
'இந்த கல்வெட்டில் மிக முக்கியமான விஷயம் உள்ளது. 'மதுரை கொண்ட கோப்பரகேசரி' என குறிப்பிட்டுள்ளது. அது யார் என்றால் முதலாம் பராக்கிரம சோழர். இவர்தான் பாண்டிய மன்னர்களை எதிர்த்த முதல் சோழ மன்னர்' என இப்படி வரலாற்று தொடர்பான தகவல்களை கல்வெட்டு எழுத்துக்களை படித்து கூறி வருகிறார் மனோஜ் முருகன்.
கடந்த 2 ஆண்டுகளாக கல்வெட்டுகளை படித்து சில நிமிட தகவலாக மக்களுக்கு கொண்டு போய் சேர்த்து வருகிறார் இந்த 28 வயது இளைஞர். படித்ததோ சிவில் இன்ஜினியரிங். ஆனால் அதற்கு சம்பந்தமில்லாத கல்வெட்டு துறையில் கால் பதித்திருக்கிறார். 'எல்லாம் ஆர்வம்தான் காரணம்' என தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேச ஆரம்பித்தார்.
''நான் தேனிக்காரன். சிறு வயது முதலே மன்னர்களின் வரலாறு குறித்து ஆர்வமாக படிப்பேன். அதுகுறித்து படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் வழிகாட்ட ஆளில்லாததால், பெற்றோர் விருப்பப்படி சிவில் இன்ஜினியரிங் படித்தேன். பிறகு என் விருப்பப்படி கல்வெட்டுகளை படிக்க ஆரம்பித்தேன். நான் யாரிடமும் பயிற்சி பெறவில்லை. கல்வெட்டுகளை படியெடுத்தும் படிக்கவில்லை. புத்தகங்களை வைத்து கல்வெட்டுகளை படித்து இரண்டையும் ஆய்வு செய்து படிக்க ஆரம்பித்தேன்.
முதன்முதலாக தேனி பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் உள்ள மாயாபாண்டீஸ்வரர் கோயில் கல்வெட்டுகளை வாசிக்க பழகினேன். பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களில் படிக்க ஆசைப்பட்டேன். ஆனால் மாலிகாப்பூர் படையெடுப்பின்போது பெரும்பாலான கல்வெட்டுகள் அழிக்கப்பட்டுவிட்டன. பல சிதைந்துவிட்டன என்பதை அறிந்து, கோயில் முழுவதும் கல்வெட்டுகள் உடைய தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று படிக்க ஆரம்பித்தேன்.
இங்குள்ள கல்வெட்டு தகவல்கள் குறித்து புத்தகங்களாக வந்துவிட்டன. அதை படிக்க மக்களுக்கு நேரமும் ஆர்வமும் இல்லை. அதையே சில நிமிட தகவலாக சமூகவலைத்தளம் மூலம் சொல்லி பார்த்தேன். மக்கள் கேட்க ஆரம்பித்தார்கள். இன்று அதுவே என் வேலையாகிவிட்டது. தினமும் ஒரு கோயிலுக்கு சென்று அங்குள்ள கல்வெட்டுகளை படித்து கூறி வருகிறேன்.
கல்வெட்டுகளில் 3 வகை எழுத்துகள் வடிக்கப்பட்டிருக்கும். சோழர் கால கல்வெட்டுகள் தமிழ் எழுத்துகள், பாண்டியர், சமணர் கால கல்வெட்டுகளில் வட்டெழுத்துகள். பல்லவர் கால கல்வெட்டில் கிரகந்த எழுத்துகளுடையது. இன்று அதிகமாக இருப்பது தமிழ் எழுத்து உடைய சோழர் கால கல்வெட்டுகள்தான்.
தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழன் காலத்தில் பணிமகன் என்பவர் வெண்கல தட்டு ஒன்றை கொடுத்ததைகூட கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார். சில இடங்களில் ஊர் பெயர், கோயில் சுவாமி பெயர் மாறுபடுகின்றன. உதாரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் கோயிலை மக்கள் முதுகுந்தீஸ்வரர் கோயில் என்கின்றனர். ஆனால் கல்வெட்டுகளில் முதுகுன்றம் உடைய நாயனார் என குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியகுளம் மேல்மங்கலம் மாயா பாண்டீஸ்வரர் கோயிலை கல்வெட்டில் மாயமான் ஈஸ்வரமுடைய நாயனார் என குறிப்பிட்டுள்ளனர். இப்படி தினமும் பல விஷயங்கள் கல்வெட்டுகள் மூலம் அறிந்து சொல்லி வருகிறேன்.
இதுதவிர வரலாற்று பயணமாக விருப்பமுள்ளவர்களை மாதம் ஒரு கோயிலுக்கு அழைத்துச்சென்று அதன் சிறப்புகள், வரலாற்று ஆவணங்கள் குறித்து தெரியப்படுத்தி வருகிறேன். இதற்காக முதல் வாரமே சென்று சம்பந்தப்பட்ட கோயில் விபரங்களை அறிந்து வந்துவிடுவேன்.
நம் மன்னர்கள் தமிழகத்தை தாண்டி எங்கு படையெடுத்து சென்றார்களோ அங்கெல்லாம் சென்று அங்குள்ள தகவல்களை மக்களுக்கு சொல்ல உள்ளேன்'' என்கிறார் இந்த கல்வெட்டு கதைசொல்லி.
இவரை வாழ்த்த 99522 77584

