/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
நாடகத்தில் பபூன் நிஜ வாழ்க்கையில் ஹீரோ
/
நாடகத்தில் பபூன் நிஜ வாழ்க்கையில் ஹீரோ
ADDED : அக் 27, 2024 10:48 AM

நாடகத்தில் பபூனாக நடித்து நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக வலம் வரும் நாடக நடிகர் எம்.கே.ராதாகிருஷ்ணன் ஏழைகளுக்காக சொந்தமாக வீடுகளை கட்டிக் கொடுத்து ஆதரவற்றோருக்காக அன்பாலயம் என்ற இல்லம் நடத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கள்ளிசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.கே.ராதாகிருஷ்ணன். நாடகத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக விருதுநகர் மாவட்டம் வீரஆலங்குளத்தைச் சேர்ந்த நாடக வாத்தியார் எஸ்.எஸ்.மணியிடம் நாடகக் கலையை கற்று 17 வயதிலேயே நாடகத்தில் நடித்தார்.
ஆரம்ப காலத்தில் இவரது பபூன் கதாபாத்திரம் சரியில்லை என ஒரு சில ஊர்களில் சம்பளத்தை குறைத்து கொடுத்துள்ளனர். தாத்தா முனியாண்டி கோடாங்கியாக இருந்ததை தொடர்ந்து அதனை வைத்து நாடகத்தில் புதுவிதமாக காமெடிகளை செய்தார். நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அதே பாணியில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று நாடகம் நடத்தினார்.
ஆரம்பத்தில் வறுமையில் வாடிய இவருக்கு, நாடகத்தால் வருமானம் கிடைத்ததும் ஏழைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், நலிந்த நாடக கலைஞர்களுக்கும் உதவ வேண்டும் என எண்ணம் ஏற்பட்டது. தாயின் சொந்த ஊரான திருச்சுழி அருகே நொச்சிகுளத்தில் 2 ஏக்கரில் அன்பாலயம் ஆதரவற்றோர் இல்லத்தை துவங்கி 50க்கும் மேற்பட்டவர்களை கவனித்து வருகிறார். அங்கு 25 லட்சம் செலவில் 4 ஏழை குடும்பங்களுக்கு புதிய வீடுகளையும் கட்டி வருகிறார். நாடகத்தில் பபூனாக இருந்து நிஜ வாழ்வில் ஹீரோவாக வாழ்ந்து கொண்டிருக்கும் எம்.கே.ஆர்., எனப்படும் எம்.கே. ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மாதத்தின் 30 நாட்களும் எனக்கு நாடக நிகழ்ச்சி உள்ளது. வருமானம், ரசிகர்களின் நன்கொடையை கொண்டு ஆதரவற்றவர்கள், ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு ஊர்களில் வீடு கட்டிக் கொடுத்து வருகிறேன்.
நாடகத்தின் மூலம் கிடைத்த புகழை வைத்து நளனும் நந்தினியும், காரி, தமிழ் குடிமகன், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்., திரைப்படங்களிலும் நடித்தேன். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் கலை நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன்.
மனைவி ராணி எனக்கு உறுதுணையாக இருந்து அன்பாலயத்தில் உள்ளவர்களுக்கு சமைத்துக் கொடுப்பதோடு, நான் இல்லாத நேரங்களில் அவர்களை கவனித்துக் கொள்வார் என்றார்.
வாழ்த்த 96596 62482.