திறமையான இளைஞர்களை தேடுகிறது 'இஸ்ரோ': புரொபல்ஷன் வளாக குழு இயக்குனர் காயத்ரிதேவி பேட்டி
திறமையான இளைஞர்களை தேடுகிறது 'இஸ்ரோ': புரொபல்ஷன் வளாக குழு இயக்குனர் காயத்ரிதேவி பேட்டி
UPDATED : அக் 11, 2026 08:21 AM
ADDED : அக் 10, 2026 04:24 PM

கோவை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்(இஸ்ரோ) விண்வெளி அறிவியல் மட்டுமின்றி ஏஐ, ஐஓடி, சென்சார்கள், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, சிவில் இன்ஜினியரிங் என அனைத்து துறைகளிலும் திறமையான இளைஞர்கள் தேவைப்படுகின்றனர் என்கிறார் மகேந்திரகிரி, இஸ்ரோ புரொபல்ஷன் வளாக குழு இயக்குனர் காயத்ரிதேவி.

இவர் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி:
* விண்வெளி ஆய்வு தகவல்களின் அடிப்படையில் தான் செயலிகளையும், திட்டங்களையும் உருவாக்குகிறோமா?
ஆம். செயற்கைக்கோள்களில் இருந்து மட்டுமல்லாமல் கிரவுண்ட் ஸ்டேஷன் எனும் தரைக்கட்டுப்பாட்டு மையங்களில் இருந்தும் பெறப்படும் டேட்டாவை (தரவுகளை) ஒருங்கிணைத்தே, இவை செயல்படுத்தப்படுகின்றன. எனினும், பெரும்பாலான பயன்பாடுகளுக்குச் செயற்கைக்கோள் வழியாக பெறப்படும் தகவல்களே பிரதானமாக இருக்கும்.
* வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா எந்தெந்த விஷயங்களில் முன்னணியில் இருக்கிறது?
பேரிடர் மேலாண்மை மற்றும் வேளாண்மையில், நாம் மற்ற நாடுகளை விட, மிக சிறப்பாக செயல்படுகிறோம். இதுதவிர, தொலைதூரக் கல்வி, தொலைதூர மருத்துவம் போன்றவற்றில் செயற்கைக்கோள் பயன்பாடு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
* இஸ்ரோவில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றி?
இஸ்ரோவில் விண்வெளி அறிவியல் மட்டுமின்றி ஏஐ, ஐஓடி, சென்சார்கள், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, சிவில் இன்ஜினியரிங் என அனைத்து துறைகளிலும் நிறைய வாய்ப்புகளும், ஆராய்ச்சி பணிகளும் உள்ளன. மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்குரிய துறையை தேர்ந்தெடுத்து விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தங்களை அர்ப்பணிக்க முன்வர வேண்டும்.
