ADDED : ஜூலை 05, 2026 09:13 AM

பள்ளியில் கபடி விளையாட்டில் துவங்கி ஜூடோ, பாடிபில்டிங்கில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார் 23 வயதான சக்தீஸ்வரி. ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த தேங்காய் வியாபாரி நாகரத்தினம்-, லோகம்மாள் தம்பதியரின் மகளான சக்தீஸ்வரி ஜூடோவில் மாநில அளவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
பெண்கள் எந்த துறையிலும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார்.
தினமலர் நாளிதழ் சண்டே ஸ்பெஷலுக்கு அவரது பேட்டி: தங்கச்சிமடம் அரசு பள்ளியில் படித்த போது கபடி நன்றாக விளையாடுவேன். அதை பார்த்த உடற்கல்வி ஆசிரியர் கஜேந்திரன் குமார் ஜூடோ விளையாட அறிவுறுத்தினார். ஜூடோ விளையாட்டு ஜப்பான் போன்ற நாடுகளில் பிரபலமானது. ஆரம்பத்தில் அதன் விதிமுறை, சண்டை நுட்பங்கள் பார்க்கும் போது பயமாக இருந்தது. நமது நாட்டில் அதற்கான கட்டமைப்பு இல்லாததால் மணல் பரப்பில் விளையாட சிரமமாக இருந்தது.
ஆனால் உரிய பயிற்சி எடுத்து சில போட்டிகளில் பங்கேற்ற பின் எளிதாக விளையாட முடிந்தது. என்னை பார்த்து நிறைய பேர் விளையாட ஆரம்பித்தனர். சிறிய அளவிலான போட்டி முதல், முதல்வர் கோப்பை, கேலோ இந்தியா என பல்வேறு போட்டிகளில் வென்றுள்ளேன். போட்டிகளில் பங்கேற்பதே சிறந்த அனுபவத்தை தரும் என்பதால் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்பதில் உறுதியாக இருப்பேன். 2025 ஓபன் ஸ்டேட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தது.
பாடி பில்டிங்
ஜூடோ விளையாடும் போது உடல் வலுவாக 16 வயது முதல் தினமும் உடற்பயிற்சி செய்ய ஜிம் செல்ல ஆரம்பித்தேன். அப்போது ராமநாதபுரத்தில் நடந்த ஓபன் ஏசியா பாடி பில்டிங் போட்டியில் பங்கேற்று வெண்கலம் வென்றேன். பின் உடலமைப்பை மேம்படுத்துவதில் ஆர்வம் அதிகரித்தது. சென்னையில் நடந்த பெண்களுக்கான டபிள்யூ, எப்.எப்., மாடல் போட்டியிலும் வெண்கலப் பதக்கம் வென்றேன். வயது குறைவாக இருந்ததால் மேற்கொண்டு செல்ல முடியவில்லை.
எனது இலக்கு பெண்களுக்கான பாடி பில்டிங் போட்டியில் சாதிக்க வேண்டும். என்னை போன்று திறமையான பெண்கள் வாய்ப்பு இல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்கு சரியான வழிகாட்ட ஒரு ஜிம் வைக்க வேண்டும். இந்த இரு இலக்கை நோக்கி தற்போது பயணிக்கிறேன். அதற்கான முயற்சியாக உடற்பயிற்சியாளர் சான்றிதழ் பெற சென்னையில் பயின்று வருகிறேன்.
தொடர் முயற்சி
எனது குடும்பத்தில் ஆரம்பத்தில் பெண் எதற்காக சண்டை போடும் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என கேள்விகள் எழுந்தன. எனது வெற்றிகள் மூலம் கேள்விகளை எதிர் கொண்டேன். எனது பெற்றோரும் நம்பிக்கை கொடுத்தனர். அவர்கள் அளித்த ஊக்கத்தினால் தான் அடுத்தடுத்த கட்டத்திற்கு எளிதாக செல்ல முடிகிறது.
ஒவ்வொருவருக்கும் தனித்திறமை இருக்கிறது. முயற்சி செய்தால் தான் அது வெளிப்படும். பெற்றோர் பெண்களை தயங்காமல் வெளியே அனுப்ப வேண்டும். பெண்கள் தங்களை நிரூபிக்க அனுமதிக்க வேண்டும். பெண்களும் தங்கள் கனவுகளை அடைய தைரியமாக முன்னே வர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நான் உடைந்து போய்விடவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தேன். இனியும் பெரிய இலக்குகளை நோக்கி பயணிப்பேன் என்றார்.
instagram: fitness_queen_1_12_19
