/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் ஆலய தீ மிதிப் பெரு விழா கோலாகலம்
/
சிங்கப்பூர் ஆலய தீ மிதிப் பெரு விழா கோலாகலம்
அக் 14, 2025

சிங்கப்பூர்வாழ் தமிழர்களின் பாரம்பரியத்தையும் தொன்மையையும் மத நல்லிணக்கத்தையும் பறைசாற்றும் சவுத் பிரிட்ஜ் சாலை அருள்மிகு மாரியம்மன் ஆலயத் தீ மிதிப் பெரு விழா அக்டோபர் 12 ஆம் தேதி பக்தி வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய்ப் பொலிய வெகு விமரிசையாக நடைபெற்றது. சிங்கப்பூர் கலாச்சார சமூக இளையர் துறை அமைச்சர் டேவிட் நியோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
ஆலய நிர்வாகமும் இந்து அறநிலைய துறையும் இணைந்து நடத்திய இவ்விழாவில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில் காவல் துறையும் நிலப் போக்கு வரத்து ஆணையமும் இணைந்து பணியாற்றி தெய்விக சூழலை உருவாக்கியமை பாராட்டுக்குரியவை. முதல் நாள் இரவே தலைமைப் பண்டாரம் வேணுகோபால் திருநாவுக்கரசு சிராங்கூன் சாலை அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலிருந்து பக்தப் பெரும்படை சூழ நான்கரை கி.மீ தொலைவு எழில்மிகு திருக் கலசத்தைச் சிரமேலேற்றி பாத யாத்திரையாக ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் வந்தடைந்து பூக்குழியில் இறங்க தீ மிதித் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. அவரைப் பின்தொடர்ந்து ஏற்கெனவே பதிவு செய்து கொண்ட பக்தர்கள் பூக்குழியில் இறங்கினர்.
இவ்விழா மகா பாரதக் கதையோடு பின்னிப் பிணைந்தது. இதையொட்டியே பூர்வாங்க சடங்குகள் ஜூலை ஆகஸ்டு மாதங்களிலேயே தொடங்கின. கொடி ஏற்றுதல் - பெரியாச்சி பூஜை, திரௌபதி அம்மனுக்கு திருக் கல்யாணம், அர்சுனன் தபசு, - அரவான் பூஜை, அரவான் களப்பலி, தர்மராஜா பட்டாபிஷேகம் எனப் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. 1840 களில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்திலும் எவ்விதத் தடையின்றி, இடையூறுமின்றி இவ்விழா நடந்தமைக்கு வரலாறு உண்டு.
விரதமிருந்த பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் நிர்வாகம் செய்திருந்தமை பாராட்டுக்குரியவை. அருள்மிகு மாரியம்மன் சர்வ அலங்கார நாயகியாக வெள்ளி ரதத்தில் திரவீதி உலா வந்து அருள்பாலித்தார். இப்பகுதியே பக்தி மயமாகத் திகழ்ந்தது. தமிழகப் பிரபல தெய்வீக இசை வல்லுநர் வி.மகாலிங்கம், அருணா ரவீந்திரன் மற்றும் அகிலா ரவீந்திரன் குழுவினரின் பக்தி இசை வெள்ளத்தில் அன்று முழுவதும் பக்தர்கள் திளைத்தனர். பங்கேற்ற ஆயிரக் கணக்கானோர் எவ்வித இடையூறுமின்றி தரிசனத்திலும் அன்னதானத்திலும் கலந்து கொள்ள ஆலய நிர்வாகம் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
- சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement