தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உலக தமிழர்/வெளிநாட்டு தகவல்கள்/அமெரிக்காவிலிருந்து நான்... 2

அமெரிக்காவிலிருந்து நான்... 2

அமெரிக்காவிலிருந்து நான்... 2


ஏப் 22, 2026

Follow on GoogleFavourite on Google

ஏப் 22, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

மன்னர் பட்டாம்பூச்சி - Monarch Butterfly வளர்ப்பு



( “அமெரிக்காவிலிருந்து நான்”


இந்த தலைப்பில் உங்கள் அனுபவங்கள் மற்றும் பகிர விரும்பும் கட்டுரைகள் தினமலரில் வாரம் ஒருமுறை பதிவிட முன்முயற்சி எடுத்துள்ளேன்.


உங்கள் பெயர் மற்றும் புகைப்படத்தோடு உங்கள் கட்டுரை வெளியிடப்படும்!


கட்டுரைகள்


• தமிழ் சார்ந்தவை (1-2 பக்கம்)


• எந்த தலைப்பிலும் அனுப்பலாம் — அனுபவங்கள், நினைவுகள், பயனுள்ள கருத்துகள், பொருளாதாரம், இந்தியாவின் வளர்ச்சி- டிஜிட்டல் இந்தியா


பகிர்வது எப்படி?


• எழுத விரும்புபோர், மெசேஜ் மூலம் என்னிடம் தொடர்பு கொள்ளுங்கள்


• ஷீலா ரமணன்


• 210 843 7620


உலகம் உங்களை உற்று நோக்கட்டும்!!)


நான் கவிஞர். நளினி சுந்தரராஜன், அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்திலிருந்து. நாங்கள் வசிப்பது நான்கு பருவகாலங்களும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய சிற்றூர் (Shorewood). இங்கே ஒவ்வொரு ஊரிலும் நூலகம் இருக்கும். நூல்கள் வாசிப்பு தவிர கலை, அறிவியல் தொடர்பான நிகழ்வுகளும் அங்கே நடக்கும். சில வருடங்களுக்கு முன்பு வீட்டில் Monarch Butterfly (மன்னர் பட்டாம்பூச்சி) வளர்ப்பு பற்றி ஒருவர் விளக்க உபகரணங்கள், வலைப் பெட்டி போன்றவற்றுடன் விரிவான உரை நடத்தினார். அன்று கேட்டறிந்த தகவல் அருமையாக இருந்தது.


தேனீக்களைப் போல பட்டாம்பூச்சிகளும் தீவிர மகரந்தச் சேர்க்கையாளர்கள் (pollinators). இவை தேனுக்காக பூக்களுக்குச் செல்லும்போது, தற்செயலாக மகரந்தத் துகள்களை ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு எடுத்துச் செல்கின்றன. இந்த மகரந்த இடமாற்றம் பூக்கும் தாவரங்கள் விதைகளை உண்டாக்க உதவுகிறது, அவை பரவி மேலும் பல செடிகளாக வளர்கின்றன. இது ஒரு சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க உதவுகிறது. இந்த அருஞ்செயலில் மொனார்க் பட்டாம்பூச்சிகளின் பங்கு கூடுதல். இயற்கையின் சுழற்சிக்கு மிக அவசியம் மகரந்தச் சேர்க்கை.


இயற்கையில் சிலந்தி, எறும்பு மற்றும் குளவிகள் போன்ற வேட்டையாடிகளால், மொனார்க் பட்டாம்பூச்சிகளின் முட்டைகளில் 5%க்கும் குறைவானவை மட்டுமே முழு வளர்ச்சியடைந்த பட்டாம்பூச்சியாக மாறுகின்றன. ஆனால் அவற்றை வீட்டில் பாதுகாப்பாக வளர்த்து முழுமை அடைந்த நிலையில் பறக்க விடுவதன் மூலம் அவற்றின் உயிர்வாழும் விகிதம் பன்மடங்கு அதிகரிக்கிறது.


வட அமெரிக்காவில் இளவேனிற் காலத் (ஏப்ரல்-மே) பட்டாம்பூச்சிகள் முட்டையிடத் துவங்கும். இது வேனிற் காலம் தொடர்ந்து 3 முதல் 4 மாதங்கள் வரை நீடிக்கும். அதன் பிறகு குளிர்காலம் தொடங்கும் போது, இந்த மொனார்க் பட்டாம்பூச்சிகள் தெற்கே சுமார் 2,000 மைல்கள் தொலைவில் உள்ள வெப்பமான மெக்சிகோ நாட்டிற்குப் பறந்து செல்கின்றன.


இந்தத் தகவல்கள் அறிந்து கொண்ட பின்னர் பலருக்கு பட்டாம்பூச்சி வளர்ப்பில் ஆர்வம் வர, அவைகளை வளர்க்க வலைப்பெட்டிகள் செய்தோம். எங்கள் ஊர் சமூக மொனார்க் வளர்ப்பு திட்டம் உருவானது. நூலகத்திலும் பட்டாம்பூச்சி வளர்ப்பு நடக்கும். தனியாக ஒரு முகநூல் பக்கத்தில் ஆண்டுதோறும் எத்தனை பட்டாம்பூச்சிகள் வளர்க்கப்பட்டன என்று பதியப்பட்டது.


எங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள எருக்கஞ்செடி இலைகளிலிருந்து (Milkweed plants) மொனார்க் பட்டாம்பூச்சி முட்டைகள் உள்ள இலைகளைச் சேகரித்து, குட்டிக் கம்பளிப்புழுக்களாகப் பொறியும் வரை காத்திருப்போம். பிறகு அவற்றை சிறிய பெட்டியில் இட்டு எருக்கஞ்செடி இலைகளை தினமும் உணவாகக் கொடுத்து (அது மட்டும்தான் உண்ணும்), பெரிய புழுவாக வளரந்தவுடன் வலைப்பெட்டியில் இலைப் படுக்கையில் விடுவோம். பெரிய புழுக்கள் நிறைய இலைகள் உண்ணும். Hungry caterpillars என்பார்கள்.


பச்சை நிற கம்பளிப்புழு வலைப்பெட்டியின் உள்கூரை மீது தன் உடலிலிருந்து பிசின் போன்ற திரவத்தைக் கக்கி அதில் ஒட்டிக் கொண்டு தலைகீழ் தவம் செய்ய ஆரம்பிக்கும். இந்த நிலை ஆங்கில எழுத்து J வடிவில் இருக்கும். ஓரிரு நாட்களில் தன்னைச் சுற்றி கூடமைத்து (Chrysalis) உள்ளே உறங்கும். அந்த மரகதப்பச்சைக் கூடு மிக அழகாக இருக்கும். சில நாட்கள் கழித்து பச்சைக் கூடு அடர் பிரவுன் நிறமாகும். உள்ளே பட்டாம்பூச்சி இறக்கையின் ஆரஞ்சு-பிரவுன் வண்ணம் தெரியும்.


இறுதியாக, கூடு உடைத்து அழகான மொனார்க் பட்டாம்பூச்சி வெளிவரும் அதிசய மாற்றம் நிகழும் காட்சி மிக அற்புதமாக இருக்கும். சில மணி நேரம் அது இறக்கை விரித்து படபடக்கும் வரை காத்திருந்து பின்னர் அதனை இயற்கையில் பறக்க விடுவோம். முட்டை முதல் ஒரு பட்டாம்பூச்சி வர 2-3 வார காலம் ஆகும். அவைகளைப் பறக்க விடும்போது செல்லப்பிராணிகளைப் பிரிந்து செல்வது போல் ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்றாலும், ஒரு நல்ல காரணத்திற்காக இதைச் செய்வது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.


இயற்கையை வளமாக வைத்திருக்க எங்களது இந்த பங்களிப்பு கடலில் ஒரு துளி போன்றதுதான். ஆனால் தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும் அழிந்துபோகும் நாள், இந்த உலகின் அழிவிற்கான தொடக்கமாக அமையும் என்பதால் அதை நாம் தடுக்க இயன்ற வரை ஏதேனும் செய்து கொண்டே இருப்போம்.


~கவிஞர். நளினி சுந்தரராஜன்.


விஸ்கான்சின், வட அமெரிக்கா.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us