/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
பிரடெரிக் தமிழ்ப்பள்ளி மேரிலாந்து - பொங்கல் கொண்டாட்டம்
/
பிரடெரிக் தமிழ்ப்பள்ளி மேரிலாந்து - பொங்கல் கொண்டாட்டம்
பிரடெரிக் தமிழ்ப்பள்ளி மேரிலாந்து - பொங்கல் கொண்டாட்டம்
பிரடெரிக் தமிழ்ப்பள்ளி மேரிலாந்து - பொங்கல் கொண்டாட்டம்
பிப் 06, 2025

பிரடெரிக் தமிழ்ப்பள்ளி அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் “தமிழால் இணைவோம்! உணர்வால் உயர்வோம்” என்ற தமிழ் உணர்வோடு இன்று அமெரிக்க வாழ் தமிழர்களின் மூன்றாம் தலைமுறை மாணவர்களுக்குத் தமிழ்க் கல்வி மட்டுமல்லாமல் தமிழர் கலைகள் மற்றும் பண்பாடுகளையும் சேர்த்துப் பயிற்றுவிக்க முனைவர் பாலா குப்புசாமி அவர்களின் தலைமையில் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமாய் ஆரம்பிக்கப்பட்டுப் பல தன்னார்வலர்கள் கொண்ட நிர்வாக குழுவினரின் முயற்சியால் சிறப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
சனவரி 25-ஆம் நாள் சனிக்கிழை அன்று பிரடெரிக் தமிழ்ப்பள்ளி பொங்கல் திருவிழாவை பிரடெரிக் நகரில் உள்ள அர்பானா நடுநிலைப் பள்ளியில் உள்ள மன்றத்தில் கொண்டாடியது.
பனிப்புயல் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தில், ஊரெங்கும் வெள்ளைக் காடாய் இருக்க, உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைகிறோம்.. இது எந்த இடம்? இந்தியாவோ! தமிழ்நாடோ?. தங்கத் தமிழச்சிகளின் சந்தனம் பன்னீர் கலந்த, கலப்படமில்லாத புன்னகை வரவேற்பே சொல்லிவிட்டது- இது பொதுநிகழ்ச்சி அல்ல, குடும்பக் கொண்டாட்டம் என்று. விழா மேடையில், எளிமையாக ஆனால் மிக கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டிருந்த, பொங்கல் திருநாள் பதாகையில் தொடங்கலாம்.
ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நம் பாரம்பரிய உடையில் வலம் வந்து கொண்டிருந்தனர். வண்ண வண்ண மொட்டுகள், வாசமலர்கள், வண்ணத்துப்பூச்சிகள்-ஆடல் பாடல் அசத்தல் அதிரடி அலப்பறைகள், கோலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் என குதூகலப்படுத்திவிட்டனர்.
தேசியப்பறவைகளின் நாட்டியம், வயலின், இசைப்பலகை வல்லவர்களின் விரல் மாயம், பனிக்குளிர்க் குயில்களின் குரல் மாயம், பட்டிமன்றம் பேசிய இளம் மேதைகள், பதாகை விளக்கத்தில் பல அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்ட அறிவொளிகள், கிராமத்து வாசலை கண்முன் கொண்டு வந்த சகோதரிகளின் கைவண்ணம், “ இனியொரு விதி செய்வோம்” என முழங்கி, இறைபக்தியையும் பெற்றோரை மதித்து்ப் புரிந்து வாழ்வதே நல்வாழ்க்கை என்ற பாடத்தையும், நாடகம் மூலம் அழகாய் நடித்துக் காட்டிய குழந்தைகள், “கொம்பு” குழுவின் வருடம் தவறாமல் வருகை தந்து, குதூகலப்படுத்தும் “தப்பாட்டம்” என கொண்டாட்டப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
கூடவே அமெரிக்காவின் அதிநவீன அகத்தியர்- முனைவர் பாலா குப்புசாமியின் ஹைக்கூ கவிதைகளும், அடுக்குமொழி பேசியே அசத்தும் பலகுரல் நிகழ்ச்சியும் கொண்டாட்ட கிரீடத்தில் இரத்தினமாய் ஜொலித்தன.
கண்களுக்கும் செவிகளுக்கும் மனதிற்கும் விருந்தளித்த குடும்பவிழாவில் நாவிற்கு இடமில்லாமலா! நவீன பலகாரங்கள் விருந்தோம்பலை நிறைவாய்ச்செய்தன.
சிறப்பு விருந்தினர்களின் வருகை, ஆசிரியப்பெருமக்களின் பயிற்சி, குழந்தைகளின் ஒத்துழைப்பு, தன்னார்வலர்களின் உழைப்பு, பெற்றோர்களின் பாராட்டு பங்களிப்பு எனக் கூட்டுமுயற்சியில் பிரடெரிக் தமிழ்ப்பள்ளியின் பொங்கல் கொண்டாட்டத்தின் வெற்றி எவரெஸ்ட் தொட்டது.
தமிழ்ப்பள்ளி நிறுவனத் தலைவர் முனைவர் பாலா குப்புசாமியும், மற்ற நிர்வாகக் குழு உறுப்பினர்களும் நற்பள்ளி நடத்தி தாய்மொழிக்கு சேவை செய்கின்றனர். மனம் நிரம்பிய மகிழ்ச்சியில் புறப்படுகையில், ஒவ்வொருவரும் கர்வமாய் கர்ஜித்துக் கொண்டனர்- “ நாங்க தமிழங்கடா.. அதனாலதான் எங்க பாரம்பரியத்தை சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்து கொண்டாடி மகிழ்கிறோம்”. செய்தித் தொகுப்பு: திருமதி அன்னபூரணி இராஜ்மோகன்
- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்
Advertisement