
தமிழ் புலமையால் சிறப்பு பெற்று திரைப்பட உதவி இயக்குனராகி, வாழ்க்கை பயணத்தை தொடர கிடைத்த வாய்ப்பைஎல்லாம் பயன்படுத்தி சவால்களை படிகளாக மாற்றி 'ஈவன்ட் மேனேஜ்மென்ட்' துறையில் தனக்கென ஓர் அடையாளத்தை பதித்துள்ளார் ஜாஸ்மின்.
தற்போது சென்னையில் இருந்தாலும் பிறந்தது முதல் கல்லுாரி முடித்தது வரை மதுரைதான். இயற்பியல் துறை பட்டதாரியான இவர் ஆரம்பத்தில் மதுரையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். பள்ளி, கல்லுாரி காலத்திலிருந்தே தமிழில் கட்டுரை, கதை எழுதுதலில் ஆர்வம் கொண்ட ஜாஸ்மினிற்கு கொரோனா காலத்தின்போது சில ேஷாக்களுக்கு கருத்துரை எழுதும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது நல்ல வரவேற்பை கொடுத்தது.
இதன் மூலம் சினிமா சார்ந்த வாய்ப்புகளுக்கு அழைப்பு வந்தது. ஆனால் சென்னைக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டினர். பெற்றோரை சமாதானப்படுத்தி ஒரு நம்பிக்கையோடு சென்னை சென்ற ஜாஸ்மின் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினாலும் கிடைத்த வருமானம் போதவில்லை. விடுதி அறை, உணவு உள்ளிட்ட தேவைகளுக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. ஆனால் வீட்டிலும் கேட்க முடியாத சூழல்.
சினிமாவில் எழுத வேண்டுமென்ற எண்ணம் மட்டும் மனதில் ஓடிக்கொண்டிருக்க நண்பர்கள் மூலமாக, நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் தொழிலை பகுதி நேரமாக தொடங்கினார். முதலில் ஒரு பிறந்த நாள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து ரூ.2000 சம்பாதித்தார். அதுதான் அடுத்த முயற்சிக்கான விதையாகவும் மாறியது.
உதவி இயக்குநர் பணி போக அடிப்படை தேவைக்காக தொடங்கிய ஒரு பயணம் வாழ்க்கையை மாற்றிய பயணமாக மாறியிருக்கிறது. இப்போது பன்னாட்டு நிறுவனங்கள், இசையமைப்பாளர் நிகழ்ச்சிகள் என நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்து வருகிறார். பல முன்னணி ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களுக்கு இணையாக இவரும் நிறுவனத்தை பெரிதுபடுத்தி அசத்தி வருகிறார். இதன் வாயிலாக சிறந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
விளம்பரங்கள், வெப்சீரிஸ், படங்களின் கதைகள் கலந்தாலோசனை, கதை எழுதுதல் என இருந்தாலும் உதவி இயக்குநர் என்ற ஆசைகொண்ட லட்சியத்தை நோக்கியும் தொடர்ந்து பயணித்து வருகிறார்.
ஜாஸ்மின் கூறியதாவது: ஒரு நிகழ்ச்சியில் பேச, கையில் பணம் இல்லாமல் நடந்தே சென்று வர வேண்டிய நிலை இருந்தது. அப்போதுதான் பணத்தின் அவசியத்தை புரிந்து கொண்டேன். அதுதான் திடமாக என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. பெண்கள் தொழில் முனைவோராக மாற வேண்டும். என்னுடைய நிறுவனத்தில் நான் மட்டுமே பெண். குறைந்த பட்சம் 5 பெண்களையாவது தொழில்முனைவோராக மாற்ற என்னால் ஆன முயற்சியை மேற்கொள்வேன் என்றார்.
நமக்கு தெரிந்தோ தெரியாமலோ வாழ்க்கை ஏதாவது ஒரு செய்தியை சொல்லிக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கும். இதைசரியான விதத்தில் கற்றுக்கொண்டு கடைபிடித்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாய் விளங்கும் ஜாஸ்மின் இன்னும் வெல்வார்.