/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
பேச்சு தான்... என் உயிர்மூச்சு... - ஜெயஸ்ரீ மீனாட்சி உற்சாகம்
/
பேச்சு தான்... என் உயிர்மூச்சு... - ஜெயஸ்ரீ மீனாட்சி உற்சாகம்
பேச்சு தான்... என் உயிர்மூச்சு... - ஜெயஸ்ரீ மீனாட்சி உற்சாகம்
பேச்சு தான்... என் உயிர்மூச்சு... - ஜெயஸ்ரீ மீனாட்சி உற்சாகம்
ADDED : பிப் 16, 2025 11:13 AM

வாயை திறந்தால் மடை திறந்த வெள்ளம் என பேசுகிறார்... பட்டிமன்ற மேடை ஏறினால் பார்வையாளர்களின் கைத்தட்டல்களை பெறுகிறார்... பேனாவை பிடித்தால் வாசிக்க துாண்டும் கவிதைகளை படைக்கிறார்... துாரிகையை எடுத்தால் கண்களை கவரும் ஓவியங்களை வரைந்து தள்ளுகிறார்... 11ம் வகுப்பு மதுரை மாணவி ஜெயஸ்ரீமீனாட்சி.
''பெற்ற தாய் கைவிடினும் தமிழ்த்தாய் கைவிட மாட்டாள் என்றார் கவியரசு கண்ணதாசன். பொழுது போக்குவதற்காக படிக்கும் புத்தகங்கள் தான் நமது மனப்பழுதை நீக்குபவையாக உள்ளன. மனதின் கிழிசல்களை சீராக்குபவைகளாக புத்தகங்கள் விளங்குகின்றன,'' என சென்னையில் நடந்த புத்தக கண்காட்சியில் இவரது உரையை கேட்டு எழுந்த கைத்தட்டல்கள் அடங்க ஓரிரு நிமிடங்களாகின.
பட்டிமன்றம் பேச துவங்கிய இரண்டு ஆண்டுகளிலேயே இருபதுக்கும் மேற்பட்ட மேடைகள் ஏறியிருக்கிறார். புத்தகத்திருவிழாக்கள், கோயில் உற்ஸவ மேடைகளில் இவரது சொற்பொழிவு இடம் பெற துவங்கியிருக்கிறது.
ஜெயஸ்ரீமீனாட்சி கூறியது...
அப்பா அருணாசலம் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் ஒன்றில் துணை தலைவராக உள்ளார். அம்மா கார்த்திகா ஆசிரியையாக பணிபுரிந்தார். தற்போது மேடை பேச்சாளராக தமிழ் சேவையாற்றி வருகிறார். தாத்தா அருணன் அருணோதயம் என்ற புத்தக பதிப்பகம் நடத்தினார். அவர் தான் நம்மை வாழ வைக்கும் தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.
அம்மாவும் பட்டிமன்றம், தமிழ் இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று வருவதால் இயல்பாகவே எனக்கும் தமிழ் ஆர்வம் தொற்றிக் கொண்டது.
சில ஆண்டுகளுக்கு முன் 'மை லைப் இன் புல் ஒர்க்' என்ற இந்திராநுாயி எழுதிய புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. அது தான் என் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தோற்றுவித்தது.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கவியரசர் கண்ணதாசன் பிறந்த சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் நடந்த அவரது பிறந்தநாள் விழாவில் என் பட்டிமன்ற அரங்கேற்றம் நடந்தது. அதில் என் பேச்சை கேட்டவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பேச அழைப்பு விடுத்தனர்.
பள்ளியில் படித்து கொண்டே மாலை நேரங்களில் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கும் கோயில் திருவிழாக்களில் பங்கேற்று பேசி வருகிறேன். பட்டிமன்ற நாயகர் பேராசிரியர் சாலமன் பாப்பையாவை நடுவராக கொண்ட பட்டிமன்றத்தில் பேச வேண்டும் என்ற வேட்கை உள்ளது. விரைவில் அதற்காக வாய்ப்பை இறைவன் அருள்வார் என்ற நம்பிக்கையுள்ளது.
சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் என் பேச்சை கேட்டு இயக்குனர் முத்துராமன் பாராட்டியதை வாழ்க்கையில் மறக்க முடியாது.
கிடைக்கும் ஓய்வு நேரங்களில் பென்சில் ஓவியங்கள் வரைந்து வருகிறேன். அம்மாவும், குழந்தைக்குமான பிணைப்பை விளக்கும் தாய்மையை போற்றுவோம் உள்ளிட்ட பல்வேறு கவிதைகளை எழுதியிருக்கிறேன். பள்ளியில் மாணவர் சங்க துணை தலைவராகவும் உள்ளேன். ஓய்வு நேரங்களில் பாட்டு கேட்பது பிடிக்கும். என் கவிதைகளை தொகுப்பாக வெளியிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
நாம் பேசி நான்கு பேர் ரசிக்கிறார்கள். அதை கேட்டு சிலர் தங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக்கி கொள்கிறார்கள் என்றால் சந்தோஷம் தானே. அதுவும் ஒரு சேவை தானே. எனவே கேட்பவர்கள் ரசிக்கும் வகையில் சிறந்த பேச்சாளராக வேண்டும். அத்துடன் சிறந்த சார்டட் அக்கவுண்ட் ஆகவும் வேண்டும். இதுதான் என் லட்சியம் என்றார்.

