
வுப்பர்டல் என்ற அழகிய நகரம் ஜெர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் வுப்பர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த நகரம் அதன் தொழில்துறை பாரம்பரியம், புதுமையான போக்குவரத்து அமைப்பு மற்றும் கலாச்சார ஈர்ப்புகளுக்கு பெயர் பெற்றது.19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், தொழில்துறையில் முன்னேறிவரும் நகரங்களில் ஒன்றாக வுப்பர்டல் திகழ்ந்தது. அப்போது வளர்ந்து வரும் மக்கள்தொகை , அதற்கென நகர்ப்புறங்களை விரிவுபடுத்துதல் என்று பல வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுக்கும்படியான வழிமுறைகள் தோன்றின. போக்குவரத்துக்கென தடங்கள் அமைக்க வேண்டி வந்த போது - மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் குறைந்த இடவசதி, தனியார் நிலங்களைக் கைவசப் படுத்துதல், கட்டடங்களை இடித்துக் கட்டுதல் போன்ற பல போக்குவரத்துச் சவால்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது. எனவே தரைமட்டத்தில் அமைக்கப்படும் பாரம்பரிய இரயில், டிராம் இவைகளுக்கு மாற்றாக ஒரு அமைப்பு தேவைப்பட்டபோது வடிவமைக்கப் பட்டதே தனித்துவமான மோனோரயில் அமைப்பு. இது ஒரு தொங்கும் இரயில் அமைப்பு. இந்த புதுமையான வடிவமைப்பு, தெருக்கள் மற்றும் ஆற்றின் மேலே நிர்மாணிக்கப்பட்டதால் நகராட்சி உள்கட்டமைப்புக்கு எந்த விதமான இடையூறும் இன்றி அமைந்தது.இந்த இரயில் நிறுவனம் 1901 இல் திறக்கப்பட்டது. இது வுப்பர் ஆற்றின் மேலாகவும் மற்றும் நகரத்தின் வழியாக சுமார் 13.3 கிலோமீட்டர்கள் (8.3 மைல்) தூரம் வரை நீண்டுள்ளது.பெரிய எஃகு தூண்களால் கட்டப்பட்ட தண்டவாளங்களுக்குக் கீழே இந்த இரயில்கள் பற்சக்கரங்களால் பற்றிக்கொண்டு தலைகீழாக தொங்கியவண்ணம் செல்கின்றன. இதன் ஊடு பாதையில் பல நிறுத்தங்களும் உண்டு. புதுமையான பொறியியலுக்கு கண்கவர் உதாரணமான இந்த இரயில் வண்டிகள் பயணியருக்கும், பார்வையாளர்களுக்கும் ஒரு தனித்துவமான அனுபவத்தை அளித்துக்கொண்டிருக்கிறன.இது இன்னும் செயல்பாட்டில் உள்ள உலகின் மிகப் பழமையான மின்சார ரயில் பாதைகளில் ஒன்றாகும். மேலும் உலகிலேயே இங்கு மட்டுமே இது போன்ற தலைகீழாக ஊர்ந்து செல்லும் இரயில் வண்டிகளைக் காண முடியும்.வுப்பர்டல் நகரின் முக்கிய அடையாளமாகவும், பிரபலமான சுற்றுலாத்தலமாகவும் 100 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு நம்பகமான போக்குவரத்து வசதியை வழங்கி வரும் இந்த இரயில் அமைப்பை சென்ற வாரம் கண்டு களித்தேன்.இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்!- தினமலர் வாசகி ஹேமா ராமச்சந்திரன்
https://youtu.be/WiZfP-rCyN8
https://youtu.be/KzzRIn8gSb0
Advertisement