/இணைப்பு மலர்/வாரமலர்/ஞானானந்தம்: தாய்க்கான ஏக்கம்!

ஞானானந்தம்: தாய்க்கான ஏக்கம்!

ஞானானந்தம்: தாய்க்கான ஏக்கம்!

ஞானானந்தம்: தாய்க்கான ஏக்கம்!

ஞானானந்தம்: தாய்க்கான ஏக்கம்!

PUBLISHED ON : ஏப் 12, 2026


Google News
Latest Tamil News
பல ஆண்டுகளுக்கு முன், மலை உச்சியில் இருந்த குகையில் வாழ்ந்து வந்தார், சாது ஒருவர். மலையடிவாரத்திலுள்ள குளத்தில் தினமும் குளிக்க வருவது, அவரது வழக்கம். குளத்தின் அருகில், ஒரு சத்திரம் இருந்தது.

ஒரு நாள் குளித்து விட்டு, வரும் போது, அருகில் இருந்த சத்திரத்தில் குழந்தையின் குரல் கேட்கவே அங்கு சென்றார், சாது. சத்திரத்தில் அவருக்கு தெரிந்த ஏழெட்டு இளைஞர்கள் கொண்ட குழுவைக் கண்டார்.

நகரத்தில் இருந்து சுற்றுலா வந்த அவர்கள் தங்களுடன் சாதுவின் பக்தர் ஒருவரின் குழந்தையையும் கூட்டி வந்திருந்தனர். அதற்கு, இரண்டு வயது தான் இருக்கும். சுற்றுலாவின் போது குழந்தை கூட இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று அழைத்து வந்திருந்தனர். இளைஞர்கள் ஒவ்வொருவரும் மாற்றி மாற்றிக் குழந்தையுடன் விளையாடினர். குழந்தை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருந்ததை கண்டார், சாது.

சற்று நேரத்திற்குப் பின், குழந்தை அமைதி இழந்தது. அது, எதையோ பறி கொடுத்தது போல் தோன்றியது. சுற்றுமுற்றும் பார்த்து அழத் துவங்கியது. அதன் அம்மாவின் நினைவு குழந்தைக்கு வந்து விட்டது என்று புரிந்து கொண்டார், சாது.

குழந்தையின் கவனத்தைத் திசை திருப்ப முயன்றனர், இளைஞர்கள். அது சற்று நேரம் அமைதியாக இருந்தது. ஆனால், மீண்டும் அம்மாவை தேடி, அழத்துவங்கியது. ஆனால், குழந்தையின் அம்மாவோ, வேகு துாரத்தில், நகரத்தில் இருந்தாள். எனவே, இளைஞர்கள் பயப்பட துவங்கினர்.

அவர்கள் சில விளையாட்டு பொம்மைகளையும், மிட்டாய்களையும் குழந்தையிடம் கொடுத்தனர். ஆனால், இவை எல்லாம் குழந்தையின் கவனத்தைச் சில நிமிடங்கள் தான் கவர்ந்தன. அது மீண்டும் அம்மாவுக்காக அழத்துவங்கியது. தரையில் உருண்டு புரண்டது. கை கால்களை உதைத்துக் கொண்டு பலமாக அலறியது. இளைஞர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

இதை எல்லாம் பார்த்த, சாது, உடனே, குழந்தையைத் தன் தோளில் சுமந்தபடி, அதன் தாயிடம் கொடுக்க நகரத்தை நோக்கி ஓடினார்.

குழந்தைக்கு, பொம்மைகளிடம் பெரிய ஈர்ப்பு எதுவும் இல்லாமல், தாயிடம் செல்ல வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. அதுபோல், நாமும் இருக்க வேண்டும். தாயை, அதாவது, இறைவனை தரிசித்த பிறகே திருப்தி அடைய வேண்டும். குரு தான் இறைவனின் தொடர்பைத் நமக்கு தருபவர். இங்கே, குழந்தையைத் தாயிடம் துாக்கிச் சென்ற சாது, ஒரு விதத்தில் குருவைப் போன்றவரே! தாய்க்காக ஏங்கும் குழந்தையைப் போன்று, இறைவனுக்கான நம் ஏக்கம் தீவிரமாக இருக்கும்பொழுது நிச்சயம் அவரது தரிசனத்தைப் பெறுவோம்!

அருண் ராமதாசன்