/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
உறவுகளுக்கு உயிர் கொடுக்கும் ஓவியர்
/
உறவுகளுக்கு உயிர் கொடுக்கும் ஓவியர்
ADDED : ஆக 10, 2025 04:48 AM

இ ரும்பு துாண்களை பிடித்த கைகள் இன்று துாரிகைபிடிக்கின்றன. லேத் பட்டறையில் துவங்கிய வாழ்க்கை ஓவிய பட்டறையில் பரிவட்டம் சூடிக்கொண்டது. இவரது ஓவியங்களில் ஆத்மார்த்த அர்ப்பணிப்பு இருக்கிறது. இதனால் இன்று பலரது வீடுகளில், உறவுகள் உயிர்ப்புடன் ஓவியங்களில் ஆசீர்வதித்து கொண்டிருக்கிறார்கள். 'இதற்கெல்லாம் காஞ்சி மஹாபெரியவர் ஆசிதான் காரணம்' என்கிறார் 53 வயதான ஓவியர் சிவபாதம்.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்...
நான் சென்னைகாரன் குரோம்பேட்டையில் வசிக்கிறேன். மனைவி கற்பகம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். எங்கப்பா லேத் பட்டறை வைத்திருந்தார். அதை 1991 முதல் நான் ஆட்களை வைத்து நடத்தினேன். ஓவியத்திற்காக அந்த தொழிலை விட்டுவிட்டேன். சின்ன வயசில் சுவாமி ஓவியங்கள் வரைவேன். அதற்கு என் அம்மா லட்சுமிதான் முதல் ரசிகை. நான் வரைந்த அம்மன் ஓவியத்தை பூஜித்து வந்தார். நண்பர்கள் பலர், ஓவியம் வரைந்து தர கேட்பர். எனக்கு அப்போது ஆர்வம் இல்லாமல் இருந்தது.
51 வயதில் என் வாழ்வில் காஞ்சி மஹா பெரியவா மூலம் மாற்றம் ஏற்பட்டது. நண்பர் கிரகப்பிரவேசத்திற்கு மஹா பெரியவா படம் வரைந்து தர கேட்டார். ஆயில் பெயின்டிங்கில் வரைந்து கொடுத்தேன். அது நல்லா 'ரீச்' ஆச்சு. இதுவரை 6 விதமாக 19 ஓவியங்களாக மஹா பெரியவரை வரைந்துள்ளேன்.
நான் யாரிடமும் பயிற்சி பெற்ற தில்லை. ஓவியம் குறித்த சந்தேகங்களை நான் குருவாக மதிக்கும் புதுக்கோட்டை ஆனந்த் சி.கே. வர்மாவிடம் கேட்பேன். என் மானசீக குரு நடிகர் சிவக்குமாரிடம் படம் வரைந்து காண்பிப்பேன்.
புகைப்படமா, ஓவியமா என குழம்பும் வகையில் தத்ரூபமாக வரைந்து மக்கள் கவனத்தை ஈர்த்து மறைந்த ஓவியர் இளையராஜா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு சென்றபோது அவரது குடும்பத்தினர் அறிமுகம் கிடைத்தது. நான் இளையராஜாவை பார்த்தது இல்லை. அவரது மனைவி ப்ரியா இன்று என் மகள் போல் இருக்கிறார். இப்படி உறவுகளை உருவாக்குவதும், உயிர்ப்புடன் வைத்திருப்பதும் ஓவியங்கள்தான்.
கொரோனோ காலத்தில் இறந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஓவியத்தை வரைந்து நண்பரிடம் காண்பித்தேன். எஸ்.பி.பி., மகன் சரணிடம் அழைத்துச்சென்றார். ஓவியத்தை பார்த்து சரண் பரவசம் அடைந்தார். முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு, தனது தாயுடன் இருப்பது போல் வரைந்த ஓவியத்தை அவரது சொந்த ஊர் வீட்டில் மாட்டியுள்ளார். முன்னாள் டி.ஜி.பி., நட்ராஜ், மனைவியுடன் இசைக்கருவி இசைப்பது போல் வரைந்து கொடுத்தேன். பல வி.ஐ.பி.,க்களும் விருப்பங்களை கூறி ஓவியங்களை பெற்றுச்செல்கிறார்கள்.
நான் வாட்டர் கலரில் வரைந்து கொடுத்த ஷ்ர்டி சாய்பாபா ஓவியம், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு பரிசாக கொடுக்கப்பட்டது. என் ஓவியத்தை பாராட்டி, 'நான் வாழ்த்து தெரிவித்ததாக கூறுங்கள்' என என்னிடம் கூற சொல்லியது என் வாழ்வில் நான் செய்த பாக்கியம்.
நான் வரைந்த ஓவியங்களிலேயே, உருவாக்க 25 நாள் ஆனது ஜல்லிக்கட்டுதான். தத்ரூபமாக வரைய நாட்கள் எடுத்துக்கொண்டேன். அந்த ஓவியம் சென்னை எழும்பூர் மியூசியத்தில் மாநில ஓவிய கண்காட்சியில் இடம் பெற்றது. இன்று ஏ.ஐ., டிஜிட்டல் ஆர்ட் என தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் கையால் வரையும் ஓவியங்களுக்கு உயிரோட்டம் இருக்கிறது. அதனால்தான் வெளிநாடுகளில் இருந்து சுவாமி படங்களோடு, மறைந்த அவர்களின் உறவுகளையும் ஓவியமாக வரைந்து தர கேட்கின்றனர்.
தமிழகத்தில் ஓவியம் மீதான ஆர்வம் குறைவு. ஆனால் பெங்களூருவில் இதற்காகவே ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஞாயிறு அன்று கர்நாடகா அரசும், சித்ரகலா பரிஷத் என்ற அமைப்பும் சேர்ந்து ஓவிய கண்காட்சியை நடத்துகின்றன. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து ஓவியர்களும் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்துவார்கள். 5 லட்சம் மக்கள் வரை கூடுவார்கள். விற்பனையும் களைகட்டும்'' என்கிறார் சிவபாதம்
இவரை வாழ்த்த 98417 15054