
அமரர் அண்ணாமலை நினைவஞ்சலி, அண்ணாமலை அறக்கட்டளை தொடக்கவிழா, வில்லேஜ் விஞ்ஞானி விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா திருப்பத்தூருக்கு அருகில் உள்ள விஷமங்கலத்தில் நடைபெற்றது.
அமரர் அண்ணாமலையின் முதலாமாண்டு நினைவு அஞ்சலியாக அவருடைய உருவப் படத்தை, திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி.கிருஷ்ணன் திறந்து வைத்தார். டி.என்.பி.சி.யின் தலைவர் சிவன் அருள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினர் முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், அண்ணாமலை அறக்கட்டளையைக் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.
நினைவு மலரினை ஓவியர் டிராட்ஸ்கி மருது வெளியிட்டார். திருஞானானந்தா சுவாமிகள் சிறப்புரை ஆற்றினார். விழாவில், இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் ஆர்.ஆர்.இளங்கோவன், விஞ்ஞானி ஆர்.அருணாசலம், ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.சக்திவேல், தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இரா.குறிஞ்சி வேந்தன், காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் போ.சத்தியமூர்த்தி, CIPET கல்லூரியின் உயர்கல்வி ஒருங்கிணைப்பாளர் கோ.நீலகண்டன், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் கி.பார்த்திபராஜா, கின்னஸ் சாதனை ஒருங்கிணைப்பாளர் விவேக் ராஜா, பரிதி பதிப்பகம் இளம்பரிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியும் விளக்கவுரையும் நடத்தப்பட்டது
சிறந்த அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு 'வில்லேஜ் விஞ்ஞானி - 2024' என்னும் பெயரிலான விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை வழங்கிப் பேசிய துணைவேந்தர் முனைவர் கிருஷ்ணன், “இது போன்ற பாராட்டுதல்கள் இந்த இளம் மாணவர்களை மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட உற்சாகப்படுத்தும். தூண்டுகோல்களும், வழிகாட்டுதல்களும் இவர்களுக்குக் கிடைக்கப்பெற்றால், எதிர்காலத்தில் தலைசிறந்த விஞ்ஞானிகள் இவர்களிலிருந்து உருவாவார்கள்” என்றார்.
“அண்ணாமலை அறக்கட்டளை, திருப்பத்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தவும், ஆய்வுகளை வளப்படுத்தவும் பொருளாதார வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு வழிகாட்டவும் செய்யவிருக்கிறது. இஸ்ரோ, நாசா உள்ளிட்ட உலகின் முக்கியமான விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் பணிபுரிந்த விஞ்ஞானிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கவும் வழிகாட்டவும் இருக்கிறார்கள். கணினி, விண்வெளி உள்ளிட்ட அறிவியல் ஆராய்ச்சிகளில் கிராமத்து மாணவர்களை ஈடுபட வைக்கவும் உயர் நிறுவனங்களில் அவர்கள் தங்களின் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அண்ணாமலை அறக்கட்டளை கரம் கொடுக்கும்” என்றார் அறக்கட்டளை நிறுவனர், அமெரிக்காவின் டெக்ஸாசில் மென்பொறியியலாளராகப் பணியாற்றும் பெருமாள் அண்ணாமலை.
- தினமலர் வாசகர் பெருமாள் அண்ணாமலை
Advertisement