ADDED : செப் 13, 2026 09:00 AM

இளம்தென்றல் தவழ்ந்து வருவதைப் போல இதமான குரல், தேனின் சுவையைப் போல காதுக்கு சுவை தரும் வீணைக்குரல் என மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த பாடகி ஜாஸ்மின் பாத்திமாவைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
எப்போதும் சிரிக்கும் முகத்தில், பாடும் போது குரல்... காந்தமாய் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கிறது. 12 வயதில் இருந்தே பாடிக்கொண்டிருப்பதால் குரலின் மென்மை பேச்சிலும் ஒலித்தது.
அப்பா ரஷீத் அலி (ரஞ்சித்) மேடைப்பாடகர். சினிமாப்பாடல்கள் பாடுவார். இரண்டாண்டுகள் கர்நாடக இசை கற்றுக் கொண்டேன். பின் சினிமாப் பாடல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். டிவி இசைநிகழ்ச்சி போட்டியில் 'டைட்டில் வின்னர்' ஆன அனுபவம் இசையை என்னுள் நிறைத்தது. 12 வயதில் துவங்கிய மேடைப்பயணத்தில் தற்போது ஆயிரம் நிகழ்ச்சிகளைத் தாண்டி பாடி வருகிறேன்.
கணவர் ஆசிக் முகமது பாடகர், சவுண்ட் இன்ஜினியர். பாடகர் எஸ்.பி.பி.,க்கு பர்சனல் சவுண்ட் இன்ஜினியர். எஸ்.பி.பி., குரலிலும் பாடுவார். 'உனக்கென்ன மேலே நின்றாய்...' பாட்டை பாடிய போது எஸ்.பி.பி., பாராட்டினார். தற்போது ஆர்க்கெஸ்ட்ரா நடத்தி வருகிறோம். வெளியில் கச்சேரிகளுக்கு தனியாகவும் பாடுகிறோம்.
மெலடி தான் டிரெண்டிங்
திருமண விழா நிகழ்ச்சிகளில் பாட அழைக்கும் போது புதிய பாடல் வேண்டாம் என்பது தான் திருமண வீட்டாரின் முதல் வேண்டுகோளாக இருக்கிறது. இசையின் ஒலி இடையூறு செய்யாத வகையில் இருக்க வேண்டும் என்பதால் இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்களை தேர்வு செய்கிறோம். திருமண வீடுகளில் முன்கூட்டியே இசையமைத்து ஒரிஜினல் மியூசிக் தயார் செய்து பாடகர்கள் மட்டும் கூடவே பாடும் 'கரோக்கி' ரக இசையை அதிகம் விரும்புகின்றனர். அப்படிப் பாடும் போது இசைக்கருவிகளின் வாசிப்பு இதமாக இருப்பதால் ரசிக்கின்றனர்.
திருமண வீடுகளில் மெலடி மட்டும் தான் பாடவேண்டும். இளையராஜா பாடல்களை அடுத்து 2000ம் ஆண்டு முதல் சமீபத்திய மெலடி பாடல்கள் வரை பாடுவேன். மணமக்களை பார்த்து விட்டு கீழே வருபவர்கள், சில நிமிடங்கள் நின்று பாராட்டி செல்வதை பெருமையாக நினைக்கிறேன். யார் சொல்வதோ... யார் சொல்வதோ (விஜய் பாடல்), கவிதை கேளுங்கள்... கருவில் பிறந்தது பாடல், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, பாடறியேன்... படிப்பறியேன், மன்னவன் வந்தானடி தோழி, அன்னக்கிளி உன்னத் தேடுது... போன்ற பாடல்கள் இளையோர் முதல் முதியோர் வரை எப்போதும் விரும்பி கேட்கும் 'எவர் கிரீன்' ரகம்.
இளைஞர்களை உற்சாகப்படுத்த மேடைக் கச்சேரி, கோயில் விழாக்களில் ஆடிக் கொண்டே பாடும் பாடகர்களை விரும்புகின்றனர். அந்த மாதிரி மேடைகளை தவிர்க்க மாட்டேன். சிலநேரங்களில் கூடுதலாக பாடகரை வைத்து பாட வைக்கின்றோம்.
கடவுள் பாடல் எனதே
மேடை கச்சேரிகளில் முதலில் இறைவன் பாடல் பாடும் வாய்ப்பு பெரும்பாலும் எனக்குத் தான் கிடைக்கிறது. சலங்கை ஒலி பட 'ஓம் நமச்சிவாய...' பாடல் அல்லது சமயபுரம் மாரியம்மன் பாடல் பாடும் போது உத்வேகமாக இருக்கும்.
ஆண்டுதோறும் கொடைக்கானலில் சிவராத்திரிக்கு சென்று இரண்டரை மணி நேரம் பக்திப்பாடல்கள் பாடுவது எனது தொழிலுக்கு கிடைத்த மரியாதை. திண்டுக்கல் சர்ச்சில் ஆறாண்டுகளாக பாடிவருகிறேன். துாத்துக்குடி குலசேகரபட்டினத்தில் மசூதிக்காக அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் பாடகர் நாகூர் அனீபாவின் முஸ்லீம் பாடல்கள் பாடுகிறேன். இசைக்கு மதமில்லை என்பதை இதன் மூலம் உணரமுடிகிறது. அவரவர் தொழிலை நேசித்தால் அது எப்போதும் கைகொடுக்கும். இசையும் பாடலும் எனக்கு கைகொடுக்கிறது என்றார் ஜாஸ்மின் பாத்திமா.
இவரிடம் பேச 90952 97332.
