/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தாரில் பாரதி மன்றம், அட்லஸ் மருத்துவ மையம்'இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்
/
கத்தாரில் பாரதி மன்றம், அட்லஸ் மருத்துவ மையம்'இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்
கத்தாரில் பாரதி மன்றம், அட்லஸ் மருத்துவ மையம்'இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்
கத்தாரில் பாரதி மன்றம், அட்லஸ் மருத்துவ மையம்'இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்
மார் 07, 2025

கத்தாரில் இயங்கிவரும் தமிழ் அமைப்பான 'பாரதி மன்றம்' ஒவ்வொரு ஆண்டும் சமூக நலப்பணியாக கத்தாரில் வாழும் இந்திய - தமிழ் மக்களுக்காக, குறிப்பாக கடைநிலை தொழிலாளர்கள் பயன்படும் விதமாக இலவச மருத்துவச் சேவையை செய்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அட்லஸ் மருத்துவ மையத்துடன் கைகோர்த்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி வெள்ளிக்கிழமையன்று 'பார்வா வில்லேஜ்' பகுதியில் அமைந்துள்ள அட்லஸ் மருத்துவ வளாகத்தில், இந்தச் சேவை நிகழ்வை பாரதி மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. கிட்டத்தட்ட 320 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த பாரதி மன்றத்தின் விலையில்லா மருத்துவ முகாமில் பயனடைந்தனர்.
உணவு உட்கொள்ளும் முன் இரத்த சர்க்கரை அளவு, இரத்தக் கொழுப்புவகைப் பரிசோதனை (லிபிட் டெஸ்ட்), சிறுநீரக செயல்பாடு சோதனை (RFT), இரண்டு கல்லீரல் நொதிகளில் அளவிட்டு நோயறிதல் சோதனையான SGOT SGPT, ஹீமோகுளோபின் மதிப்பீடு, உயரம், எடை, ரத்த அழுத்தம், உடல் பருமன் குறியீடு ஆகிய மருத்துவ சோதனைகளும், பொதுமருத்துவ மற்றும் பல் மருத்துவ ஆலோசனைகளும் மக்கள் நலன் கருதி நிகழ்வில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு பாரதி மன்ற நிர்வாகக் குழுவின் வழிகாட்டுதல் மற்றும் கத்தார் இந்திய தூதரகத்தின் ஆதரவுடன் சீரிய வழியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதுமட்டுமின்றி, பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்கள், பாரதி மன்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அட்லஸ் மருத்துவ மையத்தின் நிர்வாகம், அதன் பணியாளர்களின் ஒத்துழைப்பால் இந்நிகழ்வு வெற்றிநிகழ்வாக பாராட்டப்பட்டது.
இந்திய கலாச்சார மையம், இந்திய சமூகநல மையம், இந்திய விளையாட்டு மையம் மற்றும் இதனோடு இணைப்பில் இயங்கும் இணை, துணை அமைப்புகளின் மேலாண்மை குழுவினர் பலரும் சிறப்பு விருந்தினர்களாக மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பெருமை சேர்த்தனர். இந்த மருத்துவ சிறப்பு முகாமின் முக்கிய விருந்தினராக இந்திய தூதரகத்தின் டாக்டர் வைபவ் ஏ. தண்டாலே, ஐ.சி.சி.யின் ஆலோசனைக் குழுத் தலைவர் பாபுராஜன், ஐ.சி.பி.எஃப்-ன் ஆலோசனைக் குழுத் தலைவர் கே.எஸ்.பிரசாத், ஐ.எஸ்.சி. தலைவர் ஈ.பி. அப்துல் ரஹ்மான்
ஐ.சி.சி.யின் பொதுச் செயலாளர் மற்றும் பாரதி மன்றத்தின் மூத்த முதன்மைச் செயலாளர் மோகன்குமார், சமன்வயம் தலைவர் கும்மால் சிங் தாபி மற்றும் சமன்வயம் முன்னாள் தலைவர் ரவீந்திர பிரசாத் ஆகியப் பெருந்தகைகள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
பாரதி மன்ற மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர் ராம் பிரசாத் மற்றும் பாரதி மன்ற ஒருங்கிணைப்பாளர்களான விஜூ, கார்த்திக் கடப்பா, ராஜா அயோத்திராமன், மாறன் ஆகியோரின் உழைப்பும், பங்களிப்பும் நிகழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.
இந்த நிகழ்வை வெற்றியடையச் செய்த நல்லுள்ளங்கள் அனைவரையும் பாரதிமன்றத்தின் கார்த்திக் கடப்பா தனது வரவேற்புரையிலும், ராஜா அயோத்திராமன் தனது நன்றியுரையிலும் வெகுவாகப் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் எஸ். சிவ சங்கர்
Advertisement