sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

ஆஸ்டின் தமிழ்ச் சங்க தீபாவளி மகாகொண்டாட்டம்

/

ஆஸ்டின் தமிழ்ச் சங்க தீபாவளி மகாகொண்டாட்டம்

ஆஸ்டின் தமிழ்ச் சங்க தீபாவளி மகாகொண்டாட்டம்

ஆஸ்டின் தமிழ்ச் சங்க தீபாவளி மகாகொண்டாட்டம்


நவ 25, 2024

Google News

நவ 25, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரும்பாலும் உலகின் அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் வசிக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

வட அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரான ஆஸ்டின் பெரு நகரத்தில் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் கணிசமாக வசித்துவருகின்றனர். அவர்கள் இந்தியப் பண்பாட்டைப் பேணிக் காக்கும் வகையில் நம் கலைகளை வளர்க்கிறார்கள், பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள், பொதுச்சேவையிலும் ஈடுபடுகிறார்கள்.


அந்த வகையில், ஆஸ்டின் நகரத்தில் உள்ள சீடர் பார்க் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கலை அரங்கத்தில் ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தினரால் தீபாவளிப் பண்டிகை சனிக்கிழமை நவம்பர் 16 ஆம் தேதி, '80கள் மற்றும் '90கள்' என்ற கருப்பொருளுடன் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்க தேசிய கீதம் பாடி, இன்டெகிரேட்டட் நிறுவனத்தின் உயரதிகாரிகளான வசுமதி கிருஷ்ணன், சுபா கார்த்திக் குத்துவிளக்கு ஏற்றி இனிதே தொடங்கிய இந்த நிகழ்வில் சுமார் 1,300க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வருகை தந்து சிறப்பித்தனர். திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு, சிறப்பு அழைப்பாளர் தமிழறிஞர் தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மாவின் பேச்சு, பரதநாட்டியம், திரைப்பட பாடலுக்கு நடனம், வீணை கச்சேரி, மெல்லிசைக் கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


கொஞ்சு தமிழில்...


ஆஸ்டின் நகரை சேர்ந்த 9 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள் கொஞ்சு தமிழில் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி, பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்ததோடு தங்கள் பிள்ளைகளும் இந்த இளம் தொகுப்பாளர்களை போல் மிக சரளமாகவும், நேர்த்தியாகவும் தமிழில் உரையாட வேண்டும் என்று தங்கள் பிள்ளைகளை ஊக்குவித்தனர். இந்நிகழ்வின் போது ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் சார்பில் ஆபரேஷன் டர்க்கி எனும் தொண்டு நிறுவனத்திற்கு எளியவர்கள் மற்றும் தேவைப்படுவோருக்கு குறிப்பாக தேங்க்ஸ் கிவ்விங் நாளன்று உணவு வழங்குவதற்கு மக்கள் வழங்கும் நன்கொடைக்கு சமமாக ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் இரட்டிப்பாக நிதியுதவி அளிக்கும் என்று கூறி ஆஸ்டின் மக்கள் அளித்த நிதி உதவியையும் சேர்த்து இரட்டிப்புக்கும் மேலாக ஆஸ்டின் தமிழ் சங்கத்திலிருந்து $3,500/- நன்கொடை வழங்கப்பட்டது.


பரிசளிப்பு


செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் 25 , 50 மற்றும் 75 குறள்கள் என மூன்று பிரிவுகளாக நடத்திய திருக்குறள் போட்டியில் கலந்து கொண்ட சுமார் 90 மாணவர்களில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு திருக்குறள் போட்டியில் நடுவராக இருந்த முனைவர் ரவி மாயவரம், முனைவர் ராம் சீனிவாசன், எழுத்தாளர்- மீ. மணிகண்டன் முன்னிலையில் தமிழறிஞர் தாமஸ் ஹிட்டோஷியால் பரிசு வழங்கப்பட்டது.


திருக்குறள், அவ்வையாரின் நூல்கள் உட்பட பல நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் ஆங்கில கவிஞர், எழுத்தாளர், தமிழறிஞர் தாமஸ் தன் சொற்பொழிவின் போது மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தை பற்றி குறிப்பிட்ட கருத்தை அனைவரும் ரசித்தனர்.


திருக்குறளின் சுருக்கமான கருத்துக்களை மட்டும் மொழிபெயர்ப்பது உலகில் உள்ள பல வண்ணங்களில் ஒன்றை மட்டுமே தனியே எடுத்து உயர்த்திப் பிடிப்பது போல் இருக்கும். ஒரு வானவில்லின் முழு அழகை ரசிப்பது முக்கியம் அல்லவா? நம் உலகின் அனைத்து வண்ணங்களையும் ஒரு வானவில் எப்படி ஒருங்கிணைக்கிறதோ அதே போல் திருக்குறள் ஒரு சிறந்த கவிதை, செய்யுளுக்கான அனைத்து குணங்களையும் ஒருங்கிணைத்து நல்ல கருத்துக்களையும், இன்பத்தையும் தருகிறது. அதனால் ஒரு மொழிபெயர்ப்பு என்பதில் அதுவும் குறிப்பாக திருக்குறள் போன்ற பொதுமறைக்கு அதன் சாராம்சத்தை கொண்டிருக்கவேண்டும் என்பதை மிக அழகாகவும் தெளிவாகவும் குழந்தைகளுக்கும் புரியும் வண்ணம் ஒரு மந்திரவித்தை போல் வெள்ளைத் தாளை காண்பித்து அதிலிருந்து வானவில் போல் பல்வேறு வண்ணங்களில் தாள்களை வரவழைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் வியக்கச்செய்து தன உரையை நிறைவு செய்தார்.


தமிழ்ப் பள்ளிகளுக்கு கவுரவம்


நாள்தோறும் வளர்ந்து வரும் ஆஸ்டின் மாநகரத்தில் இன்று 5 தமிழ்ப் பள்ளிகள் இருப்பதே நாடு விட்டு நாடு வந்தாலும் நம் தமிழ் மக்கள் தமிழ் மொழியின் மீது குறையாத பற்றோடு இருப்பதற்கு சாட்சி. ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் குறிக்கோளான தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை பிரதிபலிக்கும் தமிழ்ப்பள்ளிகளை கௌரவிப்பதில் ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் பெருமிதம் அடைந்தது.


குரு வினிதா சுப்ரமணியன், குரு தன்யாஸ்ரீ சக்கரபாணி, குரு அனுராதா ராமச்சந்திரன் குரு இலக்கியா ஹரிஷ், குரு காயத்ரி வெங்கடேஸ்வரன், அத்ரியா பாலாஜி, காயத்ரி நடராஜன், குரு நித்யா பிரகாசம், நடன அமைப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ரேஷ்மா மௌலானா, ஞானச்செல்வி ஜெயபால், நிவேதிதா முகுந்தன், கலைச்செல்வி வெங்கடாசலம், நாகஜோதி ரவிச்சந்திரன், நிவேதா ராஜமாணிக்கம், பிரபா ராஜா, ராஜாத்தி இம்மாக்குலேட் அமல்ராஜ், சந்தியா தங்கரங்கன், சத்யஷீலா குமார், சங்கீதா சண்முகசுந்தரம், பாலசூர்யா பாலராஜேந்திரன், ப்ரியா ராஜமூர்த்தி, இளையராஜா இசக்கிமுத்து, ஜெயப்ரியா ராஜேந்திரன், ப்ரதீபா கார்த்திகேயன், அர்ச்சனா முனியராஜ், மது ஆனந்தன், சுமதுரி பெல்லாலா, அருணா லக்ஷ்மணன், ராமலக்ஷ்மி பிள்ளை, சரண்யா ஹரிஹரன், நாகப்ரத்யுஷா, வந்தனா எறங்கி, காயத்திரி சுப்ரமணியம், ஜெயந்தி ஆனந்த், மதுமிதா சஞ்சீவிராஜ், தீபிகா ராஜேந்திரன், ஆகியோரின் குழுவினரும்; பாடகி பவித்ரா பத்ரிநாராயணன், பாடகர் பாலாஜி வரதராஜன், குரு தன்யாஸ்ரீ சர்மா ஆகியோரின் குழுவினரும் மற்றும் பாலாஜி கிருஷ்ணன் இயக்கும் மின்மினி மெட்லி என்கிற ஆஸ்டின் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் இசைக்குழுவில் கீபோர்டு, வயலின், டிரம்ஸ், சாக்ஸபோன், கிட்டார், மரும்பா, புல்லாங்குழல், 18 இளம் பாடகர்கள் கொண்ட குழு என பல்வேறு பிரமாதமான 260 கலைஞர்கள் இந்தக் கலைநிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். இவர்கள் தங்கள் திறமையால் வருகை தந்த அனைத்து விருந்தினர்களுக்கும் இந்தியாவில் இருப்பது போல் மட்டுமல்லாமல் '80கள் மற்றும் '90கள் காலகட்டத்திற்கே அழைத்து சென்று விட்டார்கள்.


கண்கவரும் நடனங்கள்


கண்ணைக் கவரும் ஆடைகளுடன் ஐந்து வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை பங்கு பெற்ற நடனங்கள் அனைத்தும் மிக நேர்த்தியாகவும், அற்புதமாகவும் அமைந்திருந்தன. இசை நிகழ்ச்சியில் பாடிய பாடகர்கள் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் அனைவரும், முழுநேர இசைக்கலைஞர்களின் இசைக்கச்சேரியில் இருப்பதைப் போன்ற உணர்வைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்திவிட்டார்கள் என்றால் மிகையாகாது.


'80கள் மற்றும் '90களின் கருப்பொருள் என்பதால் இளையராஜா, ARR, தேவா இசையமைத்த பாடல்கள் என நடன நிகழ்ச்சிகள் , பாடல்கள், வீணை கச்சேரி, இசைக்கருவிகளுடன் மெல்லிசை கச்சேரி என அரங்கமே அதிரும் பொழுது பாரம்பரியமான பரதநாட்டியம் கலைஞர்கள் நாங்களும் கருப்பொருளை முன்வைத்தே எங்கள் நடனங்களை அமைப்போம் என அந்தக் காலகட்டத்தில் பரதத்தில் கோலோச்சிய குரு பத்மா சுப்ரமண்யம், குரு அலர்மேல்வள்ளி , குரு யாமினி கிருஷ்ணமூர்த்தி, குரு ஊர்மிளா சத்யநாராயணா, குரு மாளவிகா சர்ருக்கை, குரு மல்லிகா சாராபாய், '80 மற்றும்' 90களின் கர்நாடக இசை உலகின் ஜாம்பவான்களான மதுரை ஆர் முரளிதரன், ஆலத்தூர் விஜயகுமார், எஸ் ராமநாதன் ஆகியோர் இசையமைத்த பாடல்களுக்கு நடனமாடி மகிழ்வித்தனர்.


தீந்தமிழில் தொகுப்புரை


அனைத்து நிகழ்ச்சிகளையும் ஹேமபிரபா சந்தோஷ், சங்கமித்ரா அங்குராஜ், தனிஷா மதுசூதன், தருண் மதுசூதன, சமன் ஹருண்குமார், வர்ஷா நவீன் பாலாஜி, ஸ்ரீநிகா சரவணன், ஸ்ரீஷா சரவணன், அன்ஷிகா கிருஷ்ணமூர்த்தி, சாய்மகிழா செந்தில் பிரசாந்த், மகிழிசை கணேசன், புகழினி கோபிநாதன், மித்தில்யா மோகன், சஸ்திகா வாசு, அத்வைத் ஓம்சங்கர், ஸ்வஸ்திக்கா லோகநாதன் ரங்கசாமி, சஹாத்மிகா மணியன் நாகராஜ், ஷர்வேஷ் இளையராஜா, மோகன் குமார் ரமணி ஆகியோர் தெளிவான உச்சரிப்புடன் கலகலப்பாக தீந்தமிழில் தொகுத்து வழங்கியதை வருகை தந்திருந்த அனைவரும் மெய்சிலிர்க்க கேட்டு ரசித்தனர். அமெரிக்காவில் வளரும் குழந்தைகள் இவ்வளவு அருமையாக தமிழில் உரையாட முடியுமா என வியந்து போயினர்.


ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து இந்த விழாவை வழங்கியவர்கள் இந்தியாவை சேர்ந்த இன்டக்ரேட்டட் நிதி நிறுவனம். பார்வையாளர்களுக்கு குலுக்கல் முறையில் அவ்வப்போது அளித்த திடீர் பரிசுகளும் விழாவுக்கு சுவாரசியத்தையும் விறுவிறுப்பையும் அளித்தது.


புகைப்பட நிபுணர் ரவி ராமராஜு அனைத்து நிகழ்ச்சிகளையும், விருந்தினர்களையும் மிக அழகாகப் படம் பிடித்தார். விழா நடைபெற்ற வளாகத்தை தோரண் டிஸஃயின்ஸ் நிறுவனத்தார் நன்றாக அலங்காரம் செய்து விழாக்கோலம் பூண வைத்திருந்தனர்.


நிகழ்ச்சியின் ஒலிஒளி அமைப்பை மிக சிறப்பாக நேர்படுத்திய செல்வகுமார் ஏகாம்பரம், விழாவிற்கு வருகை தந்த அனைத்து விருந்தினர்களையும் எலக்ட்ரானிக் செக் இன் செய்ததில் தொடங்கி, கலைஞர்கள் அனைவரையும் மேடைக்குக் குறித்த நேரத்தில் அழைத்தது, அவர்களுக்கான தேவைகளைக் கவனித்தது, சிற்றுண்டி சாலைகளைக் கவனித்துக்கொண்டு, உணவுக் கூடத்தில் பரிமாறியது வரை அனைத்தையும் தன்னார்வ தொண்டர்கள் இன்முகத்தோடு செய்தனர். அவர்களின் தன்னலமற்ற சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு தன்னார்வ தொண்டர்களுக்கு புகழாரம் சூட்டியது.


சங்கத்தின் தலைவர் அருண் அருணாச்சலம், துணைத் தலைவர் மகாலெட்சுமி ரமேஷ் பாபு, செயலாளர் ஹரிஷ் ராஜா குமார், இணை செயலாளர் சிதம்பரநாதன் அழகர், பொருளாளர் மோகன் கோவிந்த ராமானுஜம், போர்டு ஆப் டைரெக்டர்ஸ் சக்திவேல் நடராஜன், சஞ்சய் பாலகிருஷ்ணன், சசிகலா சுப்ரமணியன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் மணிகண்டன் செல்லபாண்டியன், கோகுல் விஜயமூர்த்தி, ஜெயஸ்ரீ ஹரிஷ், விவேக் ஈஸ்வரன், பூர்ணிமா கார்த்திக் அனைவரும் நிகழ்ச்சியை நல்ல முறையில் சீராக நடத்தி சிறப்பாக செயல்பட்டனர்.


பெட்டிக்கடையில் தினமலர் நாளிதழ்


இந்த நிகழ்வில் பல்வேறு ஸ்பான்சர் மற்றும் விற்பனையாளர் அமைத்திருந்த சிறு கடைகள் பண்டிகைச் சூழலை மேலும் மெருகூட்டியது. சங்கத்தினர் அமைத்திருந்த ATS தேநீர் கடை '80 மற்றும் '90களில் தமிழகத்தில் இருந்ததுபோல் லாட்டரி சீட்டு, தினமலர் உட்பட செய்தித்தாள்கள், வாராந்திர பத்திரிக்கைகள், பாய்லர், மிட்டாய்கள், தேநீர், சமோசா, பஜ்ஜி, பக்கோடா என இருந்ததை அடுத்து விருந்தினர்கள் அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து வேறு மாநிலங்களிலும் , வேறு நாட்டிலும் இருக்கும் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் அனுப்பி தங்கள் அளவில்லா மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். கைவினை கலைஞர் ப்ரீத்தா சீனிவாசனால் நுழைவாயிலில் மிக கவனத்துடனும் நுணுக்கமாகவும் அமைக்கப்பட்டிருந்த '80 மற்றும் '90களில் மெரினா கடற்கரை காட்சி அனைவர் மனதையும் கொள்ளை கொண்டது என்றால் மிகையாகாது.


விழாவின் நிறைவாக அதுவரையிலும் கண்ணுக்கும், காதுக்கும் அளிக்கப்பட்ட விருந்து போல் குப்பண்ணா, ஆஸ்டின் உணவகத்திலிருந்து வரவழைக்கபட்ட 14 வகையான சைவ மற்றும் அசைவ அறுசுவை இரவு உணவை விழாவுக்கு வருகை தந்த அனைத்து பார்வையாளர்களும் ரசித்து உண்டு மகிழ்ந்தனர். அறுசுவை விருந்திற்குப்பின் வாழைப்பழமும், இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட தாம்பூலமும் , தீபாவளிப் பரிசாக ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் 2025ஆம் வருட மாதாந்திர காலண்டரும் சுவையான ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மற்றும் சாத்தூர் மிளகு காராசேவும் வீட்டிற்கு எடுத்து செல்ல தோதாக நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்த பைகளில் வழங்கப்பட்டது.


வருகை தந்த அனைத்து விருந்தினர்களும், இந்த 2024 தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் உறவினர் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணர்வு கிடைத்ததாகவும் , '80கள் மற்றும் '90 காலகட்டத்திற்கும், தங்கள் இளம்பிராயத்துக்கும் சென்று விட்டதை போல் உணர்ந்ததாகவும் ஒரு புதிய அனுபவமாக இருந்ததாகவும் மகிழ்வோடு தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொண்டது இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மேலும் ஊக்குவிப்பாக அமைந்தது.


வருகை தந்த அனைவரும், நம் தமிழ் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், விருந்தோம்பலையும், மொழியையும் வளர்ந்து வரும் அடுத்த தலைமுறைக்கு செவ்வனே எடுத்துச்செல்வதும், ஆஸ்டின் நகரத்திலும், அதன் சுற்று வட்டாரத்திலும் இருக்கும் தமிழ் படைப்பாளர்களுக்கு என தொடங்கப்பட்டுள்ள ஆஸ்டின் ஆம்பல் மலருக்கும், நன்கு தமிழ் பேசும் குழந்தைகளை நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக தேர்தெடுத்திருப்பதும், பெரு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தருகிறது என ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்திற்கு பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்தார்கள்.


_ நமது செய்தியாளர் மகாலெட்சுமி ரமேஷ் பாபு; புகைப்படங்கள்: ரவி ராமராஜு


www.austintamilsangam.com



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us