/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
'இளம் தொழில் முனைவோருக்கு இந்த நுால் பெரும் பொக்கிஷம்'
/
'இளம் தொழில் முனைவோருக்கு இந்த நுால் பெரும் பொக்கிஷம்'
'இளம் தொழில் முனைவோருக்கு இந்த நுால் பெரும் பொக்கிஷம்'
'இளம் தொழில் முனைவோருக்கு இந்த நுால் பெரும் பொக்கிஷம்'
UPDATED : ஆக 10, 2025 07:41 AM
ADDED : ஆக 10, 2025 02:46 AM

வாசகர்கள் வாசிக்க வேண்டிய நுால்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை, இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் தொழிலதிபர் ஏ.வி.வரதராஜன் எழுதிய, 'கோவை கொடிசியா எனது நினைவலைகள்' என்ற புத்தகம் குறித்து, இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை முன்னாள் தலைவர் நந்தகுமார் தனது வாசிப்பு அனுபவங்களை, பகிர்ந்து கொண்டார். 'கொடிசியா எனது நினைவலைகள்' என்ற இந்த நுாலை எழுதிய, ஏ.வி.வரதராஜன், பொறியாளராக இருந்து தொழில் முனைவோராக மாறியவர்.
அவரது, 66 ஆண்டுகால தொழில் அனுபவத்தில் பல பிரச்னைகளையும், சவால்களையும் சந்தித்து இருக்கிறார்.
கொடிசியாவின் ஆரம்ப காலம் முதல், மற்ற தொழில்கூட்டமைப்புகளோடு இணைந்து, இப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்காக பயணித்தவர்.
குறிப்பாக தொழிற்கண்காட்சிகள் நடத்துதல், தொழிற்காட்சி வளாகம் மற்றும் கொடிசியா தொழிற்பூங்காக்கள் அமைப்பதில், முக்கியமான பங்களிப்பை செய்து இருக்கிறார்.
பஞ்சாலைகள் முதல் இன்ஜினியரிங், மின்னணுவியல் மற்றும் மென்பொருள் வரை பலவகைத் தொழில்கள் எப்படி உருவாயிற்று? இந்த பரிணாம வளர்ச்சிக்கான காரணங்கள், இந்த நுாலில் துல்லியமாக ஆராயப்பட்டுள்ளது.
பம்பு செட் மற்றும் மோட்டார் தயாரிப்பு துவங்கி, இன்றைக்கு உள்ள கிரைண்டர் தொழில் வரை, கோவையின் முக்கிய தொழில்களை பற்றி, வரதராஜன் ஆராய்ந்து எழுதி இருக்கிறார்.
கோவை, 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் சரியான வளர்ச்சி அடையாமல்தான் இருந்தது. ராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேயர், முதல் பஞ்சாலையை கோவையில் துவக்கிய பிறகு மில்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
பல தொழில்முனைவோர் பஞ்சாலைகளை துவங்கினர். பம்புகள் மற்றும் மோட்டார் தொழிற்சாலைகள் எப்படி நிறுவப்பட்டன, இதை சார்ந்து பொருளாதார முன்னேற்றம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்களை, இந்த நுாலில் தெரிந்து கொள்ளலாம்.
கொடிசியா 1969 ல் 50 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டது. இந்த சங்கம் இன்றைக்கு தொழில் முனைவோர்களை உருவாவக்கி இருக்கிறது.
கோவையில் இன்றைக்கு உள்ள கொடிசியா வணிக வளாகம் உருவாக, ஏ.வி.வரதராஜன் எடுத்துக்கொண்ட முயற்சியும், அர்ப்பணிப்பும் இந்த நுாலில் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் தொழில் முனைவோராக வர விரும்பும் இளைஞர்கள், இந்த நுாலை அவசியம் படிக்க வேண்டும்.