/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ மஹா சண்டி யாகம் - விஜயதசமி விழா
/
சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ மஹா சண்டி யாகம் - விஜயதசமி விழா
சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ மஹா சண்டி யாகம் - விஜயதசமி விழா
சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ மஹா சண்டி யாகம் - விஜயதசமி விழா
அக் 03, 2025

சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ மஹா சண்டி யாகம் - விஜயதசமி விழா
சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று நிறைவாக நவசண்டி யாகம் அக்.1 மற்றும் 2 ஆம் தேதிகளில் வெகு விமரிசையாக நடைபெற்றது. நவராத்திரி நாட்களில் மண்டபம் நிறை பக்தர்கள், கலையரங்கில் சிங்கப்பூர் பிரபல இசை பரத நடனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் கண்ணுக்கும் செவிகளுக்கும் விருந்து படைத்தன. செவிக்குணவு பெற்ற பின் ஆலய நிர்வாகத்தினரின் அறுசுவை அன்னதானப் பிரசாதம் அகமகிழ்வைத் தந்தது.
முத்தாய்ப்பு நிகழ்வாக விஜய தசமி அம்பு எறிதல் நிகழ்வு. விஜயதசமி நாளில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை வழிபட்டால் வளமான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். நவராத்திரி விழா நிறைவு பெற்ற மறுநாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. பல விதமான புராணக் கதைகள் கூறப்படுகின்றன. பராசக்தி மகிஷாசுரனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடிய நாளே விஜயதசமி எனப்படுகிறது. விஜய் என்றால் வெற்றி தசம் என்றால் பத்து. பராசக்தி 9 நாள் போரிட்டு 10 ஆவது நாள் பெற்ற வெற்றியே விஜய தசமி. இந்நாளில் ஆலயங்களில் “ அம்பு எறிதல் “ நிகழ்வு இதையே குறிக்கிறது. சிவ கிருஷ்ணா ஆலயத்தில் அம்பு எறிதல் நிகழ்ச்சி ' ஓம் சக்தி...பராசக்தி “ முழக்கத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
இத்துடன் நவசண்டி யாகம் பக்தப் பெருமக்களுக்கு பெரு விருந்தாய் அமைந்தது. அக்டோபர் முதல் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜை தொடங்கிற்று. 7.30 மணிக்கு பூர்ணாஹீதி - தீபாராதனை நடைபெற்று 8 மணிக்கு கொலு மண்டபத்தில் சரஸ்வதி பூஜையும் இரவு 9.30 மணிக்கு 64 யோகினி 64 பைரவர் பலியும் நடைபெற்றன. 2 ஆம் தேதி காலை 7 மணிக்கு யாக சாலை பூஜை துவங்கி 8 மணிக்கு அத்யாய ஹோமம் நடைபெற்றது. 10 மணிக்கு கோ மாதா பூஜையும் கன்யகா பூஜை - பிரம்ச்சாரி பூஜை தொடர்ந்தது. பத்து மணிக்கு சிறப்பு அபிஷேகமும் 11 மணிக்கு சௌபாக்கிய திரவிய சமர்ப்பணமும் கண்குளிர நடைபெற்றன. 12 மணிக்கு நடைபெற்ற கலசாபிஷேகம் மெய் சிலிர்க்க வைத்தது. 12 மணிக்கு மஹா தீபாராதனை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. மஹா சண்டி யாகம் - விஜய தசமி - அம்பு எறிதல் என கோலாகலமாக நடைபெற்ற விழா சர்வ அலங்கார நாயகியாக ஸ்ரீ அம்பாள் ஆலய வித்துவான்களின் மங்கல இசையும் பக்தர்களின் “ ஓம் பராசக்தி “ முழக்கமும் மிளிர ஆலயம் வலம் வந்து அருள் பாலித்தார். தலைமை அர்ச்சகர் ஆகம ப்ரவீண நாகராஜ சிவாச்சாரியார் விஜய தசமி பற்றி விரிவாக விளக்கியதுடன் ஒன்பது நாட்களும் நிரம்பி வழிந்த பக்தர்கட்குத் தம் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்ததோடு தம்மோடு ஒத்துழைத்த சக அர்ச்சகர்கட்கும் ஆலய மேலாண்மைக் குழுவினருக்கும் தமது நன்றியையும் தெரிவித்தார். ஆலய மேலாண்மைக் குழத் தலைவர் சுரேஷ்குமாரும் உணர்ச்சி பொங்க அர்ச்சகர்கள் - விழாவில் பங்கேற்ற பல்வேறு கலைஞர்கள் - நன்கொடையாளர்கட்குத் தம் நெஞ்சுநிறை நன்றியைத் தெரிவித்தார்.
- சிங்கப்பூரில் இருந்து நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்
Advertisement