ஏப் 10, 2026

இந்த தலைப்பில் உங்கள் அனுபவங்கள் மற்றும் பகிர விரும்பும் கட்டுரைகள் தினமலரில் வாரம் ஒருமுறை பதிவிட முன்முயற்சி எடுத்துள்ளேன்.
உங்கள் பெயர் மற்றும் புகைப்படத்தோடு உங்கள் கட்டுரை வெளியிடப்படும்!
கட்டுரைகள்
• தமிழ் சார்ந்தவை (1-2 பக்கம்)
• எந்த தலைப்பிலும் அனுப்பலாம் — அனுபவங்கள், நினைவுகள், பயனுள்ள கருத்துகள், பொருளாதாரம், இந்தியாவின் வளர்ச்சி- டிஜிட்டல் இந்தியா
பகிர்வது எப்படி?
• எழுத விரும்புபோர், மெசேஜ் மூலம் என்னிடம் தொடர்பு கொள்ளுங்கள்
• ஷீலா ரமணன்
• 210 843 7620
உலகம் உங்களை உற்று நோக்கட்டும்!!) சமீபத்தில் இந்தியாவில் இருந்து பயணம் மேற்கொண்டு, நானும் எனது மனைவியும் அமெரிக்காவின் சான் அந்தோணியோ நகரில் வசித்து வரும் எங்களது மகன் சந்தோஷ் லட்சுமணன் வீட்டிற்கு சென்று சில காலம் தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அந்த சமயத்தில், தமிழ், மலையாளம் போன்ற சங்க அமைப்புகள் நடத்தும் விழாக்களிலும், கோவில் விழாக்களிலும் கலந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இதன் மூலம், அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய சமூகத்தைச் சேர்ந்த பலரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.
அவர்களுடன் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களின் மூலம், அமெரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பொருளாதார சூழ்நிலைகள், வீட்டு அமைப்புகள் மற்றும் கலாச்சார வளர்ச்சிக்காக அவர்கள் காட்டும் ஆர்வம் ஆகியவற்றை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.
நான் கேள்விப்பட்ட சில விஷயங்களை, தினமலர் இணையதளத்தின் செய்தியாளராக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஷீலா ரமணனுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் சிலவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உள்ளது.
50 லட்சம் இந்தியர்கள்
அமெரிக்காவில் சுமார் 50 லட்சம் இந்தியர்கள் வாழ்கின்றனர். இவர்களில் சுமார் 30 லட்சம் பேர் மிக நீண்ட நாட்களுக்கு முன்பாக அமெரிக்காவிற்கு வந்து குடியுரிமை பெற்றவர்கள். அவர்கள் பெரும்பாலும் குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற வடமேற்கு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இவர்களில் பலர் சுயதொழில் செய்து நல்ல நிலைமையில் உள்ளனர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், அமெரிக்காவில் உள்ள சுமார் 70% மோட்டல் (சிறிய ஹோட்டல்) தொழில் இந்தியர்களின் வசம் உள்ளது. இத்தகைய தொழில்களை நடத்தி அவர்கள் நல்ல முறையில் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளில் புதிதாக குடி பெயர்ந்தவர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழகம், ஆந்திரா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த இந்திய மக்கள், கம்ப்யூட்டர் துறையில் பணிபுரியும் வாய்ப்பு காரணமாக சுமார் 15 லட்சம் பேர் வேலை விசா பெற்றுக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். மருத்துவத்துறையிலும் பல இந்தியர்கள் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். பல குடும்பங்களில் ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்வது வழக்கமாக உள்ளது.
இந்தியர்களின் வருமானம்
பல்வேறு நாடுகளில் இருந்து குடிபெயர்ந்த குடும்பங்களின் சராசரி வருமானத்தை விட இந்திய குடும்பங்களின் சராசரி வருமானம் சற்றே அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம் அங்குள்ள ஐடி நிறுவன வேலை வாய்ப்புகளாகும். அந்த வேலைகளுக்கு தேவையான திறமையுடன் உள்ளவர்கள் பல நாடுகளில் இருந்து கிடைக்காததால், அந்த வாய்ப்பு இந்தியர்களுக்கு அதிகமாக கிடைக்கிறது.
இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் நகர்ப்புறங்களிலும் சிறிய ஊர்களிலும் பெரும்பாலும் ஒரு கோவில் அமைந்திருக்கிறது. அவை நன்கு பராமரிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கோவில்கள் பக்தியை பரப்புவதோடு மட்டுமல்லாமல், ஆன்மீகத்தை வளர்க்கவும், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கலைநயத்துடன் வளர்க்கவும் முக்கிய மையங்களாக செயல்படுகின்றன.
இந்திய கலாச்சாரம்
தமிழ் சங்கங்கள் மற்றும் ஆந்திரா, மலையாளம் போன்ற பிற மாநில சங்கங்கள் மூலம் குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. உதாரணமாக, இந்திய இசை, விளையாட்டு, இந்திய நடனம் போன்ற போட்டிகள் பொங்கல், தீபாவளி, தமிழ் புத்தாண்டு போன்ற விழாக்களில் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கும் பெரியவர்களுக்கும் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்படுகிறது. இவை இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையை மறக்காமல் இருக்கவும், தாய்நாட்டுடன் தொடர்பை பேணவும் உதவுகின்றன.
அமெரிக்காவில் உள்ள இந்திய குடும்பங்கள் ஆரம்பத்தில் சிறிய அபார்ட்மெண்ட்களில் வாடகைக்கு தங்கி, பின்னர் தனி வீடுகளை வாங்குகின்றனர். வங்கிகள் சுமார் 30 ஆண்டுகள் வரை கடன் எளிதாக வழங்குவதால், வீடுகளை வாங்குவது சுலபமாகிறது. வாடகை மிகவும் அதிகமாக இருப்பதால், சொந்த வீடு வாங்குவது நல்லது என்று நினைக்கின்றனர்.
வீடுகளும் வசதிகளும்
ஆனால், இங்கு உள்ள வீடுகளில் சுமார் 90% வீடுகள் மரம் மற்றும் அட்டை போன்ற பொருட்களால் கட்டப்பட்டவை. சுமார் 10% வீடுகள் மட்டுமே கான்கிரீட் அல்லது கற்கள் கொண்டு கட்டப்பட்டவை. கட்டிடத் தொழிலாளர்கள் குறைவு மற்றும் அதிக குளிர், அதிக வெப்பம் போன்ற காலநிலை காரணங்களால் இத்தகைய கட்டுமான முறைகள் பயன்பாட்டில் உள்ளன.
இவ்வாறான வீடுகளாக இருந்தாலும், அவற்றின் மதிப்பு இந்திய அளவில் சுமார் 5 முதல் 6 கோடி ரூபாய் வரை இருக்கும். அமெரிக்கா பரந்த நிலப்பரப்பைக் கொண்ட நாடாக இருப்பதால் நிலம் பற்றாக்குறை இல்லை. ஆகவே கட்டிட கட்டுமான செலவு மட்டும்தான்.
அனைத்து வீடுகளிலும் ஏர் கண்டிஷனிங், ஹீட்டர், வாஷிங் மெஷின், டிரையர், கேஸ் கனெக்ஷன், மின்சார அடுப்பு, கிச்சன் கேபினெட், டிஷ்வாஷர் போன்ற அனைத்து வசதிகளும் பொதுவாக உள்ளன. அமெரிக்காவில் எந்த மூலையில், எந்த வீட்டிற்குச் சென்றாலும் தண்ணீர் மற்றும் வெந்நீர் பற்றாக்குறை இல்லை. மின்சாரம் தடைப்படும் நிலை மிகவும் அரிது.
கார்கள் வாங்குவதற்கு எளிதாக கடன் கிடைப்பதால், பலரும் உயர்ந்த விலையுள்ள கார்கள் வாங்குகின்றனர். ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் கூட அதிக வரி இல்லாததால் அதிக விலை ஏறுவதில்லை. ஆனால் எந்த பொருளையும் மீண்டும் விற்கும்போது அதன் விலை மிகவும் குறைவாகவே கிடைக்கும். ஆகவே சேமிப்பது கடினம்; அனுபவிப்பது மட்டுமே மிச்சம்.
சேமிப்பது சிரமம்
துபாய் போன்ற நாடுகளில் வேலை செய்து இந்தியாவில் பணத்தை சேமித்து இந்தியாவில் சொத்து வாங்குவது போல, அமெரிக்காவில் சேமித்து தாய்நாட்டில் சொத்து வாங்குவது சற்று கடினமாகும். காரணம், பெரும்பாலான வருமானம் அங்குள்ள செலவுகளுக்கே செல்கிறது.
இருப்பினும், இந்தியர்கள் கடினமாக உழைத்து, சவால்களை சமாளித்து, வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்து வெற்றி பெற்று வருகின்றனர்.
- Vellaiyappan Lakshmanan
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
