/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலயத்தில் மகா ருத்ர உத்சவம்
/
நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலயத்தில் மகா ருத்ர உத்சவம்
பிப் 05, 2025

நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலயத்தில் மகா ருத்ர பூஜை மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பாஸ்டன் அருகே நாஷூவா நகரத்தில் அமைந்துள்ள இந்த அழகான ஆலயத்தில் சிவ பெருமான் நர்மதை லிங்கமாகவும், மீனாக்ஷி சுந்தரேஸ்வரர், மேதா தக்ஷிணாமூர்த்தியாகவும் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளனர். சிவனின் அவதாரங்களாக வணங்கப்படும் காஞ்சி மகாபெரியவர், ஆதி சங்கரர், மற்றும் நால்வர்களுக்கும் இந்த ஆலயத்தில் தனி சந்நிதிகள் உண்டு! 2008ல் நிறுவப்பட்ட இந்த ஆலயத்தில் வருடம் தவறாமல் சிவராத்திரிக்கு முன் மகா ருத்ர பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
“ருத்ர” என்றால் துன்பத்தை விலக்குபவர் என்றொரு பொருள். ஸ்ரீ ருத்ரம் என்பது யஜுர்வேதத்தில் மத்தியில் அமைந்திருக்கும் ஒரு சிறப்பான மந்திரத் தொகுப்பு. பிரபலமான மந்திரங்களான ““நம: சிவாய” என்னும் ஐந்தெழுத்து (பஞ்சாக்ஷரி) மந்திரம், மற்றும் யமனையும் வெல்லும் மகா ம்ரித்யுன்ஜய மந்திரம் இந்த தொகுப்பில் தான் வருகிறது. மகா என்றால் 'பெரிய' என்று பொருள். மகா ருத்ர சடங்கில் பல வேத வித்தர்கள் ஒன்று கூடி, ஸ்ரீ ருத்ர மந்திர தொகுப்பிலுள்ள பதினோரு ('ஏகாதசம்') அனுவாகங்களை சமகம் எனும் பிரார்தனையுடன் மொத்தம் 1331 முறையாவது பாராயணம் செய்வார்கள். ஸ்ரீ ருத்ரத்தை முறையாக பாராயணம் செய்யும் போது உண்டாகும் ஒலி அதிர்வுகள் நமது மனதிலும் சுற்றுப்புறத்திலும் நல்ல பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்பது ஆன்றோர் வாக்கு.
ஜனவரி 25 அன்று நடைபெற்ற மகா ருத்ர விழாவில் நியூ இங்கிலாந்தின் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் (-12 டிகிரி செல்சியஸ்) திரளான பக்தர்கள் அதிகாலையிலேயே கோவிலில் குவிந்தனர். தன்னார்வலர்களின் உற்சாக உழைப்பினால் விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாஸ்டனை சுற்றி வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட 'ரித்விக்' என அழைக்கப் படும் வேத வித்தர்கள் பங்கேற்றனர். இவர்கள் மகா ருத்ரத்தில் பங்கேற்க்கும் தகுதி பெறுவதற்க்கு டிசம்பர் 1 முதல் குறைந்தது 5 வாரம் பிரதி ஞாயிறு 1008 காயத்ரி மந்திர ஜபம் ஜபிக்க வேண்டும் என்பது விதி. இந்த விதியை மிகுந்த ஒழுக்கத்துடன் பின்பற்றி ஏராளமான சைவ பக்தர்கள் தகுதிப் பெற்றனர். சத்தியநாராயண பட்டர், பைரவசுந்தர சிவாச்சாரியார், ராஜேஷ் சாஸ்திரிகள், பாலகிருஷ்ண சாஸ்திரிகள், அஸ்வர்த்த மஹேஸ்வர்ல சர்மா, சோமநாத சர்மா உள்பட பாஸ்டனை சுற்றியுள்ள பல்வேறு கோவில்களின் சிவாச்சாரியார்கள் மற்றும் வைதீக வல்லுநர்கள் இணைந்து விழா சடங்குகளை நடத்தி வைத்தனர். பிற கோவில்களின் மூத்த சிவாச்சாரியார்கள் மற்றும் வைதீக வல்லுநர்கள் பங்கேற்பு மூலம், பல்வேறு கோவில் சமூகங்களை இந்த விழா ஒன்றிணைத்தது!
இவ்விழாவின் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு:
* நூற்றுக்கும் மேற்பட்ட வேத வித்தகர்கள் சமகப் பிரார்தனையுடன் ஸ்ரீ ருத்ரத்தின் பதினோறு அனுவாகங்களை (ஏகாதச ருத்ரம்) இரண்டு சுற்று பாராயணம் செய்தனர். இந்த மந்திரங்களின் சக்தி வாய்ந்த அதிர்வுகள் பக்திப் பரவசம் கூடிய ஆன்மீக சூழலை உருவாக்கின.
* கடுங்குளிரைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பெறும் திறளாக வந்து கலந்து கொண்டனர்.
* அனைவரின் நலனையும் வேண்டி செய்யப் பட்ட ருத்ர ஹோமம் சிறப்பாக நடைபெற்றது.
* ஆலயத்தின் பிரதான தெய்வமான சிவலிங்கத்திற்க்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. இதன் பின் இறைவனுக்கு செய்யப் பட்ட அலங்காரம் கண் கொள்ளாக் காட்சி!
* சிவபெருமானுக்கு இனிமையான பஜனை மற்றும் தேவாராப் பாமாலை சாற்றப்பட்டது.
* 'அன்னபூரணி'கள் என்று அழைக்கப்படும் பெண் தன்னார்வலர்கள் சுவையான சாத்விக அறுசுவை உணவு செய்து தமிழ் மரபுபடி வாழை இலையில் பரிமாறினர். பக்தர்களும் தரையில் அமர்ந்து இவ்வுணவை பிரசாதமாக கருதி மிகுந்த நன்றி உணர்வுடன் உட்கொண்டனர்.
நியூ ஹாம்ப்ஷயர் இந்து கோவிலில் கொண்டாடப்பட்ட இந்த மகா ருத்ரம் ஒரு ஆன்மீக வைபவமாக மட்டுமல்லாமல், சமுதாய ஒற்றுமைக்கான ஒரு நிகழ்வாகவும் விளங்கியது. இந்த விழா இந்து சமயத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பேணி காப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
இந்த மகத்தான விழாவின் வெற்றிக்கு தன்னார்வலர்களின் அயராத உழைப்பு முக்கிய காரணமாகும். அவர்கள், அனைத்து பூஜா திரவியங்களையும் பாரதத்தில் இருந்து கொணர்தல், உணவு தயாரித்தல், வாகன நிறுத்துமிடம், நிர்வாகம் மற்றும் விழா ஏற்பாடுகள் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர்.
வெளிநாட்டில், அதுவும் ஜனவரி மாத கடுங்குளிரில், இவ்வளவு மூத்த சிவாச்சாரியார்கள் மற்றும் வைதீக வல்லுர்னர்கள் ஒன்று சேர்த்து, சம்பிரதாயம் காத்து, எக்குறையும் இல்லாமல் இந்த விழாவை மிகச் சிறப்பாக நடத்திய கோவில் நிறுவனர் வீரமணி ரங்கநாதனின் இந்த அறப்பணி பாராட்டத்தக்கது. அவரோ 'பெரியவா சரணம். இதையெல்லாம் நடத்தி வைப்பது மகாபெரியவா தான்' என்று பணிவுடன் பலனை காஞ்சி மகாபெரியவருக்கே அற்பணிக்கிறார். இவ்வுற்சவம் நடமாடும் தெய்வத்தின் அருளால் நடனமாடும் தெய்வத்திற்க்கு நாஷுவா நகரில் நடந்த ஒரு மறக்கமுடியாத வாழ்நாள் நிகழ்வாக நடந்தேறியது. தகவல்: தினமலர் வாசகர் அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி
- - நமது செய்தியாளர் ஜெயஸ்ரீ சௌந்தரராஜன்
Advertisement