/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் ஆலயத்தில் கலைமகள் விழா கோலாகலம்
/
சிங்கப்பூர் ஆலயத்தில் கலைமகள் விழா கோலாகலம்
அக் 03, 2025

சிங்கப்பூர் தொபாயோ பகுதியில் கருணையே வடிவாக எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் அக்டோபர் முதல் தேதி பக்தி திருவிழாவான நவராத்திரி வாரத்தில் அம்பிகை கலைமகளாக - சரஸ்வதியாக காட்சி அளித்து அருள்புரிந்தமை மெய்சிலிர்க்க வைத்தது. வெள்ளைத் தாமரையில் வீணா பாணியாக விஸ்வ ரூபத் திருக்காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். வழக்கம் போல மண்டபம் நிறை பக்தர் திருக் கூட்டத்திடை ஆலய வித்வான்களின் மங்கல இசை பக்திப் பிரவாகத்தைப் பெருக்கியது. இன்றைய நாள் சிறப்பு நிகழ்ச்சி வித்யாரம்பம்.
சரஸ்வதிக்கு உகந்த நாளான விஜயதசமியன்று குழந்தைகள் கல்விப் பயணத்தைத் தொடங்கும் போது அவர்கள் கல்வியில் சிறந்தோங்கித் திகழ்வர் என்பது ஐதீகம். ஒரு தட்டில் அரிசி அல்லது நெல் மணியைப் பரப்பி குழந்தைகளின் கை விரலால் ' அ “ என எழுதுவிப்பதை வித்யாரம்பம் என்பர். கலைமகளின் நல்லருளாசி இந்நாளில் முழுமையாகக் கிடைக்கும். ஏடு துவங்குதல் நிகழ்ச்சிக்குப் பெற்றோருடன் திரளாக வருகை புரிந்தோரிடை தலைமை அர்ச்சகர் வித்யாரம்பம் பற்றி விரிவாக விளக்கினார்.
நவராத்திரியின் பத்தாவது நாள் முப்பெரும் தேவியர்களான துர்க்கை - லட்சுமி - சரஸ்வதி ஆகிய மூன்று சக்திகளும் இணைந்து மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி பெற்ற நாளே விஜய தசமி. பராசக்தி வெற்றி பெற்ற நாள். இந்நாளில் தொடங்கும் நிகழ்வுகள் மென்மேலும் பெருகும்.
ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் ஏராளமான குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்வித்தது குறிப்பிடத் தகுந்ததாகும் பெற்றோர்களின் ஆர்வப் பெருக்கம் திகைக்க வைத்தது. ஆலய அர்ச்சகர்கள் தெய்விக உணர்வோடு வளரும் இளம் சிறர்களுக்கு வித்யாரம்பம் செய்வித்ததை அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர். கலையரங்கில் ஏழிசைக் கலைக் குழுவினரின் வாய்ப் பாட்டும் நீமா நடனப் பள்ளி மற்றும் லட்சுமி குழுவினரின் நடன நிகழ்ச்சிகளும் விழாவிற்கு முத்தாய்ப்பாய் மிளிர்ந்தன. அருட் பிரசாதத்துடன் அறுசுவை அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டது. ஆலய மேலாண்மைக் குழுவினர் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
- சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement