/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
கொரியா தமிழ்ச்சங்கம் ஒருங்கிணைக்கும் பன்னாட்டு மகளிர் தினம் காரிகை_1
/
கொரியா தமிழ்ச்சங்கம் ஒருங்கிணைக்கும் பன்னாட்டு மகளிர் தினம் காரிகை_1
கொரியா தமிழ்ச்சங்கம் ஒருங்கிணைக்கும் பன்னாட்டு மகளிர் தினம் காரிகை_1
கொரியா தமிழ்ச்சங்கம் ஒருங்கிணைக்கும் பன்னாட்டு மகளிர் தினம் காரிகை_1
ஏப் 03, 2025

'மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா' என்றார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
'பெண்மையைக் கொண்டாடும்' வகையில் நமது கொரிய தமிழ்ச் சங்கத்தின் மகளிர் ஆளுமைகள் துணைத் தலைவர் விஜயலட்சுமி தலைமையில் சர்வதேச மகளிர் நாளை முன்னிட்டு, “காரிகை - 1” என்றதொரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி பிற்பகல்12.30 மணிக்குத் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்கள்அவர்தம் குடும்பத்துடன் வருகை தந்தனர். சங்கத்தின் மகளிர் ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீரங்கநாயகி, வைஷ்ணவி, கீதாசுவாமிராஜன், சுமித்ரா விக்னேஷ்ராம்,முனைவர் உமாதேவி, ரஞ்சனி, விஜயலட்சுமி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இனிப்பு, காரவகைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறிய மகிழ்விருந்தில் பரிமாறப்பட்டன. குழந்தைகள் மற்றும் பெண்கள் ரசித்து சுவைத்து மகிழ்ந்தனர். அதன் பிறகு பிற்பகல்2 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன், விளக்கேற்றி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஜெயஸ்ரீ பத்மநாபன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
நடனம் இல்லாமல் கொண்டாட்டம் எப்படி இருக்கும்? சாரா பாலச்சந்திரனின் அழகிய வரவேற்பு நடனம் சிறப்புற அமைந்தது. அதனை அடுத்து 'கொரிய தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் விஜயலட்சுமி பத்மநாபன் தலைவர் உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களான சியோல் சக்ரா உணவக உரிமையாளர் மற்றும் சரவணபவன் நிர்வாக இயக்குநர் சாந்திபிரின்ஸ், கொரியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தின் பணியாளர் ஸ்டெல்லா (சோயோயுன் முன்), வெகுமதி தரவு ஆய்வாளர் மற்றும் ஜிம்யி பைனான்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் திருநாதன் ஆகியோருக்குச் சங்கத்தின் தலைவர் முனைவர் செ. அரவிந்த ராஜா, துணைத் தலைவர் விஜயலட்சுமி, கிருபா, முனைவர் சதீஷ் ஆகியோர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சாந்தி பிரின்ஸ் 1999ஆம் ஆண்டு முதலான தமது கொரிய வாழ்க்கைப் பயணத்தையும், எவ்வாறு தொழிற்முனைவோர் ஆகினார் என்பதையும் விவரித்துப் பேசினார். அவரின் பேச்சு குழுமி இருந்த பெண்களுக்குச் சாதிக்க வேண்டும் என்ற ஊக்கத்தையும், நம்பிக்கையையும் ஊட்டியது எனலாம்.
மற்றுமொரு சிறப்பு விருந்தினர் ஸ்டெல்லா கொரியாவில் இவை போன்ற நிகழ்ச்சிகள் நடந்ததாகக் கேள்விப்பட்டதில்லை எனவும், தனது குடும்பம் உள்பட நண்பர்களும் மகளிர் நாள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து அறிந்திருக்கவில்லை என்றும் கூறுகையில் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். கொரியா போன்ற வளர்ந்த நாடுகளில் இன்னமும் பெண்களுக்கான வாய்ப்புகள் முழுவதும் முற்றுப் பெறவில்லை என்று உணர முடிந்ததாக அனைவரும் கருதினர். 'GME Financeன்' இயக்குநர் நாதன் சங்கத்தின் இத்தகைய சீரிய முன்னெடுப்புக்குப் பாராட்டினைத் தெரிவித்துப் பேசினார்.
அடுத்து, பெண்கள் தங்களது கலைநயத்தினை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின. பிரபல கதாநாயகியாகவே சிட்டாய் வந்த சீமாட்டிகள் 'ஒய்யார நடை' நடந்து மகிழ்ந்தனர். “வண்ணம் அது நம் எண்ணம்” என்பார். கொரியா போன்ற அயல் நாடுகளில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் பெண்களின் உள அழுத்தத்தினைப் போக்க, அவர்களின் திறமையை அவர்களே அறிந்து கொள்ள, வண்ண உலகில் எண்ணத்தைத் தீட்டி வானவில்லாய் மகிழ்ந்தனர் வண்ணத் தாரகைகள்.
ககூட் என்றறியப்படும் வினாவிடை நிகழ்ச்சியில் ஆர்வமுடன் அனைவரும் கலந்து கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தனர். அந்தப் போட்டியில் முனைவர் கற்பகம் முதலிடத்திலும், விஜயலட்சுமி இரண்டாவது இடத்திலும், ஸ்டெல்லா மூன்றாவது இடத்திலும் பரிசுகளை வென்றனர். அதன்பின் 'கொரியதமிழ்ச் சங்கக் கலைக் குழுவின்- உற்சாகக் குழு நடனத்தில் ஸ்ரீரங்கநாயகி, கீர்த்தனா, அபிநயா, முனைவர் சரஸ்வதி, செவ்வி கென்றா ஆகியோர் அழகுற நடனமாடினர்.
'சக்ரா உணவகம்' வழங்கிய சிறப்புத் தேநீர் இடைவேளைக்குப் பிறகு, விஜயலட்சுமி பத்மநாபன், வைஷ்ணவி ஆகிய இருவரும் கொரியாவில் மகப்பேறுகாலத்தில் 'மருத்துவப் பயன்பாடுகள் மற்றும் மருத்துவமனைகள்' பற்றி உரையாடினர்.
குறிப்பிடத்தக்க நிகழ்வாக, மகளிர் தொழிற்முனைவோர் கலைநயமிக்க தங்களது படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். அனைவரும் ஆர்வத்துடன் அதனை வாங்கியும் சென்றனர்.
நூஸ்கின் தொழிலகத்தின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட கிம்மின்வுவின் பேச்சு மற்றும் விளையாட்டிற்குப் பிறகு பிரியதர்ஷினி ஆனந்த்குமாரின் 'நன்றியுரையுடன்' காரிகைக் கொண்டாட்டம் இனிதே நிறைவடைந்தது. பொறுப்புகளை மறந்து தனக்கான நாளை மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடிய காரிகைகள் அடுத்த வருட வசந்தகால காரிகை_2 நோக்கி பிரியாவிடைபெற்றுச் சென்றனர்.
- தினமலர் வாசகி சுசித்ரா
Advertisement