
கெசன் தமிழ்ச்சங்கம் தொடக்கம்
'திரை கடல் ஓடியும் திரவியம் தேடு' என்று சொன்ன 'கொன்றை வேந்தன்' அவ்வையார், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிராங்க்ஃபர்ட் நகருக்கு வந்திருந்தால் நிரம்ப சந்தோஷப்பட்டிருப்பார். ஆம், அன்று தான் 'கெசன் தமிழ்ச் சங்கம்' உதயமான நாள்.
தமிழ்நாட்டிலிருந்து ஜெர்மனிக்கு வந்திருந்த அனைத்து தமிழ் உள்ளங்களும் ஒன்றிணைந்த நாள். நீண்ட நாட்களுக்குப் பின் ஒருவரை ஒருவர் பார்த்து குசலம் விசாரித்து சந்தோஷமாகி உள்ளம் களித்த நாள். இந்த மாதிரியான விழாக்கள் தான் நம் தமிழ் கலாச்சாரத்தை ஜெர்மன் சமூகத்தில் வாழும் தமிழ் மக்களிடையே ஒன்றிணைக்க உதவுகிறது. அப்படியானால் 'இதைத்தொடர்ந்து செய்தால் என்ன!' என்ற கேள்விக்கு கிடைத்த பதில் தான் 'கெசன் தமிழ்ச் சங்கம்'.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற திருவள்ளுவரின் வார்த்தைகளை அடிநாதமாகக் கொண்டு ஜெர்மனியில் புதிதாக பிறந்திருக்கிறது கெசன் தமிழ்ச் சங்கம்.
கடந்த சனிக்கிழமை கெசன் தமிழ்ச் சங்க தொடக்க விழா மாலை 4:30 மணிக்கு ஆரம்பமானது. ஹாலுக்குள் மங்கல இசை மிதமான சத்தத்தில் நயமாக ஒலித்துக் கொண்டிருக்க குளிருக்கு இதமாக ஹீட்டரும் மென்அனல் பகிர்ந்து கொண்டிருந்தது. வந்திருந்த மக்கள் அனைவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்த மகிழ்ச்சி, உற்சாக பேச்சை பரிமாற ஹால் முழுக்க சந்தோஷம் நிரம்பி வழிந்தது.
விழா தலைவராக பிராங்க்ஃபர்ட் நகர நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் குமார் நடுநாயமாக வீற்றிருக்க, ஜெர்மன் மொழி பயிற்சியாளர் ஜியோர்க் கோபெல் மற்றும் தமிழ் நாட்டிலிருந்து வந்திருந்த அதிகாரிகள் உடன் அமர தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.
சங்கத்தின் செயலாளர் கவிதா சுரேஷ்குமார் வரவேற்புரை நிகழ்த்த, கிர்ஷிகா சுரேஷ்குமார் மற்றும் இவான் ஜெகதீஷ் இருவரும் தமிழ் மற்றும் ஜெர்மன் மொழியில் முன்னுரை தந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.
தமிழ்ச் சங்கத் தலைவர் ஞான செல்வ ஜெகதீஷ் பேசும்போது, 'தமிழ் கலாச்சாரம் என்பது நமது அடையாளம், ஒரு நினைவு. அதே நேரத்தில் ஜெர்மன் சமூகமும் நம்பிக்கை, பொறுப்பு, சிந்தனை ஆகிய மதிப்புகளில் வளமானது.இந்த இரண்டு உலகங்களையும் இணைக்கும் பாலம் தான் இப்போது தொடங்கப்பட்டிருக்கும் கெசன் தமிழ் சங்கம். இது தமிழ் கலாச்சாரத்தை ஜெர்மன் சமூகத்துடன் இணைந்து வளர்வதற்கான இடம்' என்று குறிப்பிட்டார். கூடவே புதிதாக பதவியேற்றிருக்கும் துணைத்தலைவர் சுரேஷ்குமார் வேலுச்சாமி, செயலாளர் கவிதா சுரேஷ்குமார், பொருளாளர் விஜயராகவன் பத்மநாபன், துணைச்செயலாளர் டாக்டர் ஷர்மிளா ராஜா, துணைப்பொருளாளர் வளன் ஜாய், திட்ட இயக்குநர் ராஜா பாலசுப்பிரமணியன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தமிழரசன் அபிமன்யு, கிளாட்வின் செல்வராஜ் மற்றும் ஷாநவாஸ் தப்ரேஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சிறுவன் யோகித் தன்னுடைய கிட்டாரில் தமிழ்ப் பாடலை இசைக்க, மக்கள் 'அது என்ன பாடல்?' என்று கண்டுபிடிக்க, விழா அரங்கமே உற்சாகத்தில் திளைத்தது. வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பூங்கொத்து மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
துணைச்செயலாளர் டாக்டர் ஷர்மிளா ராஜா வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார். விழா முடிவில் எல்லோருக்கும் அருமையான உணவு இந்தியன் பெப்பர் பொற்கொடி அவர்களால் வழங்கப்பட்டது.
ஜெர்மனியின் கெசன் மாநிலம் தந்திருக்கிற கெசன் தமிழ்ச் சங்கம் தொடர்ந்து பல வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்து வெற்றி நடை போட நம் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
-நமது செய்தியாளர் ஜேசு ஞானராஜ் ( ஜேசுஜி)
Advertisement

