/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
வளம் தருமே வாழைப்பூ கவிதாவின் 'ஸ்டார்ட் அப்' அனுபவங்கள்
/
வளம் தருமே வாழைப்பூ கவிதாவின் 'ஸ்டார்ட் அப்' அனுபவங்கள்
வளம் தருமே வாழைப்பூ கவிதாவின் 'ஸ்டார்ட் அப்' அனுபவங்கள்
வளம் தருமே வாழைப்பூ கவிதாவின் 'ஸ்டார்ட் அப்' அனுபவங்கள்
ADDED : ஆக 10, 2025 04:47 AM

பி றந்தவீடு, புகுந்த வீடு விவசாய குடும்பமாக இருந்தாலும் தொழில்முனைவோராக உருவாகி ஏற்றுமதிக்கான அடுத்த அடியையும் எடுத்து வைத்துள்ளார் ஈரோடு கொடுமுடியைச் சேர்ந்த கவிதா.
விவசாய குடும்பத்தில் பிறந்தால் விவசாயம் மட்டும் தான் செய்ய வேண்டுமா... அதைத் தாண்டி சாதிக்க முடியும் என தனது 'ஸ்டார்ட் அப்' தொழில் பயண அனுபவத்தை விவரித்தார். அவர் கூறியது:
ஈரோடு கொடுமுடி வெள்ளோட்டம் பரப்பு எனது ஊர். நகரத்தில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க சென்றாலும் விடுமுறையில் எனது வாசம் தோட்டத்தில் தான் இருந்தது. மஞ்சள், கரும்பு, வாழை என அப்பா குப்புசாமி விவசாயம் செய்வதை பார்த்து வளர்ந்தேன். கணவர் கிருஷ்ணபாபு சிவில் இன்ஜினியர், தனியாக பிசினஸ் செய்கிறார். என்னை ஊக்கப்படுத்தி ஈரோட்டில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் அமைக்க உதவினார். தொடர்ந்து எட்டாண்டுகள் நடத்தி வந்த நிலையில் கல்லுாரிகளிலேயே இப்பாடத்திட்டம் வந்ததால் மாணவர் சேர்க்கை குறைந்தது. தொழிலை மாற்றி நிரந்தரத் தொழில் செய்ய நினைத்தேன். கணவரின் தந்தை சண்முகம் இறந்தபின் மஞ்சள், வாழை விவசாயத்தை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஏற்பட்டது.
வாழையடி வாழை விவசாயம் செய்ய தொழிலாளர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விவசாயம் நிரந்தர வருமானம் தரும் என்றாலும் கவனிக்காமல் விட்டால் கைநஷ்டம் ஏற்படும். சில சிக்கல்களை சந்தித்த போது வாழைப்பூ பிசினஸ் செய்யலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது. எனது ஆர்வத்திற்கு ஏற்ப பிசினஸ் பார்ட்னர் ரமேஷ் கிடைத்தார். இருவரும் மூன்றாண்டு ஆராய்ச்சியில் பொருட்களை தயாரித்து நாங்களே பயன்படுத்தி பார்த்தோம்.
வாழைப்பூவில் சத்துகள் உள்ளன. ஆனால் ஊறுகாய் தவிர வேறு மதிப்பு கூட்டிய பொருள் யாரும் தயாரிக்கவில்லை. அது எங்களுக்கு தைரியம் தந்தது. திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் தொழில்நுட்ப உதவி செய்தனர். வயதானவர்கள் மட்டுமே வாழைப்பூ சாப்பிடுவதை மாற்ற நினைத்து குழந்தைகளைக்கவர வாழைப்பூ மால்ட் தயாரித்தோம். பாலில் கலந்து குடிக்கலாம். வாழைப்பூ தொக்கு, வாழைப்பூ பருப்புபொடி, வாழைப்பூ நவரா வடகம் தயாரித்தோம். நவரா பாரம்பரிய அரிசி, எளிதில் ஜீரணமாகும். கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சையில் நவரா பயன்படுத்துகின்றனர்.
ஈரோடு, கோபிசெட்டி பாளையம் வரை 120 விவசாயிகளிடம் வாழைப் பூ, தண்டு கொள்முதல் செய்கிறோம். இதனால் விவசாயிகளுக்கு தொடர் வருமானம் கிடைக்கிறது.
பெண்களுக்கும் வேலை ஒரு விவசாயியிடம் மாதத்திற்கு 800 - 5000 வாழைப்பூக்கள் வரை கிடைக்கும். வாழைப்பூ சுத்தம் செய்வது பெரிய வேலை. 40 வயது கடந்த காட்டு வேலைக்கு செல்ல முடியாத கிராமத்து பெண்களுக்கு இந்த வேலை எளிதாக இருக்கிறது. நிழலில் உட்கார்ந்த படி பூவை பிரித்து தருகின்றனர். சில நேரங்களில் 'ஜாப் ஆர்டர்' போல வீட்டுக்கு கொடுத்து அனுப்புகிறோம்.
சோலார் டிரையர் மாடியில் 450 சதுர அடிசோலார் டிரையர் உள்ளது. 60 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சுத்தம் செய்த வாழைப்பூக்களை உலர்த்தினால் சத்துகள் வீணாகாது. ஒரே நேரத்தில் 500 கிலோ வரை இம்முறையில் உலர்த்தலாம். எங்களின் மூன்றாண்டு உழைப்புக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்து உலக மார்க்கெட்டை பிடிக்கும் வகையில் ஏற்றுமதிக்கான வேலைகளை துவங்கியுள்ளோம். விவசாயம் நஷ்டமான தொழில் என அடுத்த தலைமுறையினர் வெளியேறுகின்றனர். விவசாயத்தை கைவிடாமல் விளைபொருளை மதிப்பு கூட்டினால் லாபம் ஈட்ட முடியும் என்றார்.
மேலும் அறிய 94427 68484