
நுால் வெளியீட்டு விழா
முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய இலங்கை வக்பு நியாய சபையின் தலைவருமான யூ.எல் அப்துல் மஜீத்தால் எழுதப்பட்ட “வக்பு சட்டமும் பள்ளிவாசல்கள் மற்றும் வக்புகள் (அவ்காப்) என்பனவற்றின் முகாமைத்துவமும்” எனும் நூல் இன்று (17) செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்நூலானது பலரது வேண்டுகோளுக்கிணங்க, தற்போது அவராலேயே தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது.
இந்நூலின் முதற்பிரதியை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், மத மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் முனீர் முலாஃபருக்கு வழங்கி வைத்தார்.
நூலின் சிறப்புப் பிரதிகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் மற்றும் பிரதியமைச்சர் முனீர் முலாஃபரின் இணைப்புச் செயலாளர் எல்.ஐ.ஏ.எம். சாஜஹான் ஆகியோருக்கு வக்பு நியாய சபையின் செயலாளர் எம்.என்.எம். ரோஷன் வழங்கி வைத்தார்.
இஸ்லாமிய சட்டத்தின்படி வக்பு நிறுவனங்களை எவ்வாறு சரியாக நிர்வகிப்பது என்பன குறித்த விரிவான வழிகாட்டி நூல் இது.
பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், அரபுக் கல்லூரிகள், மற்றும் இஸ்லாமிய நிறுவனங்களுக்கு அவசியமான நூலாகவும் இந்நூல் அமைந்துள்ளது.
முஸ்லிம் சமூக நிர்வாகத்திற்கு அவசியமான ஒரு சட்ட வழிகாட்டி நூலாகவும் இந்நூல் அமையப்பெற்றுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைத் தூண்களாக விளங்கும் பள்ளிவாயல்கள், அரபு மதரஸாக்கள், வக்பு நிறுவனங்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு நிர்வாகச் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இச்சவால்களில் பெரும்பாலானவை நிதி மேலாண்மை, சொத்து நிர்வாகம், சட்டப் புரிதல் இல்லாமை, நிர்வாகப் போட்டி, பொறுப்புணர்வின் குறைபாடு போன்றவற்றிலிருந்து உருவாகின்றன.
“வக்பு சட்டமும் பள்ளிவாசல்கள் மற்றும் வக்புகள் (அவ்காப்) என்பனவற்றின் முகாமைத்துவமும்” எனும் இந்நூல், காலத்தின் தேவையை உணர்ந்து எழுதப்பட்ட ஒரு முக்கியமான வழிகாட்டியாகத் திகழ்கிறது.
இந்நூலின் ஆசிரியர் யூ.எல். அப்துல் மஜீத் தனது நீண்டகால நீதித் துறை அனுபவத்தையும், வக்பு நிர்வாகத்தில் பெற்ற ஆழமான அறிவையும் இந்நூலில் ஒருங்கிணைத்துள்ளார். ஆங்கில வடிவம் பெற்றுள்ள இந்நூலில் தமிழ் வடிவமானது வக்பு என்றால் என்ன, அதன் நோக்கம், அதன் எல்லைகள், அதனை நிர்வகிப்பவர்களின் பொறுப்புகள், தவறுகள் ஏற்படும் போது ஏற்படும் விளைவுகள் ஆகிய அனைத்தையும் தெளிவாகவும், நடைமுறைப் பயனுடனும் எடுத்துரைக்கிறது.
இன்று எம் சமூகத்தில் காணப்படும் பல நிழல் பிரச்சனைகள், உள் முரண்பாடுகள், வழக்குகள், நம்பிக்கையின்மையால் ஏற்படும் சச்சரவுகள், நிர்வாக குழப்பங்கள் போன்றவை வக்பு சட்டங்களையும், இஸ்லாமிய நிர்வாக ஒழுங்குகளையும் அறியாமல் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்க முயல்வதிலிருந்தே தோன்றுகின்றன என்பதே உண்மை.
சுருக்கமாகச் சொல்வதானால், இந்த நூல் அறிவுக்கும், அமானிதத்திற்கும், நியாயமான நிர்வாகத்திற்கும் இடையிலானதோர் பாலம். சமூகத்தின் நேர்த்தியான நிர்வகித்தலை விரும்பும் ஒவ்வொருவரும் தவறாமல் படிக்க வேண்டிய அவசியமானதோர் நூலிது.
- இலங்கையில் இருந்த எம்.எஸ்.எம்.ஸாகிர்
Advertisement

