
காட்டில், முயல்கள் கூட்டமாக வாழ்ந்து வந்தன. கிடைத்த உணவை உண்டு சந்தோஷமாக இருந்தன.
கோடைகாலம் வந்தது. வெப்பம் அதிகமாக இருந்ததால் பச்சை பசேல் புற்கள் எல்லாம் கருகி, பாலைவனம் போல் தோற்றமளித்தது.
முயல்களுக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை. மிகவும் அவதிப்பட்டன.
முயல்களை வேட்டையாட காத்திருந்தன வேட்டை நாய்கள்.
அவற்றிற்கு பயந்து, முயல்கள் பொந்துக்குள்ளே ஒளிந்து கொண்டன. வெளியே வர முடியாமல் தவித்தன. உணவு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டன.
'ஏதாவது செய்ய வேண்டும்...' என எல்லா முயல்களும் கூடிப் பேசின.
ஒரு முயல், 'ஏதாவது பிரச்னை வந்தால், காப்பாற்றிக்கொள்ளும் அளவிற்கு மற்ற விலங்குகள் பலம் உடையதாக இருக்கின்றன. ஆனால், நாம் எந்த ஒரு பிரச்னை வந்தாலும் பலவீனமாக இருக்கிறோம். இயற்கை, நம்மை இப்படி படைத்து விட்டது...' என, குறை கூறியது.
மற்றொரு முயல், 'இதை பொறுத்துக் கொள்ள முடியாது. பசியாலும், வேட்டை நாய்களை பார்த்து பயந்தும் ஒதுங்கி வாழ்வதைவிட, சாவதே மேல். ஏதாவது நதியில் போய் விழுந்து விடுகிறேன்...' என்றது.
'எதையும் ஒன்றாக இணைந்து செய்ய வேண்டும்...' என, எல்லா முயல்களும் முடிவெடுத்தன.
நதியை நோக்கி புறப்பட்டன, முயல்கள்.
நதிக்கரையை முயல்கள் அடைந்தன. அங்கே சில தவளைகள் இருந்தன.
முயல்களை கண்டதும், பயத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நதியில் குதித்தன தவளைகள்.
இதைப் பார்த்த முயல் கூட்டம் ஆச்சரியமடைந்தது.
'தவளைகள் பயந்து நீருக்குள் குதிக்கின்றனவே... நாம்தான் உலகத்திலேயே பலவீனமானவர்கள் என்றல்லவா எண்ணினோம். தவளைகளுக்கு நம்மை பார்த்தால் பயம் போல...' என பேசிக்கொண்டன.
'பிரச்னையில் இருந்து தப்பி, பாதுகாத்துக் கொள்ள நிச்சயமாக ஒரு வழி இருக்கிறது. அது என்ன என்று கண்டுபிடிப்போம். நதியில் விழுந்து வாழ்வை முடித்துக் கொள்வதை விட, பிரச்னையை எதிர்கொள்வதே மேல்...' என்ற முடிவுக்கு வந்தன, முயல்கள்.
உணவு தேடி வேறு இடத்திற்கு சென்றன.
பட்டூஸ்... என்ன பிரச்னை வந்தாலும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.
மா.சுதிக் ஷா

