/
உலக தமிழர்
/
ஆஸ்திரேலியா
/
செய்திகள்
/
ஆக்லாந்தில் தைப்பூச திருவிழா
/
ஆக்லாந்தில் தைப்பூச திருவிழா

ஆக்லாந்தில் உள்ள ஆஸ்திக பக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் தைப்பூசம் திருவிழா சென்ற மாதம் 23/1/2026 வெள்ளியன்று மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் முருகனுக்கு அபிஷேகத்துடன் ஆரம்பித்து பக்தர்களுக்கு காவடி மற்றும் பால்குடம் நேர்த்திக்கடன் செய்பவர்களுக்கு கங்கணம் கட்டும் வைபவத்துடன் ஒனேஹுங்கவில் உள்ள சாந்தி நிவாசில் தொடங்கி வைக்கப்பட்டது.
முருக பக்தர்கள் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை பால் காவடிகள் , புஷ்பக்காவடிகள் மற்றும் பால்குடங்களை பக்தியுடன் எடுத்து வந்தார்கள். முருகனுக்கு முதலில் பக்தர்கள் சுமந்து வந்த பாலை அவர்கள் கையாலே ஊற்றி அபிஷேகம் செய்தபின் வேதங்கள் ஓதி முருகனுக்கு வேத விற்பன்னரால் பால், தயிர், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் ருத்ரம் ஜபித்தும் பஜனை பாடல்கள் பாடியும், கந்த சஷ்டி கவசம் துதித்தும் முருகனை போற்றி இசைத்தும் வணங்கினர். பின்னர் விசேஷ அர்ச்சனை செய்தும் பலவித பழங்கள் மற்றும் நைவேத்தியம் செய்து கற்பூர ஆரத்தியுடன் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமண்ய சுவாமி வழிபாடு நடந்தது. சுமார் 200க்கும் மேலே பக்தர்கள் திரண்டு 'முருகனுக்கு அரோஹரா ' என்ற கோஷம் விண்ணை பிளந்தது. பெரும்பாலான பக்தர்கள் சவுத் ஆப்ரிக்கா மற்றும் பிஜி தீவை சேர்ந்தவர்கள். அவர்களில் சில பக்தர்கள் உடம்பெல்லாம் அலகு குத்திக்கொண்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். சிலர் மாவிளக்கேற்றி பிரார்த்தனையை முடித்தார்கள். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- ஆக்லாந்திலிருந்து நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்
Advertisement

