
சிங்கப்பூர் ஆலயத்தில் நவராத்திரி ஏழாம் நாள் விழா
சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் நவராத்திரி ஏழாம் நாள் விழாவில் அம்பிகை ஸ்ரீ மஹா லட்சுமியாக காட்சியளித்து அருள்பாலித்தார். தலைமை அர்ச்சகர் ஆகம ப்ரவீண சிவஸ்ரீ நாகராஜ சிவாச்சாரியார் இன்றைய காட்சியை விளக்குகையில் “ இந்து சமயத்தில் மஹா லட்சுமி செல்வம் - அழகு - அதிர்ஷ்டம் - மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் அடையாளம் என்றார். அவர் மேலும் கூறுகையில் மஹா விஷ்ணுவின் துணைவியான லட்சுமி தேவி பாற் கடலிலிருந்து தோன்றியதாகவும் பொருட் செல்வத்தை வாரி வழங்கும் இறையான்மை மிக்க தெய்வம் என்றும் தக்க“ ஸ்லோகங்களை மேற்கோள் காட்டி கூறினார்.
தாமரை சிம்மாசனத்தில் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது ஆன்மிக விடுதலையைக் குறிக்கும் என்றார். திருமகள் - அலை மகள் - மலர் மகள் என்றெல்லாம் அழைக்கப்படும் மஹா லட்சுமியைப் போற்றும் ஸ்லோகங்களை மெய் சிலிர்க்கும் வண்ணம் எடுத்துரைக்கும் போது பக்தப் பெருமக்கள் “ இன்று புதிதாய்ப் பிறந்தோம் “ என உணருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரங்களைத் தமக்கே உரிய வெண்கலக் குரலில் இசையோடு பாடியும் தத்வார்த்தமாக விளக்குவதும் பக்தப் பெருமக்களை ஆன்மிக உணர்வு மிக்கவர்களாகப் பரிணமிக்கச் செய்கிறது. கலையரங்கிலும் அவ்வந்நாட்களின் சிறப்புகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் நிகழ்வுகள் நடைபெறுவது அனைவரையும் கவர்த்திழுக்கிறது. ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சுரேஷ்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்
Advertisement