/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூரில் தமிழிசை மூவர் திருவுருவ ஓவியம் வெளியீடு
/
சிங்கப்பூரில் தமிழிசை மூவர் திருவுருவ ஓவியம் வெளியீடு
சிங்கப்பூரில் தமிழிசை மூவர் திருவுருவ ஓவியம் வெளியீடு
சிங்கப்பூரில் தமிழிசை மூவர் திருவுருவ ஓவியம் வெளியீடு
ஜூன் 10, 2025

ஆதி மும்மூர்த்திகள், சீர்காழி மூவர், தமிழிசை மூவர் என்று அழைக்கப்படும் சீர்காழி முத்துத் தாண்டவர்( 1525-_1600), தில்லையாடி அருணாச்சலக் கவிராயர்(1711-_1779), தில்லைவிடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை(1712_-1787)ஆகியோரின் திருவுருவப் படம் சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம்16ஆம் தளத்தில் தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்வில் வெளியிடப்பட்டது.
தற்காலத்தில் பெரும்பான்மையாகப் பாடப்பட்டு வரும் எடுப்பு(பல்லவி), தொடுப்பு (அனுபல்லவி), முடிப்பு (சரணம்) ஆகிய அங்கங்களைக் கொண்ட கீர்த்தனை வடிவிலான பாடல்களை உருவாக்கி இந்திய இசை உலகுக்குத் தந்த இம்மூவரின் திருவுருவப் படங்கள் கல்வி நிறுவனங்களிலும், இசை அரங்கங்களிலும் இடம் பெறவில்லை என்பதாலும் இம்மூவரும் தமிழ்பால் அன்பு கொண்ட அனைவராலும் கொண்டாடப்பட வேண்டும் என்பதாலும், இம்மூவரின் இசைப் பணிகளைத் தமிழ் சமுதாயத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழிசை மூவர்களின் உருவப்படங்களை வடிவமைக்கத் திட்டமிடப்பட்டு, அந்த பணியை சோழப் பெருவேந்தன் இராசேந்திர சோழனின் உருவப் படத்தை வடிவமைத்தவரான புதுச்சேரியை சேர்ந்த கலைமாமணி ஓவியர் ராஜராஜனிடம் வழங்கப்பட்டது.
கடந்த இரண்டு மாத காலத்தில் மூவர்களின் ஓவியம் பல்வேறு வரலாற்று தரவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. அவர்கள் வாழ்ந்த காலம், அவர்களின் குடும்பப் பின்னணி மற்றும் அவர்கள் இசைப்பணியின் செயல்பாடுகளை உள்வாங்கி அவர்களது ஓவியம் உருவாக்கப்பட்டது. கி.பி பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிந்தைய தமிழிசையின் பல்வேறு சூழல்கள் காரணமாக ஏற்பட்ட தொய்வின் நிலையை உணர்ந்து, அதன் மீட்டெடுப்பிற்கான ஒரு அங்கமாக தமிழிசை மூவர்களின் திருவுருவப் படங்கள், தற்காலத் தலைமுறையினர்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஓவியத்தில் தமிழிசை மூவர்களான முத்துத் தாண்டவர், அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை ஆகியோரின் திருவுருவங்கள், சீர்காழி சட்டைநாதர் கோவிலின் பின்னணியில் தீட்டப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு கவிமாலைக் காப்பாளர் மா.அன்பழகன் தலைமை தாங்க, அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் க.நெடுஞ்செழியன் முன்னிலை வகிக்க, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் பதிவாளர் ஆர்.ராஜாராமன் தமிழிசை மூவரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார்.
தமிழிசை மூவரின் இசைத்தொண்டு குறித்து முனைவர் மீனாட்சி சபாபதி சிறப்புரை ஆற்றினார். அவர் இம்மூவரும் மூத்த மும்மூர்த்திகள் என்பதைப் பல்வேறு தரவுகளோடு எடுதுரைத்தது பார்வையாளர்களைக் கவர்ந்தது. தமிழிசை மூவர், இராசேந்திர சோழன் ஆகியோரின் ஓவியங்கள் உருவான அனுபவங்களையும். தமிழக ஓவியங்கள் குறித்தும் ஓவியர் ராஜராஜன் பேசியது அனைவரையும் கவர்ந்தது.
இனி வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூரில் “தமிழிசை மூவர் விழா” எடுக்கப்படும் என்று தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகத் தலைவர் ப.புருடோத்தமன் அறிவித்தார்.
அத்துடன் இவ்விழாவில் ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் பயனுறும் வகையில் முனைவர் கி.திருமாறன், தியாக இரமேஷ், ப.புருடோத்தமன் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு அமைக்கப்பட்ட “முத்தமிழ்” இணைய இதழும் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகத்தின் செயலாளர் சங்கர்ராம் வரவேற்புரை அளிக்க, அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ப.கருணாநிதி நன்றி கூற, கழகத்தின் துணைத் தலைவர் செந்தில் சம்பந்தம் தொகுத்து வழங்க விழா இனிதே நிறைவேறியது.
நிகழ்ச்சியை தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழக நிர்வாகிகள் புருஷோத்தம்மன் பட்டுசாமி மற்றும் அவ்வமைப்பினர், அண்ணாமலைப் பல்கலைகழக முன்னாள் மாணவர் கருணாநிதி மற்றும் தமிழ் வரலாற்று மரபுடைக் கழகத் துணைத் தலைவர் செந்தில் சம்பந்தம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
- தினமலர் வாசகர் கார்த்திகேயன் நடராஜன்
Advertisement