/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
இலையில் 'பார்சல் பாக்ஸ்' அறிமுகப்படுத்திய பெண்கள்
/
இலையில் 'பார்சல் பாக்ஸ்' அறிமுகப்படுத்திய பெண்கள்
ADDED : ஏப் 21, 2024 11:02 AM

ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் ருசி பிரியர்களுக்காக இலையில் தயாரிக்கப்பட்ட பார்சல் பாக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளனர் அரியலுாரைச் சேர்ந்த அறிவுக்கொடி, ராஜபாளையத்தை சேர்ந்த இந்துமதி.
அறிவுக்கொடி முதுநிலை உழவியல் படிப்பை முடித்தவர். இந்துமதி முதுநிலை வேளாண் படிப்பை முடித்தவர். இருவரும் தோழிகள். படிப்பிற்கு பின் தனியார் வேளாண் கல்லுாரியில் உதவி பேராசிரியர்களாக வேலை பார்த்தனர்.
பிளாஸ்டிக், அலுமினியம் பாயில் பேப்பரில் உணவுப்பொருள் பார்சல் செய்வதற்கு பதிலாக புதுமையான இலைப்பெட்டி தயாரித்து ஸ்டார்ட் அப் மூலம் வெற்றி பெற்ற கதையை விவரித்தனர் இந்த விவசாய மாணவிகள்.
லட்சக்கணக்கானோர் ஆன்லைன் மூலம் உணவகங்களில் பார்சல் வாங்குகின்றனர். எவ்வளவு கூடுதலான விலை உணவுப் பொருள் வாங்கினாலும் பிளாஸ்டிக் டப்பா அல்லது அலுமினிய பாயில் பேப்பர் டப்பாக்களில் அடைத்து தருகின்றனர். இதனால் உணவின் தன்மை சிறிது மாறவும் கூடும். சாப்பிட்ட பின் குப்பையில் வீசும் போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு இல்லாத, உணவின் சுவை, தன்மை மாறாமல் இலைகளில் பார்சல் பெட்டி உருவாக்க இரண்டு ஆண்டு ஆராய்ச்சி செய்தோம்.
வட மாநிலங்களில் கிடைக்கும் தடிமனான இலைகள் பார்சல் பாக்ஸ் தயாரிக்க பயன்படுவதை அறிந்தோம். வட மாநில பழங்குடியின மக்களை அணுகினோம். மரங்களில் இருந்து விழும் காய்ந்த இலைகளை விலை கொடுத்து வாங்குவது குறித்து தெரிவித்தோம். அவர்களுக்கும் இது புதிய வகை வருமானம் என்பதால் சம்மதித்தனர். அவர்களிடமிருந்து இலையைப் பெற்று கீழ், மேல் பக்கங்களில் இலைகளும் நடுவில் மரக்கூழ் அட்டை வைத்து பாக்ஸ் தயாரித்தோம். இலைகளை சுத்தம் செய்து தாவரக் குச்சியால் தைக்க வேண்டும். நடுவில் அட்டைப்பெட்டி வைத்து அதன் மேல் பகுதியிலும் கீழ் பகுதியிலும் தைத்த இலைகளை வைத்து தாவர பசையால் ஒட்ட வேண்டும். அவை உடையாமலும் கிழியாமலும் இருக்கும்.
இந்த உணவு பாக்ஸில் 750 கிராம் உணவு அல்லது 750 மில்லி திரவ கிரேவி வைக்கலாம். கிரேவி கசியாதவாறு பாக்ஸ் மூடி இலையால் தயாரித்துள்ளோம். இந்த இலை பாக்ஸில் உணவுப்பொருள் ஒரு மணி நேரம் வரை சூடாக இருக்கும். சாப்பிடும் தட்டுகளும் பிரசாதம் வைக்கும் கிண்ணங்களும் தயாரித்துள்ளோம். கடந்தாண்டு நிறுவனத்தை பதிவு செய்து பணிகளை துவக்கினோம்.
பலா, தாமரை, மந்தாரை இலை உட்பட 10 வகையான இலைகளை பார்சல் தயாரிப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள பழங்குடியினர் மூலம் இலைகளை சேகரிக்கும் வகையில் தென்காசியில் தொழிற்சாலை துவக்கி உள்ளோம். சுற்றுச்சூழலுக்கும் சாப்பிடும் உணவிற்கும் தீங்கில்லாததை தயாரிக்கிறோம் என்ற திருப்தி கிடைக்கிறது. இதன் அருமை புரிந்து கொண்ட உணவக உரிமையாளர்கள் ஆர்டர்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளனர் என்றனர்.
இவர்களிடம் பேச 96553 54766

