sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆசியா

/

கோயில்கள்

/

தமிழர்களுக்குச் சொந்தமான வெல்கம்விகாரை எனும் ராஜராஜப்பெரும்பள்ளி

/

தமிழர்களுக்குச் சொந்தமான வெல்கம்விகாரை எனும் ராஜராஜப்பெரும்பள்ளி

தமிழர்களுக்குச் சொந்தமான வெல்கம்விகாரை எனும் ராஜராஜப்பெரும்பள்ளி

தமிழர்களுக்குச் சொந்தமான வெல்கம்விகாரை எனும் ராஜராஜப்பெரும்பள்ளி


செப் 22, 2023

Google News

செப் 22, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் தலைநகரான திருக்கோணமலையில் வெல்கம்விகாரை எனும் நாதனார் கோயில் அல்லது இராஜராஜப்பெரும்பள்ளி பற்றிய பேராசிரியர் இந்திரபாலா, பேராசிரியர் பரணவிதான், பேராசிரியர் பத்மநாதன் ஆகிய மூன்று முக்கிய பேராசிரியர்களின் குறிப்புக்கள் மூலம் பல முக்கிய விபரங்கள் வெளிப்படுகின்றன. வெல்கம்விகாரை என தற்போது இவ்விடம் அழைக்கப்பட்டாலும், இதன் பண்டைய பெயர் ஓர் தூய தமிழ்ப்பெயராகும். இது பண்டைய காலத்தில் வெல்காமம், வெல்கம் வேரம் எனவும், சோழர் காலத்தில் இராஜராஜப்பெரும்பள்ளி எனவும் அழைக்கப்பட்டுள்ளது.இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் இருந்தார்கள் என்பதும், இது தமிழ் பௌத்தருக்குச் சொந்தமான தலமாக இருந்துள்ளது என்பதும், அவர்களின் முக்கிய தலமாக ராஜராஜப்பெரும்பள்ளி எனும் வெல்கம் வேரம் விளங்கியுள்ளது என்பதும், பொலநறுவைக் காலத்தில் வாழ்ந்த தமிழரில் கணிசமான தொகையினர் பௌத்தர்கள் என்பதும், தமிழ்நாட்டில் தமிழ் பௌத்தம் எல்லாம் முற்றாக அழிந்து போயுள்ள நிலையில் இலங்கையில் தமிழ் பௌத்தரின் அடையாளச் சின்னமாக இடிபாடுகளுடனாவது எஞ்சியிருக்கும் ஒரே ஒரு தலமான வெல்கம் வேரம் எனும் இராஜராஜப் பெரும் பள்ளி காணப்படுவதும் மிக முக்கிய விடயங்களாகும்.இத்தலத்தில் இருந்தவர்கள், இதற்குத் தானங்கள் வழங்கியவர்கள் அனைவரும் தமிழ் பௌத்தர்களாவார். இத்தமிழ் பௌத்தரின் பள்ளியைக் கட்டியவர்களும் தமிழர்களே. அதாவது சோழர்கள்.இலங்கையை சோழர் ஆட்சி செய்த காலத்தில் இராஜேந்திரச்சோழனால் கட்டப்பட்டு, அவனின் தந்தையான இராஜஇராஜசோழனின் பெயர் சூட்டப்பட்டு சீரும் சிறப்புடனும் விளங்கியது. இங்குள்ள சோழர்காலக் கல்வெட்டுக்களில் தானம் செய்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் தறியணன், பூவன தேவன், அமுதன் சாத்தான், கண்டன், யக்கன், பாத்தரவித ராமன் ஆகியோராவார். இவர்கள் அனைவரும் தமிழ் பௌத்தர்களே.1929ஆம் ஆண்டு தொல்பொருள் திணைக்களம்இப்பகுதிக்கு வந்து ஆய்வுகள் மேற்கொண்ட போதே இது தமிழ் பௌத்தர்களுக்குகுரிய தலம் என்பதை சிங்கள பௌத்தர்கள் அறிந்து கொண்டனர். இதன் காரணமாகவே இத்தலத்தை தமிழர்கள் கைப்பற்றி விடுவார்கள் எனும் அச்சத்தில் சில அரசியல் சக்திகளின் ஆதரவுடன் தொல்பொருள் திணைக்களம் தடுத்தும், இங்கு அவசர அவசரமாக புதிதாக ஓர் பௌத்தவிகாரையை அமைத்து அங்கு தங்கி விட்டனர். இது ஒரே ஒரு தமிழ் பௌத்தர்களுக்குரிய இடம் என்பதாலும், இங்கு அதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாலும், அதனால் இவ்விடத்தை சரியான முறையில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் தொல்பொருள் திணைக்களத்திற்கு இருந்தும் புதிய விகாரையால் அப்பணிகள் தடுக்கப்பட்டன.தொல்பொருள் திணைக்களம் அகழ்வாராய்ச்சி செய்தால் அதன் மூலம் இவ்விடம் தமிழ் பௌத்தர்களுக்குரியது என்பது உறுதியாகி விடும் என்பதாலேயே அகழ்வாய்வுகள் தடுக்கப்பட்டன. இறுதியில் புதிய விகாரையைச் சேர்ந்தவர்களை அங்கிருந்து அகற்ற மாட்டோம் என தொல்லியல் திணைக்களம் உறுதி அளித்ததன் பின்பே அகழ்வாராய்வு 1929ல் அகழ்வாய்வுகள் ஆரம்பிக்கப்பட்டு, பின்பு நிறுத்தப்பட்டு, சுமார் 25ஆண்டுகளின் பின்பு 1953ல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. அகழ்வாராய்ச்சி செய்வதற்கு இவ்வளவு நீண்டகால இடைவெளியை இலங்கையில் வேறு எந்தத்தலத்திற்கும் தொல்லியல் திணைக்களம் எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விபரங்களை பேராசிரியர் இந்திரபாலா தனது நூலில் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். சோழரின் பின்பு விஜயபாகு மன்னன் இப்பெரும்பள்ளியில் சில திருத்த வேலைகளை மேற்கொண்டான். அதன் பின்பு 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிஸ்ஸங்க மல்லன் இப்பள்ளிக்கு ஆதரவு வழங்கினான். அவன் காலத்தில் தமிழ் பௌத்தர்களுக்குரிய இந்த இராஜராஜப்பெரும்பள்ளி இலங்கையில் இருந்த ஐந்து தலைசிறந்த பௌத்தத்தலங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டது.இருப்பினும் வெல்கம் விகாரையில் 1954 ஆம் ஆண்டு அகழ் வாய்வுகள் முடிந்தபின் பேராசிரியர் பரணவிதானஇத்தலத்தின் ஆய்வுக் குறிப்புகளில், இவ்விடத்தில் இருக்கும் இடிபாடுகள் தமிழ் விஹாரத்தின் அடித்தளம் எனவும், இவை பொலநறுவையில்சோழர்கள் அமைத்த இந்துக்கோயில்களைப் போன்றவை எனவும், இதன் அதிஷ்டானப் பகுதிகள் திராவிடக்கலைப் பாணியில் அமைந்தவை எனவும், இது இடிந்துள்ள நிலையில் காணப்படும் ஒரே ஒரு தமிழ் பௌத்தப் பள்ளி எனவும் தனது ஆய்வுக் குறிப்புகளில் குறிப்பிட்டிருந்தார்.பேராசிரியர் பரணவிதானவின் கூற்றுப்படி வெல்கம்விகாரை தமிழருக்குச் சொந்தமான, தமிழ் பௌத்தப்பள்ளி என்பது உறுதியாகிறது.

கன்னியா வெல்கம்விகாரைக்கு சொந்தமானதா?

கன்னியா வெந்நீர் ஊற்றில் இருந்து 9 கி.மீ.தூரத்தில் பெரிய குளத்தின் அருகில் வெல்கம்விகாரை அமைந்துள்ளது. கன்னியாவை அபகரிக்கும் எண்ணத்துடன் கன்னியா வெல்கம்விகாரைக்குச் சொந்தமானது என தற்போது வெல்கம்விகாரை பிக்குகள் கூறி வருகின்றனர். கன்னியா வெந்நீர் ஊற்று வெல்கம்விகாரைக்குச் சொந்தமானதா, இல்லையா?வெல்கம்விகாரை பற்றி பேராசிரியர் கா.இந்திரபாலா இலங்கையில் தமிழர் எனும் நூலில் ராஜராஜப் பெரும்பள்ளி தலைப்பில் பின்வருமாறு கூறியுள்ளார். 

'இலங்கையிலும், தமிழ் நாட்டிலும் தமிழ் பௌத்தர்கள் வழிபாடு நடத்திய நிறுவனங்களாகவும், தமிழ் பௌத்தத் துறவிகள் வாழ்ந்த மடங்களாகவும் பல பிரசித்தி பெற்ற பௌத்தப்பெரும்பள்ளிகள் பொ.ஆ.மு. காலம் தொட்டுப் பதினைந்தாம் நூற்றாண்டு வரை இருந்தன. ஆனால் இன்று அவை ஒன்றும் இல்லாத அளவுக்கு பௌத்தம் தமிழர் மத்தியிலிருந்து மறைந்து விட்டது. பழைய பள்ளிகளின் அழிபாடுகள் கூட தமிழ்நாட்டில் இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாகபட்டினத்தில் எஞ்சியிருந்த அழிபாடுகள் இருந்த இடம் தெரியாத அளவிற்கு மறைந்து விட்டன. 

இலங்கையிலும் அவ்வாறே தமிழருடைய பௌத்தப்பள்ளிகள் அனைத்தும் அழிந்து விட்டன. எனினும் இலங்கையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழ் பௌத்தப் பள்ளி ஒன்றின் அழிந்த கட்டிடங்கள் காட்டில் பெருமளவு பாதுகாப்பாக இருந்து 75 ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ் பௌத்தப் பள்ளி ஒன்றுக்கு எடுத்துக்காட்டாக அழிந்த நிலையிலேனும் இன்று இருக்கும் ஒரேயொரு பள்ளி இதுதான். 

இப்பள்ளி திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை நகருக்கு சிறிது வடக்கே பெரியகுளம் எனப்படும் இடத்தில் (இவ்விடத்தின் பெயர் கூட இன்று மாற்றப்பட்டு விட்டது எனத் தோன்றுகிறது) உள்ள காட்டில் இருக்கின்றது. இங்கு பரந்த ஒரு பிரதேசத்தில் காணப்படும் அழிபாடுகளைத் தமிழ் மக்கள் நாதனார் கோயில் என அழைத்தனர்.'' எனக்குறிப்பிட்டுள்ளார்.

நாதனார்கோயில் அழிபாடுகள் முதன்முதலாக 1929ஜூன் மாதம் அன்றைய தொல்லியல் ஆணையாளரான பேராசிரியர் செனரத்பரணவிதானவினால் ஆய்வு செய்யப்பட்டது. எனினும் அதன்பின்பு பல ஆண்டுகளாக அங்கு அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படவில்லை. இக்கால கட்டத்தில் வளர்ந்து வந்த அடிப்படைவாத அரசியல், சமய சூழ்நிலையில் இவ்விடத்தைத் தமது செல்வாக்குடைய ஒரு தலமாகமாற்றத் தலைப்பட்ட சில சக்திகள் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியின்றி இவ்விடத்தில் இருந்த காட்டைத் துப்பரவு செய்து இங்கு புதிதாக ஓர் பௌத்தவிகாரையைக் கட்டினர். இதற்குக் காரணம் தமிழரின் பௌத்தப் பள்ளியான இவ்விடம் தமிழர்களிடம் போய் விடக்கூடாது என்பதற்காக இருக்கலாம்.

இந்நிலையில் 1953ஆம் ஆண்டு தொல்பொருள் திணைக்களம் இவ்விடத்தில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ளச் சென்றபோது இப்புதியவிகாரையைச் சேர்ந்தவர்கள் ஆய்வு நடவடிக்கைகளுக்குப் பெருந்தடையாக இருந்தனர். தொல்லியல் தலத்திலிருந்து விகாரையைச் சேர்ந்தவர்களை அகற்ற முயன்றும் முடியவில்லை. முடிவில் அவர்களை அங்கேயே இருக்க அனுமதித்த பின்னரே அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ள முடிந்தது. 

'அகழ்வாராய்ச்சிகளை முடித்தபின் இங்கிருந்த கட்டிட இடிபாடுகள் மற்றும் தொல்பொருட் சின்னங்கள் பற்றி 1954 ஆம் ஆண்டு பேராசிரியர். எஸ்.பரணவிதான “Archaeological Survey of Ceylon Annual Report-1953' எனும்அறிக்கையில்பின்வருமாறு கூறியுள்ளார்.'இந்தத் தமிழ் விஹாரத்தின் அடித்தளப்படைகளின் வேலைப்பாடுகள் அனுராதபுரம், பொலநறுவை ஆகிவற்றில் உள்ளவற்றைக் காட்டிலும் வேறுபட்டனவாகும். அவை பொலநறுவையில் சோழர்கள் அமைத்த இந்துக் கோயில்களில் உள்ளவற்றைப் போன்றனவாகும். தென்னிந்தியாவிலே பல பௌத்தப்பள்ளிகள் இருந்தபோதும் இதுவரை தமிழ்நாட்டில் அவற்றைச் சேர்ந்த தொல்பொருள்கள் கிடைக்காதபடியால் பெரிய குளத்திலே கண்டெடுக்கப்பெற்ற பொருள்களின் முக்கியத்துவம் இலங்கைக்கு வெளியே உள்ளவர்களின் கவனத்துக்கும் உரியதாகும்.' என்கிறார்.

பெரியகுளம் அழிபாடுகள் பற்றி 1960 ஆம் ஆண்டு பேராசிரியர். எஸ்.பரணவிதான “University of Ceylon- History of Ceylon- Vol.I-Pt.2- எனும் இன்னுமோர் அறிக்கையில்பின்வருமாறு கூறியுள்ளார். 'திருகோணமலைக்கு அண்மையில் உள்ளதும் இந்நாளில் நாதனார் கோயில் என வழங்குவதுமான புராதனமான வெல்கம்விகாரையின் பிரதானமான அமைப்புகளில் ஒன்று அங்கிருந்த மாகரமாகும். அது மிக வளர்ச்சி பொருந்திய நிலையில் 56 நீளமும், 28 அடி 7 அங்குலஅகலமும் கொண்ட கட்டிடமாக விளங்கியது. அதன் அதிஷ்டானப் படைகள் திராவிடக்கலைப் பாணியில் அமைந்தவை. இடிந்துள்ள நிலையிலும் இதுவரை கிடைத்துள்ள ஒரே ஒரு தமிழ் பௌத்தப்பள்ளியின் வடிவமைப்பினைப் பற்றியவை என்ற காரணத்தினால் அங்குள்ள தொல்பொருள் சின்னங்கள் அனைவரினதும் கவனத்துக்குரியவை.

'பெரியகுளம் அழிபாடுகளில் மொத்தமாக 16தமிழ்க் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை சோழர்கால கல்வெட்டுக்களாகும். இக்கல்வெட்டுகளில் இங்கிருந்த கட்டிடம் 'வெல் கம் வேரமானராஜராஜப்பெரும்பள்ளி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது வெல்காமப்பள்ளி என்றும் அறியப்படுகின்றது. வெல்காமம் எனும் ஊரிலே பெரும்பள்ளி அமைந்திருந்தது என்பது கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது. 

ஈழமண்டலத்தின் பெரும் பிரிவுகளில் ஒன்றான யாஸ்ரயவள நாட்டில் இருந்த ஊர்களில் வெல்காமமும் ஒன்றாகும். இந்த வளநாடு இராஜேந்திரசிங்க வளநாடு, பரகேசரி வளநாடு எனும்பெயர்களிலும்அழைக்கப்பட்டது.பெரியகுளம் அழிபாடுகள் பற்றி பேராசிரியர் எஸ்.பத்மநாதன் இலங்கைத் தமிழ் சாசனங்கள் எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 

'இராஜராஜப்பெரும்பள்ளி ஒரு தமிழ் பௌத்தக் கோயிலாக விளங்கியது என்பதை தொல்பொருள் சின்னங்கள் மூலமாக அறிய முடிகிறது. அங்கு கிடைத்துள்ள சாசனங்கள் எல்லம் தமிழ்ச்சாசனங்கள். தமிழர்களே கோயிலுக்குத் தானங்களை வழங்கியுள்ளனர். பெரும்பள்ளியின் சுற்றாடலில் பௌத்தரான தமிழர் வாழ்ந்தமைக்கு அதன் தொல்பொருள் சின்னங்கள் ஆதாரமாகயுள்ளன. திருகோணமலைப் பிராந்தியத்திலே பொலநறுவைக் காலத்தில் வாழ்ந்த தமிழரில் கணிசமான தொகையினர் பௌத்தர்கள் என்பதும், வேறு தலங்களிலுள்ள தொல்பொருள் சின்னங்கள் மூலம் புலனாகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

'பேராசிரியர் இந்திரபாலா, பேராசிரியர் பரணவிதான, பேராசிரியர் பத்மநாதன் ஆகிய மூன்று முக்கிய பேராசிரியர்கள் வெல்கம்விகாரை எனும் ராஜராஜப்பெரும்பள்ளி பற்றி ஆராய்ந்து தமது நூற்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் அவர்களின் ஆய்வுக் குறிப்புகளில் எந்த ஒரு இடத்திலும் கன்னியா வெந்நீர் ஊற்று பற்றியோ, அல்லது கன்னியா வெல்கம்விகாரைக்குச் சொந்தமானது என்றோ குறிப்பிடவில்லை. எனவே கன்னியா வெந்நீர்ஊற்றுக்கள் வெல்கம்விகாரைக்குச் சொந்தமானதல்ல என்பது மேற்சொன்ன பேராசிரியர்களின் குறிப்புகள் மூலம் உறுதியாகத் தெரிகிறது. 

ஆனால் வெல்கம்விகாரை எனும் ராஜாராஜப்பெரும்பள்ளி தமிழர்களுக்குச் சொந்தமானது என்று இப்பேராசிரியர்கள் மூவரும் ஆணித்தரமாக, தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். மொத்தத்தில், தமிழரின் வரலாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றது என்பது புலனாகின்றது.

- நமது செய்தியாளர் ஞானகுணாளன்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us