/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
தமிழகத்தில் ஒரு நூலகம்: டெக்சாஸ் வாழ் தமிழர்கள் உதவி
/
தமிழகத்தில் ஒரு நூலகம்: டெக்சாஸ் வாழ் தமிழர்கள் உதவி
தமிழகத்தில் ஒரு நூலகம்: டெக்சாஸ் வாழ் தமிழர்கள் உதவி
தமிழகத்தில் ஒரு நூலகம்: டெக்சாஸ் வாழ் தமிழர்கள் உதவி
ஜூலை 27, 2025

டெக்சாஸ் வாழ் தமிழர்கள் உதவியுடன் தமிழகத்தில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இது தொடர்பாக சீதனம் அறக்கட்டளை சார்பாக சான் ஆண்டோனியாவாழ் வெங்கடேஷ் கண்டியர் கூறியதாவது:
இந்த நூலகம் அமைக்கப்பட்ட இடம் இலுப்பை தோப்பு, மேல்நிலை பள்ளி, ஆம்பலாப்பட்டு. இது தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 3000 குடும்பங்கள் வாழ்கின்றனர். ஏறத்தாழ 10 ஆயிரம் மக்கள் இங்கு காணப்படுகின்றனர்.
இந்த மேல்நிலை பள்ளிக்கூடம் இலுப்பை தோப்பு ( இலுப்பை மரங்கள் அதிகமாக காணப்படும் இடம்) என்ற இடத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இந்த பள்ளியில் 1500 க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்றுள்ளனர். கஜா புயல் ஏற்பட்ட பிறகு எங்களில் சிலர் இந்த கிராமத்தின் தேவையை உணர்ந்து முதலில் அந்த பேரிடரில் இருந்து மீள ஒரு சில வேலை திட்டங்களை செய்தோம். அதனை தாண்டி எங்களுக்கு முக்கியமாக தோன்றியது இந்த மேல்நிலைப்பள்ளி. ஏனென்றால் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்த அந்த பள்ளியில் மாணவர் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்து 230 க்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பள்ளிக்கூடமாக மாறிவிட்டது.
இந்த நிலை தொடர்ந்தால், ஒரு காலத்தில் இந்த பள்ளி இல்லாமலேயே போய்விடும் என்றும், அதன் பின்னர் இங்கு உள்ள மாணவர்கள் உயர்கல்விக்காக வெகு தூரம் செல்ல வேண்டி இருக்கும் எனவும், இந்த நிலையை மாற்ற நாங்கள் முயற்சிகளை எடுத்தோம். இதற்காக கிராம மக்களும் கூட முன்வந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தவிர இந்த உயர்நிலை பள்ளியின் முன்னாள் மாணவர் குழு மற்றும் சேவைக்குழுக்களும் பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சேவைக்குழுக்களில் 'சீதனம்' அறக்கட்டளையும் ஒன்று. இந்த சீதனம் அறக்கட்டளை கிட்டத்தட்ட 6 வருடங்களாக, நீர்நிலைகளை புனரமைத்தல், நீர்வழி பாதைகளை சரி செய்தல், பள்ளிக்கூடங்களில் உட்கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல் போன்ற பல்வேறு சேவைகளை ஆற்றியுள்ளது.
இதனிடையே இந்த மேல்நிலைப்பள்ளியில் நாங்கள் ஒரு நூலகத்தை நிறுவுவதற்கு திட்டமிட்ட நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வள்ளி விஜய், அவரின் தந்தை ராஜு கருப்பையா, பெனிடா விக்னேஷ் ஆகியோர் இணைந்து நூலகத்திற்கான உட்கட்டமைப்பு செலவிற்கான 7 இலட்சம் ரூபாய் பணத்தை எமக்கு வழங்கியுள்ளனர். வள்ளி விஜய் மதுரையை சேர்ந்தவர். இருப்பினும் கூட தஞ்சாவூர் பகுதியில் அமைந்துள்ள இந்த மேல்நிலைப்பள்ளிக்கு அவர்கள் செய்திருக்கும் இந்த உதவி அளப்பரியது.
இந்த நூலகத்தில் 'சீதனம்' அறக்கட்டளை வழங்கிய இரண்டு ஏசிக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பல புத்தகங்களையும் வழங்கினர். நூலகம் உட்புறம் மற்றும் வெளிப்புறமாக அமர்வுகளுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குளிரூட்டும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குழந்தைகள் நூலகத்திற்கு தொடர்ந்து செல்லும் ஆர்வம் அதிகரிக்கப்படும் என நம்புகின்றோம்.
மாணவர்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய ஒரு கட்டிடமாக அமைய வேண்டும் என்ற எமது வேண்டுகோளுக்கு அமைய அதனை மிகவும் சிறப்பாக வடிவமைத்து கொடுத்தது கே.எஸ்.எம் ஆர்கிடெக்ச்சர் குழுமம். அவர்களும் எமது நூலகத்திற்கு 500 புத்தகங்களை வழங்கினர்.
இதனை தவிர கிராம மக்களும், புதிய புத்தகங்கள் மற்றும் வாசித்து முடித்த நல்ல நிலையில் உள்ள புத்தங்களை வழங்கி உள்ளனர். இவை எல்லாம் ஒருங்கிணைத்து சுமார் 3000 புத்தகங்கள் தற்போது நூலகத்தில் காணப்படுகின்றன. இதனிடையே அமெரிக்கா டெக்சாக்ஸில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் இதுவரை சுமார் 1500 புத்தகங்களை சேகரித்துள்ளார்கள். அதுவும் வெகு விரைவில் எமக்கு கிடைக்கும் என எதிர்பார்கிறோம்.
ஆகவே இந்த நூலகத்திற்காக பள்ளி மேலாண்மை குழு, கிராம மக்கள், மற்றும் பலர் இனைந்து இந்த நட்காரியத்தை முன்னெடுத்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
Advertisement