/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தர் தமிழர் சங்கத்தின் இளையராஜா இன்னிசை விருந்து!
/
கத்தர் தமிழர் சங்கத்தின் இளையராஜா இன்னிசை விருந்து!
கத்தர் தமிழர் சங்கத்தின் இளையராஜா இன்னிசை விருந்து!
கத்தர் தமிழர் சங்கத்தின் இளையராஜா இன்னிசை விருந்து!
அக் 15, 2025

“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்ற தொனிப்பொருளோடு வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள கத்தர் தமிழர் சங்கம், தனது வெள்ளிவிழாவை சிறப்பிக்கும் வகையில், இளையராஜாவின் இன்னிசை விழாவை கத்தர் தேசிய மாநாட்டு மையத்தில்மிகுந்த சிறப்புடன் நடத்தியது.
நிகழ்ச்சியில் பாடகர்கள் SPB சரண், ஹரிச்சரண், மதுபாலகிருஷ்ணன், யுகேந்திரன், பாடகிகள் விபவாரி ஆனந்த் ஜோஷி, அனன்யா குட்லி, சுசித்ரா வெங்கடரமணன், அனிதா கார்த்திகேயன், பிரியா ஹிமேஷ், கலைஞர்கள் சரத் சந்தோஷ், ஷெண்பகராஜ், ஸ்ரிஷா அண்ட்ரா கலந்து கொண்டு, இளையராஜா இசையில்40பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். இசைஞானி இளையராஜாவும் பல பாடல்கள் பாடி, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
சுமார்10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இசைஞானி இளையராஜா இசையின் மாயையில் மூழ்கினர். இந்தியா, பஹ்ரைன், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் மற்றும்கனடாபோன்ற பல நாடுகளிலிருந்தும் ரசிகர்கள் வந்திருந்து இசை நிகழ்ச்சியை கண்டு களித்தனர். நான்கு மணி நேரம் இடைவிடாது இசை விருந்து வழங்கிய இசைஞானிக்கு, நிகழ்ச்சியின் முடிவில் ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டி ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.
இளையராஜாவுக்கு கத்தர் தமிழர் சங்கத்தின் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது. கத்தர் தமிழர் சங்கத்தின் வெள்ளிவிழா மலர் இசைஞானி இளையராஜாவால் வெளியிடப்பட்டது. இந்திய தூதரகத்தின் துணைத் தூதர் சந்தீப் குமார், தூதரக அதிகாரி வைபவ் டண்டலே, ஐசிசி தலைவர் மணிகண்டன், ஐசிபிஃப் தலைவர் ஷாநவாஸ், ஐஎஸ்சி தலைவர் அப்துல் ரஹ்மான், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வானொலி தொகுப்பாளர் பிரியா விழாவைத் தொகுத்து வழங்கினார். கத்தர் தமிழ் எஃப்எம், ஸ்கை தமிழ் மற்றும் க்யூ தமிழ் வானொலி சேனல்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நிகழ்ச்சி புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
பத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் பார்வையாளர்களுக்கு சுவையான உணவு வகைகளை விற்பனை செய்தன. ரய்யான் நீர் நிறுவனம் பார்வையாளர்களுக்கு இலவசமாகத் தண்ணீர் வழங்கியது குறிப்பிடத்தக்கது. பார்வையாளர்கள் வரிசையில் நின்று பொறுமையுடன் அரங்கில் நுழைந்து அமர்ந்து, தேவையற்ற சத்தம் செய்யாமல் அமைதியாக நிகழ்ச்சியை கண்டு களித்தது,ஒழுங்கு மற்றும் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருந்தது.
நிகழ்ச்சியை திறம்பட நடத்திய கத்தர் தமிழர் சங்க ஏற்பாட்டுக் குழுவினர், நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஸ்பான்சர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு அனைவரும் பாராட்டுத் தெரிவித்தனர்.
இசைஞானியின் குரலும், இசையும் அரங்கம் முழுவதும் ஒலித்த அந்த மாலை, கத்தரில் வாழும் தமிழர்களுக்கு மறக்க முடியாத நினைவாக அமைந்தது. விழா இரவு 11 மணிக்கு இனிதே நிறைவடைந்தது.
- கத்தாரிலிருந்து தினமலர் வாசகர் வி.நாராயணன், பொதுச் செயலாளர், கத்தார் தமிழ்ச் சங்கம்
Advertisement