும் பயன்படுத்தினார்கள். ஆனால் பெரிய நிறுவனங்களே அதே வசதியை இலவசமாக கொடுக்கத் தொடங்கியபோது, தனியாக இருந்த கருவிகளுக்கு வேலை இல்லாமல் போனது.

எது புத்திசாலித்தனம்?

உலகச் சந்தையை வெறும் செய்தியாகப் படிக்கக்கூடாது; அதைப் பாடமாக படிக்க வேண்டும்.

ஏன் ஒரு நிறுவனம் பயனரின் நம்பிக்கையை இழந்தது? ஏன் அதன் கணினிச் செலவு வருவாயை விட பல மடங்கு அதிகமானது? பெரிய நிறுவனம் அதே வசதியை இலவசமாகத் தந்தபோது, சிறிய நிறுவனத்திடம் என்ன தனித்த பாதுகாப்பு இல்லாமல் போனது?

அமெரிக்க நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்து கற்ற இந்தப் பாடங்களை, தமிழகத்து இளைஞன் தன் முதல் ரூபாயை செலவழிக்கும் முன்பே கற்றுக்கொள்ள முடியும்.

உன் வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமாக இரு, அப்போது தான் அவர்களுக்கு என்ன தேவை என்பதை அவர்கள் சொல்வதற்கு முன்பே நீ அறிவாய். என்று சொல்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்; தொலைபேசியைக் கணினியாக மாற்றி, கணினியை வாழ்க்கையாக மாற்றியவர். அவர் கருவியை விற்கவில்லை; தேவையைப் புரிந்துகொண்டார்.

இனி இந்தியாவின் பெரும் வாய்ப்பு பொதுவான நுண்ணறிவில் இல்லை, குறிப்பான நுண்ணறிவில் தான் இருக்கிறது.

கவிதை எழுதுவது வியப்பு, கணக்கை முடிப்பது வருமானம். படம் வரைவது வியப்பு, மின் கட்டணத்தை குறைப்பது லாபம். வியப்புக்கு கைதட்டல் கிடைக்கும், வருமானத்திற்குத்தான் எதிர்காலம் கிடைக்கும்.

பொதுவான நுண்ணறிவை உருவாக்கி பெரிய நிறுவனங்களுடன் மோதுவதைவிட, ஒரு குறிப்பிட்ட துறையை ஆழமாகப் புரிந்துகொள்வதே சிறிய நிறுவனங்களின் புத்திசாலித்தனம்.

பின்னலாடைத் தொழிலில் துணி வெட்டும் முறையை மேம்படுத்துவது, தொழிற்சாலைகளில் இயந்திரப் பழுதுகளை முன்கூட்டியே கண்டறிவது, விவசாயத்தில் விளைபொருட்களின் தரத்தைத் துல்லியமாகப் பிரித்தறிவது என, ஒரு துறையின் நுணுக்கங்களை அறிந்து அதற்கான தீர்வுகளை உருவாக்குபவர்களே நாளைய தொழில்நுட்பத் தலைவர்களாக உருவெடுப்பார்கள்.

இந்தக் குறிப்பான தீர்வுகளுக்கு தமிழகத்தை விட பெரிய ஆய்வகம் இல்லை. இது வெறும் மாநிலம் அல்ல, பல தொழில்கள் ஒன்றாக வாழும் ஒரு தொழில் கண்டம்.

எது தொழில்?

கோவை என்பது இயந்திரங்களின் தலைநகரம். இங்கே ஒவ்வொரு தெருவிலும் ஒரு பட்டறை. ஒரு இயந்திரம் ஒரு நாள் நின்றால், ஒரு நாள் உற்பத்தி நிற்கும், வாடிக்கையாளரின் நம்பிக்கை தேயும். அந்த இயந்திரத்தின் அதிர்வை வைத்தே இன்னும் 70 மணி நேரத்தில் பழுது வரலாம் என்று முன்கூட்டியே சொல்லும் ஒரு சிறு கருவி, இங்குள்ள ஒவ்வொரு பட்டறைக்கும் பேருதவி.

திருப்பூர் என்பது உலகின் பின்னலாடைத் தலைநகரம். இங்கே துணி என்பது மூலதனம். ஒரு விழுக்காடு துணி மிச்சமானால் கூட, அது ஒரு நிறுவனத்திற்கு ஆண்டுக்கு பல லட்சங்கள் லாபம். துணியை எப்படி வெட்டினால் வீண் குறையும் என்று சொல்லும் கணினிப் பார்வை, திருப்பூரில் இருந்து உலகம் முழுவதும் போகும் தகுதி கொண்டது.

‘‘சிறு தொழில்கள் தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு என்றார் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம். அவர் சிறு தொழிலின் வலிமையை நம்பியவர். அந்த சிறு தொழில்களின் நெருக்கடிகள் புத்தகத்தில் இல்லை, களத்தில் இருக்கின்றன. களத்தில் நிற்பவனுக்கு மட்டுமே அது புரியும்.

ஊரில் தீர்க்கப்படாமல் இருக்கும் ஒரு பிரச்னையைக் கண்டறியுங்கள். பத்து பேரிடம் பேசுங்கள். ஒரு சிறு மாதிரியை செய்யுங்கள். அது பயன் தருகிறதா என்று பாருங்கள். கோடிகளோடு தொடங்குவது தொழில் அல்ல, தேவையோடு தொடங்குவது தான் தொழில்.

எது வல்லமை?

பெரிதாக கனவு காண்பதும், சிறிதாக தொடங்குவதும் தான் இன்றைய மந்திரம்.

பெரிய அலுவலகம், நுாறு பேர் என்ற பழைய பிம்பத்தை உடைக்க வேண்டிய நேரம் இது. இன்று ஒரு மேஜை, ஒரு மடிக்கணினி, தீர்க்கத் துடிக்கும் ஒரு பிரச்னை இருந்தால் போதும், ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கு. இன்று கிடைக்கும் நவீன கருவிகள், ஒரு யோசனையை சில நாட்களிலேயே முன்மாதிரியாக மாற்றும் வல்லமை கொண்டவை.

ஆனால் முதலில் ஒரு வாடிக்கையாளரை அணுக வேண்டும். அவரது சிக்கலைத் தீர்த்து, இதற்கு மாதம் இரண்டாயிரம் தருவீர்களா? என்று தயக்கமின்றி கேட்க வேண்டும். அவர் தருகிறேன் என்று சொன்னால், தொழில் தொடங்கிவிட்டது என்று பொருள். அதன் பின் தான் முதலீடு, அதன் பின் தான் விரிவாக்கம்.

ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு சிறந்த நேரம் நேற்று, அடுத்த சிறந்த நேரம் இன்று என்பது - சீனப் பழமொழி, ஆயிரம் ஆண்டுகளாக வணிகர்களால் சொல்லப்படும் வாழ்வியல் நீதி. தள்ளிப்போடுவது தான் மிகப்பெரிய தோல்வி.

இந்த சிறு தொடக்கத்தின் முன் நிற்கும் பெரிய மலை கணினி வளம். ஒரு பெரிய மாதிரியை இயக்க தேவையான வளத்தின் வாடகை ஒரு சிறு நிறுவனத்தை மிரட்டும்.

இந்த பெரிய செலவைக் குறைக்கவே மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன் பெயர் இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கம். இதன் மூலம் தகுதியான புதிய நிறுவனங்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் குறைந்த கட்டணத்தில் கணினி வசதியை பெற முடியும். சொந்தமாக பெரிய கணினிகளை வாங்க முடியாதவர்களுக்கு இது ஒரு பெரிய உதவி.

ஆனால் கணினி வசதி கிடைத்துவிட்டால் மட்டும் ஒரு நல்ல தயாரிப்பை உருவாக்கிவிட முடியாது. தரமான தகவல் வேண்டும், பாதுகாப்பான வடிவமைப்பு வேண்டும், மக்களின் நம்பிக்கை வேண்டும். இவை இல்லாமல் எந்த தொழில்நுட்பமும் வெறும் பொம்மை தான்.

விதை மரமாவது விதையால் மட்டும் அல்ல, அதைத் தாங்கும் மண்ணாலும், உயிர் கொடுக்கும் நீராலும், வழிகாட்டும் வெயிலாலும் தான்.

தொழிலும் அப்படித்தான். ஒரு யோசனை மட்டும் போதாது. வழிகாட்டும் ஒரு குரு வேண்டும், கைப்பிடித்து அழைத்துச் செல்லும் தொழில்துறை வேண்டும்; நம்பி முதல் காசு கொடுக்கும் ஒரு வாடிக்கையாளர் வேண்டும். தமிழ்நாடு புத்தொழில் இயக்கம் இந்த சூழலைத் தான் கட்டமைத்து வருகிறது.

எது வீரம்?

உலகை மாற்றுவேன் என்று கூச்சலிடுவது வீரம் அல்ல. ஒரு தொழிலாளியின் வியர்வையை குறைப்பது தான் உண்மையான வீரம்.

கோவையில் ஒரு பட்டறையின் மின் கட்டணம் குறைவது, திருப்பூரில் ஒரு தையல் தொழிலாளியின் நேரம் மிச்சமாவது, தஞ்சையில் ஒரு விவசாயி தன் நெல்லுக்கு சரியான விலை பெறுவது - இவை தான் இந்தப் பொருளாதாரத்தின் துாண்கள்.

இந்த சிறு சிறு மாற்றங்கள் தான் ஒரு பெரும் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புகின்றன. இவை விளம்பரத்தில் தெரியாது, ஆனால் வாழ்வில் தெரியும். இந்த மாற்றத்தை உருவாக்கும் வல்லமை தமிழகத்தின் இளைஞர்களின் கையில் தான் உள்ளது.

செயற்கை நுண்ணறிவின் அடுத்த ஆட்டம் வியப்பைக் காட்டுபவர்களுக்கானது அல்ல... வியப்பை வாழ்க்கை ஆக்குபவர்களுக்கானது. அந்த ஆட்டத்தின் முதல் சீட்டு நமது கையில் தான் இருக்கிறது. களமிறங்கத் தயாரா?

தொழில்நுட்பம் தரும் வாய்ப்பு

தமிழக அரசு தனக்கென ஒரு தனி செயற்கை நுண்ணறிவுக் கொள்கையை வடிவமைத்து வருகிறது. இதன் நோக்கம் பெரிய நகரங்களில் மட்டுமல்ல, இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள கல்லுாரிகள், தொழிற்பேட்டைகளிலும் இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்ப்பது தான். இதற்காக மாவட்டந்தோறும் சிறு ஆய்வகங்கள் அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.

ஒரு செயற்கை நுண்ணறிவு மாதிரியை ஒரு முறை பயன்படுத்துவதற்கான செலவு கடந்த ஓராண்டில் மட்டும் 80 சதவீதம் குறைந்துள்ளது. முன்பு ஒரு ரூபாய் செலவான இடத்தில் இப்போது 20 காசு தான் செலவாகிறது. இதனால் தான் கோவை, திருப்பூர் போன்ற ஊர்களில் உள்ள சிறு நிறுவனங்கள் கூட தங்கள் தேவைக்கு ஏற்ப இதை பயன்படுத்த முடிகிறது. விலை குறைவது தான் இந்த தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய வாய்ப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us