/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
பொம்மை வாங்க போனார்... தொழில்முனைவோர் ஆனார் புதுமைக்கு ஒரு புவனேஸ்வரி
/
பொம்மை வாங்க போனார்... தொழில்முனைவோர் ஆனார் புதுமைக்கு ஒரு புவனேஸ்வரி
பொம்மை வாங்க போனார்... தொழில்முனைவோர் ஆனார் புதுமைக்கு ஒரு புவனேஸ்வரி
பொம்மை வாங்க போனார்... தொழில்முனைவோர் ஆனார் புதுமைக்கு ஒரு புவனேஸ்வரி
ADDED : ஆக 11, 2024 11:44 AM

சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் தொழில் முனைவோராக மாற முடியும் என்பதை கண் முன் காட்டி உலகளவில் தன் பொருட்களை விற்பனை செய்து வருகிறார் பொறியியல் பட்டதாரி புவனேஸ்வரி.
திருச்சியை சேர்ந்த இவர் பள்ளிபடிப்புகளை தமிழகத்தில் தொடர்ந்தாலும், தாய் மைசூர் என்பதால் கல்லுாரி படிப்பிற்கு அங்கு சென்று விட்டார். தொடர்ந்து திருமணம், குழந்தை என வாழ்க்கை சென்று கொண்டிருக்க தனக்கென ஒரு வருமானம் கிடைப்பது தனக்கான சுதந்திரம் என எண்ணினார். அம்மாக்கள் குழந்தைகளை கவனித்து கொள்வது எப்படி என இணையதளங்கள், புத்தகங்கள் மூலமாக அறிந்து அதனை சமூக வலைதளங்களில் கட்டுரைகளாக பதிவிட்டார். இது பெரும் வரவேற்பை கொடுத்திருக்கிறது. முகநுாலில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. கணவர் துபாயில் வேலை பார்த்ததால் புவனேஸ்வரியும் அங்கு செல்லும்படியாகிவிட்டது.
தன் குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் மூலமாக கவனத்தை திருப்ப வேண்டும். அலைபேசி, டிவியில் கவனம் செல்லக் கூடாது என கவனமாக இருந்தார். அதற்காக தொடங்கிய முயற்சி இன்று தொடர் வெற்றி பயணமாக மாறியிருக்கிறது.
மீண்டும் இந்தியா வந்த அவர் தன் குழந்தைக்காக கர்நாடகாவின் சென்னப்பட்டணா சென்று கைவினைக் கலைஞர்களின் விளையாட்டு பொம்மைகளை வாங்கி உள்ளார். அவற்றை தன் குழந்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என சமூக வலைதளங்களில் பதிவிட அதிக வரவேற்பை பெற்றது. பல பெற்றோர்களும் இது குறித்து புவனேஸ்வரியிடம் கேட்க இதையே தொழிலாக மாற்றியிருக்கிறார்.
எந்த பொம்மை குழந்தைக்கு பயனுள்ளதாக, பாதுகாப்பாக, சவாலாக, கிரியேட்டிவிட்டியை உருவாக்குவதாக இருக்கிறதென தேட ஆரம்பித்தார். காந்த பொம்மைகள் அதிக பயனுள்ளவை என அறிந்து கொண்டார்.
சீனாவில் மட்டுமே இதற்கான பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்பதால் நேரடியாக சென்று இந்தியாவிற்கு இறக்குமதி செய்து முதல் விற்பனையை தொடங்கினார். ஜெல்மேக் என்ற நிறுவனத்தை தொடங்கி விற்பனை தீவிரமானதும், கொரோனா தொற்றால் இறக்குமதி நின்று விட்டது.
அப்போதுதான் எதற்கு சீனாவை நம்பியிருக்க வேண்டும்; நாமே தயாரித்தால் என்ன என்ற எண்ணம் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க வைத்தது. இயந்திரங்கள், மூலப்பொருட்களை பல்வேறு இடங்களில் பெற்று, தொழில்நுட்பங்களை கற்று கொண்ட புவனேஸ்வரி மைசூரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ரூ.30 ஆயிரத்தில் தொடங்கிய வியாபாரம், இன்று ஆண்டுக்கு ரூ.3 கோடி என விரிவடைய வைத்துள்ளார். இவரின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சிறந்த தொழில் முனைவோர் விருதுகளும் பெற்றுள்ளார்.
புவனேஸ்வரி கூறியதாவது: குழந்தைகளை அலைபேசி, டிவியிலிருந்து விலக்கி அவர்கள் மனதை சவாலுக்கு உட்படுத்தும் நவீன, பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொம்மையை கொடுக்க நினைத்தேன். பெண்களுக்கு குழந்தைகளிடம் இருந்து ஒரு அரை மணி நேரம் ஓய்வு இந்த பொம்மைகளால் கிடைக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டேன். வாடிக்கையாளர்களின் குறைகளை சரிசெய்து, 10 ஆண்டில் எங்களுக்கென அடையாளத்தை உருவாக்கியுள்ளோம். உலகளவில் பொம்மைகளுக்கு சிறந்த நிறுவனமாக எனது நிறுவனத்தை மாற்றுவதே லட்சியம் என்றார்.
எந்த வணிகப் பின்புலமும் இல்லாமல், யுக்தி தெரியாமல் சமூக வலைதளங்களையும், தான் கற்ற படிப்பையும் வைத்து உலகம் முழுவதும் பல இல்லத்தரசிகளுக்கு முன்னுதாரணமாய் திகழும் புவனேஸ்வரி பாராட்டிற்குரியவரே.

