ரூ.25 ஆயிரம் முதலீட்டில் நிறைவேற போகிறது ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு!
ரூ.25 ஆயிரம் முதலீட்டில் நிறைவேற போகிறது ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு!
UPDATED : மே 03, 2026 08:46 AM
ADDED : மே 03, 2026 05:06 AM

''முதலீடு என்பது பணம் மட்டுமல்ல; செலவிடும் நேரமும், அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் சேர்ந்தது,'' என அழகாக சொல்கிறார், கோவையைச் சேர்ந்த 23 வயது இளம் சாதனையாளர் நிவேதா.
திருப்பூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் வளர்ந்த நிவேதாவுக்கு, கல்லுாரியில் படிக்கும்போதே தொழில்முனைவோர் ஆக ஆசை வந்தது. 25 ஆயிரம் ரூபாயோடு ஐந்து ஆண்டுகளுக்கு முன் களமிறங்கினார்.
தன்னம்பிக்கையும், முயற்சியும் கைகொடுக்க தற்போது, இவர் ஆண்டுக்கு ரூ.10 கோடி வருமானம் ஈட்டும், 'கோவை சோர்ஸ் பிளிஸ்' நிறுவனத்தின் நிறுவனர்!
ஆரம்பத்தில் டில்லி, மும்பை வீதிகளில் அலைந்து திரிந்து பொருட்களை வாங்கி இ-காமர்ஸ் தளங்களில் விற்பனை செய்தார்.
சில தவறான முடிவுகளால் பணத்தை இழந்தாலும், அந்த அனுபவங்களே பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுத்தன.
இன்று சோர்ஸ் பிளிஸ் நிறுவனத்தின் மூலம், பெய்ஜிங் முதல் குவாங்சூ வரை உள்ள உற்பத்தியாளர்களை, இந்திய தொழில்முனைவோருடன் இணைக்கும் பாலமாக மாறி நிற்கிறார் நிவேதா.
''சீன பொருட்கள் என்றால் தரம் குறைவு என்பது ஒரு தவறான பிம்பம். சீனாவில் எல்லாத் தரத்திலும் பொருட்கள் கிடைக்கின்றன. தரம் என்பது அவர்கள் தயாரிப்பதில் இல்லை, நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. அதைச் சரியாகத் தேர்வு செய்து இறக்குமதி செய்ய நாங்கள் வழிகாட்டுகிறோம்,'' என்று ஒரு பிசினஸ் எக்ஸ்பர்ட் ஆக பேசுகிறார்.
திருமணமாகாத ஒரு பெண் தனியாக வெளிநாடுகளுக்குச் செல்வதா, தொழில் என்று அலைவதா, என்ற சமூகத்தின் கேலிப் பேச்சுகள் நிவேதாவைத் துரத்தின.
அத்தனையில் இருந்தும் தன்னை மீட்டு வந்தது குடும்பத்தின் ஆதரவுதான் என்கிறார் கண்கள் பனிக்க.
-ஜோ.மாதவி
