/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
தமிழ் தாத்தாவுக்கு வந்த கடிதங்களை வாசிக்கலாம்!
/
தமிழ் தாத்தாவுக்கு வந்த கடிதங்களை வாசிக்கலாம்!
ADDED : செப் 20, 2025 11:32 PM

வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை, இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் உ.வே.சாமிநாதையரின், 'கடிதக் கருவூலம்' என்ற நுால் குறித்து, கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
தமிழ் பதிப்பிலக்கியத்தின் முன்னோடியாக விளங்கியவர் உ.வே.சாமிநாதைய்யர். ஓலைச்சுவடிகளில் இருந்து பழந்தமிழ் செய்யுள்களை கண்டெடுத்து, ஒப்பிட்டு ஆராய்ந்து உரையெழுதி அச்சில் பதிப்பித்தவர்.
அவரது, 'கடிதக் கருவூலம்' என்ற நுாலை சமீபத்தில் படித்தேன். இந்த நூலில் உ.வே.சா.வுக்கு, 1877 ஆண்டு முதல் 1900ம் ஆண்டு வரை இந்த காலத்தில் இருந்த புலவர்கள், தமிழறிஞர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த அறிஞர்கள் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
உ.வே.சா.வுக்கு இந்த கடிதங்களை எழுதியவர்கள், பெரும்பாலும் தமிழ் இலக்கியங்களை பதிப்பிப்பது குறித்துதான் எழுதி உள்ளனர். இதில் சந்திரசேகர கவிராயரில் துவங்கி, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, செல்வகேசவ முதலியார், சி.வை.தாமோதரம் பிள்ளை, உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள். வெளிநாட்டவர்களில் ஜி.யு.போப், ஜூலியன் வின்ஜோன் போன்றவர்கள் எழுதிய கடிதங்கள் முக்கியமானவை. இதில் உருக்கமான கடிதம் ஒன்று உண்டு. உ.வே.சா.படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்த போது, கும்பகோணம் கல்லுாரியில் பணியாற்றி வந்த வித்வான் தியாகராய செட்டியார், உ.வே.சா.வுக்கு அந்த கல்லுாரியில் வேலை வாங்கி கொடுத்துள்ளார். அந்த நன்றி உணர்வில்தான், உ.வே.சா.தனது வீட்டுக்கு, 'தியாகராஜ விலாசம்' என்று பெயர் வைத்துள்ளார்.
தியாகராய செட்டியார் பணி ஓய்வு பெற்ற பிறகு, இரண்டு ஆண்டுகள் பென்ஷன் கிடைக்காமல் அலைந்துள்ளார். வெள்ளையர் ஆட்சிக்காலத்திலும் பென்ஷன் பெறுபவர்கள் நிலை இப்படித்தான் இருந்துள்ளது. அப்போது கல்லுாரியின் முதல்வராக இருந்தவர் கோபாலராயர். உ.வே.சா. வுக்கு தியாகராயர் ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் அவர், 'எனக்கு இதுவரை பென்ஷன் கிடைக்கவில்லை. கோபாலராயரிடம் பேசி, பென்ஷன் கிடைக்க உதவ வேண்டும்' என்று எழுதி இருக்கிறார்.
ஊற்றுமலை ஜமீன்தார் மருதப்பதேவர், பூண்டி அரங்கநாத முதலியார் மற்றும் காவேரி அம்மாள் ஆகியோரின் கடிதங்களும் முக்கியமானவை.
அந்த காலத்தில் இருந்தவர்கள், தமிழ்மொழியின் மீது எவ்வளவு காதலுடன் இருந்துள்ளனர் என்பதை, இந்த கடிதங்களை படிக்கும்போது அறிய முடிகிறது.
இந்த கடிதங்களுக்கு, உ.வே.சா. என்ன பதில் எழுதினார் என்ற விவரங்கள் இந்த நுாலில் இல்லை. அது கிடைத்து இருந்தால், இந்த நுால் வாசகர்களுக்கு முழு நிறைவாக இருந்திருக்கும்.
அச்சு இயந்திரங்கள் அதிகம் இல்லாத அந்த காலத்தில், ஏடுகளில் இருந்த இலக்கியங்களை பதிப்பிக்க வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் அத்தனை அறிஞர்களிடமும் இருந்துள்ளது. அதை இந்த கடிதங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.
பலர் தங்களிடம் இருந்த சுவடிகளை கொடுத்து உதவியுள்ளனர். ஆதினங்கள் நிதியுதவி அளித்துள்ளனர். ஆரோக்கியமான இலக்கிய விவாதங்கள் நடந்துள்ளன. தமிழ் இலக்கியத்தின் முக்கியமான காலத்தை அறிந்து கொள்ள, உ.வே.சா.வின் இந்த நுால் உதவியாக உள்ளது. உ.வே.சாமிநாதைய்யர் நுால் நிலையத்தால் வெளியிட்டுள்ள இந்த நுாலை, ஆ.இரா.வேங்கடாசலபதி தொகுத்து இருக்கிறார்.
அச்சு இயந்திரங்கள் அதிகம் இல்லாத அந்த காலத்தில், ஏடுகளில் இருந்த இலக்கியங்களை பதிப்பிக்க வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் அத்தனை அறிஞர்களிடமும் இருந்துள்ளது. அதை இந்த கடிதங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். பலர் தங்களிடம் இருந்த சுவடிகளை கொடுத்து உதவியுள்ளனர். ஆதினங்கள் நிதியுதவி அளித்துள்ளனர். ஆரோக்கியமான இலக்கிய விவாதங்கள் நடந்துள்ளன.