ADDED : டிச 22, 2024 01:19 PM

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர்கள் போஸ் - ராமுத்தாய் தம்பதி. அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். வீட்டில் 200க்கும் மேற்பட்ட செடிவகைகளை வளர்த்து வீட்டையே குளு குளுவென மாற்றியமைத்துள்ளனர்.
மூலிகைச்செடிகள், அழகுக்கான செடிகள், பழச்செடிகள், பூச்செடிகள் என ரக வாரியாக செடிகளை வளர்த்து வருகின்றனர். சாதாரண சளி, காய்ச்சல், இருமலுக்கு மருத்துவமனைக்கு செல்கிறோம். ஆனால் தம்பதியினருக்கு நோய்களுக்கு இயற்கை வைத்தியம் தான்.
இருமல் என்றால் துாதுவளை செடி இலைகளை அரைத்து கஷாயம் வைத்து அருந்துகின்றனர். ஞாபக சக்தி வளர வல்லாரை கீரையை உணவில் சேர்த்து கொள்கின்றனர். வாசனை திரவியம் வேண்டுமானால் வாசனை செடியின் இலையை கைகளால் கசக்கி சட்டையில் தேய்த்து கொள்கின்றனர்.
தம்பதியினர் கூறியதாவது: பணிக் காலம் முழுவதும் வாடகை வீட்டில் தான் இருந்தோம். அதனால் தோட்டம், செடிகள் வளர்க்க வாய்ப்பே அமையவில்லை. சொந்த வீடு கட்டும் போது தோட்டம் அமைத்து செடிகள் வளர்க்க வேண்டும் என ஆசை. குறைந்த பரப்பளவில் வீட்டை அமைத்து விட்டு மீதி இடத்தில் விசாலமான தோட்டம் அமைத்தோம், வாசலில் வெற்றிலை, செம்பருத்தி, துளசி போன்ற வகைகளை நட்டோம்.
தொட்டியில் வல்லாரை, துாதுவளை, திப்பிலி, ஓமவள்ளி, ரணகள்ளி உட்பட மூலிகை வகைகளை வளர்த்து வருகிறோம். 200 வகையான செடிகள் உள்ளன. திருப்புவனத்தை சுற்றியுள்ள சித்த மருத்துவமனைகளில் இருந்து மூலிகை செடிகளை வாங்கி செல்கின்றனர். எங்கள் ஏரியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல்நிலை சரியில்லை என்றால், வீட்டிற்கு வந்து மூலிகை செடி வாங்கி கஷாயம் வைத்து அருந்துவார்கள்.
வீட்டில் மரங்கள் இருந்தாலே பூச்சி, புழு வரும்; இலை உதிர்ந்து குப்பை சேரும் என வெட்டி அழிப்பவர்கள் மத்தியில், அன்றாட வாழ்விற்கு பயன்படவும், அழகிற்காகவும் செடிவகைகளை வீடு முழுவதும் வளர்த்து அருமையாக பராமரித்து வரும் தம்பதியினரை பாராட்டுவோம்.
மேலும் அறிய அலைபேசி 78679 60961