தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ பிரியத்துக்கு பெப்பர்; கொஞ்சும் குக்கூ: பொறியாளரின் செல்லப்பிராணிகள்

பிரியத்துக்கு பெப்பர்; கொஞ்சும் குக்கூ: பொறியாளரின் செல்லப்பிராணிகள்

பிரியத்துக்கு பெப்பர்; கொஞ்சும் குக்கூ: பொறியாளரின் செல்லப்பிராணிகள்


UPDATED : அக் 11, 2026 01:16 PM

ADDED : அக் 10, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 01:16 PM ADDED : அக் 10, 2026 04:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சினிமா பார்ப்பது... பாடல் கேட்பது... செடிகள் வளர்ப்பது... கோயிலுக்கு செல்வது... சுற்றுலா செல்வது... பீச், நீர் நிலைகளில் பொழுது போக்குவது... குடும்பத்துடன் நேரம் செலவிடுவது... பொழுதை எப்படி கழிக்கிறீர்கள் எனக் கேட்டால் எல்லோரும் இப்படி பதிலளிப்பதை கேட்டிருக்கலாம். ஆனால் மதுரை பொறியாளர் ராஜனிடம் கேட்டால் தான் பெறாத பத்து குழந்தைகள் தான் உலகம் என்கிறார்.

பத்து குழந்தைகள் என்றால் செல்லப் பிராணிகளாம். ஒன்றல்ல... இரண்டல்ல... பத்து பப்பிஸ்களை வாங்கி தன் பணி நேரம் போக மற்ற நேரத்தை அவற்றுடன் செலவிடுகிறார். அதுவும் அவரது இரட்டை மழலை செல்லங்களுக்கு செலவிடும் நேரத்தை விட அதிகம்.

கட்டுமான பொறியாளரான ராஜன் சிறந்த இண்டீரியர் டெக்கரேட்டராவார். வெளிமாநிலங்களுக்கு சென்றும் கட்டுமான, டெக்கரேட்டர் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக 25 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்து அவர்கள் குடும்பத்தினரையும் தன் குடும்பத்தினரை போல கவனித்து வருகிறார். சிறந்த கட்டுமானங்களை மேற்கொண்டதற்காக பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்திருக்கிறார்.

வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு சதவீதத்தை சமூக பணிகளுக்கும் செலவிட்டு வருகிறார். பழநி, சபரிமலை சீசன் காலங்களில் பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதை 23 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாக கொண்டுள்ளார். பாதயாத்திரை பக்தர்களுக்கு ரிப்ளக்டர் டி சர்ட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் சத்தமின்றி வழங்கி வருகிறார்.

பணிக்கு மத்தியில் மனசு லோசாக இருக்க இவரது பார்வை பப்பிஸ்கள் மீது திரும்ப, தற்போது பத்து பப்பிஸ்கள் வரை வளர்த்து வருகிறார். தினமும் காலை, இரவு என அவைகளுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி கவனித்து கொள்கிறார்.

பப்பிஸ்களுடனான ‛அட்டாச்' குறித்து ராஜன் மனம் திறந்ததாவது:

துாங்கா நகரான மதுரை நகரில் தெரு நாய்கள் அதிகம். எங்கள் பகுதி தெருக்களில் உணவுக்காக நாய்கள் திரிவதை முதலில் கவனித்த போது அவைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணம் ஏற்பட்டது. இதற்காக காலை, மாலை நேரங்களில் தெரு நாய்களுக்கு பிஸ்கட் உள்ளிட்ட உணவுகளை கொடுக்க துவங்கினேன். இதனால் நான் எங்கு சென்றாலும் நாய்கள் பின் தொடர துவங்கின. இதனால் அவை மீதான ஈர்ப்பு ஏற்பட ஏன் வீட்டில் வாங்கி வளர்த்தால் என்ன என்று யோசிக்க வைத்தது. அந்த எண்ணம் தான் தற்போது வீட்டில் பத்து பப்பிஸ்கள் வரை உள்ளன. குட்டிகளாக வாங்கி வளர்ப்பேன். வீட்டிற்கு வருவோர், நாய் வளர்க்க விரும்பும் நண்பர்கள் கேட்டால், அவற்றை நான் எவ்வுளவு விலை கொடுத்து வாங்கியிருந்தாலும் இலவசமாக வழங்கி விடுவேன். ஆனால் அவர்கள் முறையாக வளர்க்கிறார்களா என குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை சென்று இதுநாள் வரை கண்காணித்து வருகிறேன்.

பெப்பர், டிண்டு, குக்கூ, குப்ரி, பிளாக்கி, பிஜி, டிமி என அவற்றின் நிறம், உருவ அமைப்புக்கு ஏற்ப பத்துக்கும் பெயர்களையும் சூட்டியுள்ளேன். சுஜி, சந்தோஷ் என்ற பெயர்களிலும் இரு குட்டீஸ்கள் உள்ளன. பெப்பர் பிரியம் ஜாஸ்தி என்றால் குக்கூ கொஞ்சி கொண்டே இருக்கும். என்னுடன் தான் இவை அனைத்தும் படுக்கும். நான் வீட்டிலிருந்து சென்றால் வெளியே வந்து வழியனுப்பும். இரவு நான் வீட்டிற்கு திரும்பும் வரை வாசல் அருகிலேயே காத்திருக்கும்.

அவைகளுக்கு என பிரத்யோகமாக ஸ்பெஷல் உணவுகள் எதுவும் இல்லை. வீட்டில் எங்களுக்கு சமைப்பதில் குறிப்பிட்ட அளவு அவைகளுக்கு வழங்கி விடுவோம். முட்டை, இறைச்சி வாரத்திற்கு குறிப்பிட்ட நாட்களில் வழங்குவோம். நான் இல்லாத நேரத்தில் மனைவி மகாலட்சுமி பொறுப்பாக அவற்றை கவனித்து கொள்வார். எப்போது தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை குறித்து வைத்து கொண்டு கால்நடை மருந்தகம் அழைத்து சென்று போட்டு விடுவார்.

தற்போது என் இரட்டை குழந்தைகள் தியா, ரியாவுடன் அவ்வளவு பப்பிஸ்களும் அதிகம் நெருக்கம் காட்டுவது சந்தோஷமாக இருக்கிறது.

நான் சந்தோஷமாக வந்தால் பப்பிஸ்கள் உற்சாகமாக துள்ளி தோளில் ஏறி விளையாடும். நான் கொஞ்சம் மூட்அவுட்டாக வீட்டிற்கு வரும்போது அதையும் அவை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்ளும். சற்று தள்ளி தான் நிற்கும். பிறகு நான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனதும் நெருங்கும். இப்படி இவற்றுடன் பழகினால் நேரம் செல்வதே தெரியாது.

இவ்வாறு தெரிவித்தார்.

வாழ்த்த 98421 51395

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us