
இந்த வாரம் குட்டிக்குட்டி செய்திகள் மட்டும்... பெ ப்பர்மென்ட் என்பது, ஒரு செடியின் பெயர். அதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், இனிமையான வாசம் கொண்டது. அந்த எண்ணெயைக் கொண்டு, மிட்டாய்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே மிட்டாய்களுக்கு, பெப்பர்மென்ட் என்ற பெயர் ஏற்பட்டது.
*****
இ ளவரசர் சார்லஸ் - டயானா திருமணத்தின் போது, பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள காவலாளிகளுக்காக விசேஷ உடையும், தொப்பியும் கரடி உரோமத்தால் செய்வதற்காக, கனடாவில் 600 கரடிகள் கொல்லப்பட்டு, தோலுரிக்கப்பட்டன.
*****
ரோ மாபுரியில், சக்கரவர்த்தி ஊர்வலமாக வரும் போது, அவருக்கு முன்பாக வெள்ளி செங்கோல் ஏந்தியபடி, கட்டியக்காரன் ஒருவன் நடந்து போவான். தான் துாக்கி பிடித்து செல்லும் செங்கோலை அடிக்கடி பார்த்து, 'மெமண்டோ அமமடோபர்' என, உரக்கச் சொல்வான். இதற்கு, 'உனக்கு ஒரு நாள் மரணம் உண்டு' என, அர்த்தம்.
ஆட்சியில் இருப்போருக்கு ஆணவம் ஏற்படக் கூடாது என்பதற்காக, ரோமானிய சக்கரவர்த்தி, ஜூலியஸ் சீசர் செய்த ஏற்பாடு இது.
******
பு கழ்பெற்ற ஆங்கில கவிஞரான ஜான் மில்டன், வானொலியின் தந்தை என, போற்றப்பட்ட மார்கோனி, ஆங்கில நடிகர் ரெக்ஸ் ஹாரிசன், இத்தாலிய ராணுவத் தளபதி மோசே தயாள் ஆகியவர்களுக்கு ஒரு ஒற்றுமை; இவர்கள் எல்லாரும், ஒரு கண்ணில் மட்டுமே பார்வை உள்ளவர்கள்.
******
சீ ட்டு கட்டில் நான்கு ராஜாக்களும், நான்கு ராணிகளும் இருக்கின்றனர். டேவிட், சார்லி, அலெக்ஸாண்டர், ஜூலியஸ் சீசர் ஆகியோர் ராஜாக்கள். கிளியோபாட்ரா, எஸ்தர், ஷீபா, போடிசியா ஆகியோர் ராணிகள்.
*******
இ லங்கை வானொலியில் முதல் வர்த்தக ஒலிபரப்பு, முதலில், ஆங்கிலத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. 25 மீட்டர் அலைவரிசையில் ஒலிபரப்பானது. எவரெஸ்ட் மலைக்கு, டென்சிங் மற்றும் ஹிலாரி சென்ற போது, கேட்ட ஒரே வானொலி நிகழ்ச்சி என, இதை சொல்வர். இது, கின்னஸ் புத்தகத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் ஒலிபரப்பானதைத் தொடர்ந்து, தமிழிலும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன.
******
ரத்த வங்கிகளில் சேமித்து வைக்கப்படும் ரத்தம், பல மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்க உதவியாய் இருப்பது, 'க்ரையோஜெனிக்ஸ்' என்ற தொழில்நுட்பம். 'க்ரையோஜெனிக்ஸ்' என்றால், அதிகப்படியான குளிர்ச்சியை உருவாக்குதல் என, அர்த்தம். மனித ரத்தம் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதை, 'க்ரையோஜெனிக்ஸ்' மூலம் குளிரூட்டப் பட்டு ரத்த வங்கிகளில் சேமித்து வைக்கின்றனர்.
இன்னொரு ஆச்சரியமான செய்தி, ஒரு உயிருள்ள மீனை, 'க்ரையோஜெனிக்ஸ்' செய்து, பலமணி நேரம் கழித்து அம்மீனை வெதுவெதுப்பான நீரில் போட்டால், அடுத்த சில நிமிடங்களுக்குள் அந்த மீன் உயிர் பெற்று நீந்தும்.
*****
க டலுக்கு நடுவே நாம் பார்க்கும் குட்டி குட்டித் தீவுகள் எல்லாம், மலைகளின் உச்சிகள் தான். மலைகளின், 95 சதவீத பாகம், கடலுக்கு அடியில் இருக்க, உச்சிகள் மட்டும் கடல் மட்டத்துக்கு மேலே நீட்டிக் கொண்டு இருக்கின்றன. பார்ப்பதற்கு சாதாரண நிலபரப்பு போல் தெரியும் தீவுகள், உண்மையிலேயே பெரிய பெரிய ராட்சச மலைகளின் உச்சந் தலைகள் தான்.
*******
ஒ ரே ஒரு சாக்லேட் சாப்பிட்டால், 150 அடி துாரம் நடப்பதற்கான ஆற்றல் நமக்கு கிடைக்குமாம். அதிக ஆற்றலை உடனே தரும் என்பதால், மாவீரன் நெப்போலியன் எப்போது போருக்கு சென்றாலும், அதிக அளவு சாக்லேட்டுகளை கொண்டு செல்வாராம். உலகம் முழுவதும், 500 விதமான சுவைகளில் சாக்லேட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
சமீபத்தில், அமெரிக்காவில் சாக்லேட் சம்பந்தமான ஆராய்ச்சி முடிவில், சிறுவர்களுக்கு இனிப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதிக, 'கார்போ ஹைட்ரேட்' உள்ள உணவை சாப்பிட்ட பின், பல்லைச் சுத்தப்படுத்தாமல் இருந்தால் தான், பற்சிதைவு ஏற்படும். சாக்லேட்டில் இருக்கும் சில பொருட்கள், பற்சிதைவை தள்ளிப் போடக்கூடியவை என, ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.
*******
ஆ ங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது, நீதிபதிகள் தலையில் வெள்ளை நிறத்தில் சுருள் முடி டோப்பா அணிந்திருந்தனர். நாம் அந்த கால திரைப்படத்திலும் இதைக் காண முடியும். இந்த டோப்பாவிற்கு, 'நுாக்' என, பெயர். இன்றைக்கும் இங்கிலாந்தில் நீதிபதிகள், இந்த சுருள் முடி டோப்பாவை அணிந்தே, நீதிமன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இந்த டோப்பா சிஸ்டம், எல்லா நீதிபதிகளுக்கும் கட்டாயமில்லை. சிவில் மற்றும் குடும்ப வழக்குகள் நடத்தப்படும் நீதிமன்றங்களில், இதை அணியாமலேயே வழக்குகளை விசாரிக்கின்றனர், நீதிபதிகள். குற்றவியல் வழக்குகள், ஹைகோர்ட் வழக்குகள், அதற்கும் மேலே உள்ள கிரவுன் கோர்ட் நீதிபதிகள், இந்த சுருள் முடி டோப்பாவையும், கருப்பு கவுனையும் அணிந்து கொள்ள வேண்டும். இந்த டோப்பா அணியும் செயல், வழக்கின் மேல் மரியாதை ஏற்படுத்துவதற்கும், நீதிபதிகளின் உண்மை அடையாளத்தை மறைப்பதற்கும் (குற்றவாளிகளால் நீதிபதிகளுக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்க்க) ஏற்பட்டது.
*********
பொ துவாக பெரிய கப்பல்களை நடுக்கடலிலோ, துறைமுகத்திலோ அல்லது புயலின் போதோ இடத்தை விட்டு நகராமல் இருக்க, நங்கூரம் போட்டு நிறுத்துகின்றனரே! நங்கூரத்திற்கு அப்படி என்ன விசேஷ சக்தி இருக்கிறது?
பொதுவாக கப்பலை நிறுத்த, பல்வேறு வழிகள் உள்ளன. கப்பலில் உள்ள, டர்பன் என்னும் காற்றாடி போன்ற அமைப்பு சுழல்வதால், கப்பல் நகர்கிறது. கேப்டன் கப்பலை நிறுத்த விரும்பினால், அப்படி முன்னோக்கி சுழலும் டர்பனை எதிர் திசையில் சுற்றி கப்பலின் வேகத்தை குறைப்பார். இதனால், முன்செல்லும் கப்பல் நின்று, பின்பக்கமாக செல்லும். வேண்டிய இடத்தில், டர்பன் இயக்கத்தை நிறுத்தி கப்பலை நிறுத்துவார்.
கப்பல்களில் உள்ள நங்கூரத்தின் எடை, சராசரியாக, 4 டன்களுக்கு மேல் இருக்கும். அதை சங்கிலி மூலம் கடலுக்குள் இறக்குவர். கடலின் அடிமட்ட மணலில் புதைந்ததும், கப்பல் நின்று விடும். மீண்டும் கப்பல் புறப்படும் போது, இந்த நங்கூரத்தை மோட்டார் சக்தி மூலம் மேலே ஏற்றிவிடுவர்.