/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
உலகத்தில் பிரச்னை இல்லாத மனிதர் இருவர்: லோகநாதனின் 'லோகியிசம்'
/
உலகத்தில் பிரச்னை இல்லாத மனிதர் இருவர்: லோகநாதனின் 'லோகியிசம்'
உலகத்தில் பிரச்னை இல்லாத மனிதர் இருவர்: லோகநாதனின் 'லோகியிசம்'
உலகத்தில் பிரச்னை இல்லாத மனிதர் இருவர்: லோகநாதனின் 'லோகியிசம்'
ADDED : ஜன 07, 2024 11:30 AM

ஒரு விரல் என்ன செய்யும், ஒரு நம்பிக்கை என்ன செய்யும் என கேட்டால் பதில் லோகநாதன் தான். இளம் வயதில் விபத்தில் கழுத்துக்கு கீழ் உடல் செயல்படாமல் போன பின், இனி வாழ என்ன இருக்கிறது என்று நினைக்காமல் நம்பிக்கை ஒன்றையே விரல் பிடித்து நடந்த அவர், மேல்படிப்பு முடித்து மீண்டும் தான் பணியில் இருந்து நின்ற நிறுவனத்திலேயே சேர்ந்து வெற்றி பெற்றார். இன்னும் தாய் கவுரி பராமரிப்பில் வாழ்ந்து வரும் இவர் 'இவன் வேற மாதிரி அல்ல' என்ற புத்தகமும் எழுதி உள்ளார்.
இவர் கூறியதாவது: சொந்த ஊர் கரூர். தற்போது கோவை மாவட்டம் சுகுணாபுரத்தில் வசிக்கிறேன். வயது 40 ஆகிறது. 2006ல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஓபராய் ஐந்து நட்சத்திர ஓட்டலில் செப் ஆக வேலை பார்த்தேன். சிக்னலில் டூவீலரில் நின்று கொண்டிருந்த போது வேன் மோதி என் கழுத்துக்கு கீழ் உடல் இயக்கத் திறனை இழந்தது. ஆனால் நான் மனதளவில் முடங்கவில்லை என உணர்ந்தேன்.நேற்று வரை நன்றாக இருந்த நான், திடீரென உடல் இயக்கமின்றி போன போது வேதனையாக இருந்தது. இருப்பினும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை.
எம்.ஏ., டூரிசம் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்தேன். மீண்டும் வேலை கேட்டு நான் பணிபுரிந்த நிறுவனத்தில் விண்ணப்பித்தேன். அவர்களும் முன் வந்து என்னை சேர்த்துக்கொண்டனர். வீட்டிலிருந்தே பணி. வாட்ஸ் ஆப், இமெயில் அனுப்ப பழகி இருக்கிறேன். வாடிக்கையாளர்களுடன் அலைபேசியில் பேசுவேன். அந்த ஊதியத்தை வைத்து தற்போது வாழ்க்கை நடத்துகிறேன்.
வேலுாரில் எனது உடல் இயக்க பயிற்சி டாக்டர் பிரின்ஸ், உங்கள் வாழ்க்கையை புத்தகமாக எழுதுங்கள் என்றார். அது எனக்கும் பிடித்திருந்தது. அந்த நேரம் 2020ல் கொரோனா ஊரடங்கு வந்தது. கைகள் இயங்காததால் எவ்வாறு எழுதலாம் என யோசித்தேன். ஸ்மார்ட் போனில் பேசி குரல் பதிவு செய்வேன். பின் அதை கேட்டு ஒவ்வொரு எழுத்தாக வலது கை பெருவிரலால் போனில் அழுத்தி பதிவு செய்வேன். தொடர்ந்து இவ்வாறு செய்ய முடியாது என்பதால் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை ஓய்வு எடுத்துக்கொள்வேன். தினசரி 4 முதல் 5 மணி நேரம் எழுதி 144 பக்கம் கொண்ட 'இவன் வேற மாதிரி அல்ல' புத்தகத்தை எழுதி முடித்தேன்.
விபத்தை கேள்விபட்ட எங்கள் நிறுவனத்தார் இன்று வரை எனது மருத்துவ செலவுகளை பார்த்து கொள்கின்றனர். ஆடை மாற்றுவது, சாப்பாடு கொடுப்பது வேலைகளை செய்வது எனது அம்மா தான்.
சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து எனது புத்தகத்தை வாங்கி இருக்கின்றனர். என்னை போல பாதிக்கப்பட்டவர்கள், நேர்மறை எண்ணத்தோடு வாழ்க்கையை எதிர்கொள்ள இப்புத்தகம் நம்பிக்கையூட்டினால் எனக்கு மகிழ்ச்சி. இதன் ஆங்கில மொழிப்பெயர்ப்பு 'லோகியிசம்' என வெளியாகிறது.
அரசுக்கு நான் வைக்கும் கோரிக்கை இனி கட்டும் எந்த அரசு கட்டடத்திலும் வீல்சேர் செல்லும் வசதியோடு கட்ட வேண்டும். கழிப்பறைகளையும் வடிவமைக்க வேண்டும்.
'உலகத்தில் பிரச்னை இல்லாத மனிதர் இருவர். ஒருவர் பிறக்கவில்லை. இன்னொருவர் இறந்துவிட்டார்' என்ற மேற்கோள் எனக்கு மிகவும் பிடிக்கும். பிரச்னையை பார்த்து பயப்படாமல் சவாலாக பார்க்க வேண்டும் என்றார்.