PUBLISHED ON : பிப் 15, 2026

பிறவியிலேயே செவித்திறனற்ற குழந்தைகளுக்கு, மூளைத்தண்டில் பொருத்தப்படும், 'ஆடிட்டரி பிரைன் ஸ்டெம் இம்ப்பிளான்ட்'- ஏ.பி.ஐ., சிகிச்சையை, 15 ஆண்டுகளுக்கு முன், ஆசியாவிலேயே முதன் முறையாக எங்களின் மையத்தில் அறிமுகம் செய்தோம்.
இதுவரையிலும் 100க்கும் அதிகமான குழந்தைகள் என்ற ஏ.பி.ஐ., சிகிச்சையால் பலன் பெற்றுள்ளனர்.
இது ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை என்பதால், இதற்கென்று பிரத்யேக மருத்துவ தொழில் நுட்பத்தில், நிபுணத்துவம் பெற்றவர்களால் மட்டுமே செய்ய முடியும்.
தற்போது, முதுகலை சண்டிகர் மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனை, டில்லி ஆர்மி ரிசர்ச் அண்டு ரெப்ரல் மருத்துவமனைகளில், எங்களின் உதவியோடு, சில குழந்தைகளுக்கு இச்சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
பிறவியிலேயே உள் காது நரம்புகளில் ஏற்படும் பாதிப்பால், காது கேளாமை இருந்தால், 'காக்ளியார் இம்ப்பிளான்ட்' எனப்படும் மின் கருவியை உள் காதில் பொருத்தலாம்.
இது உள் காதில் உள்ள நுண்ணிய நரம்புகளைத் துாண்டி, சத்தத்தை உணரச் செய்யும்; காதுகள் கேட்கும்.
ஏ.பி.ஐ.,
சுவாசிப்பது, இதயத்துடிப்பு, உணவை விழுங்குவது, செரிமானம் போன்ற முக்கியமான செயல்பாடுகளை மூளைத்தண்டு தான் கட்டுப்படுத்துகிறது.
செவித்திறனையும் இப்பகுதியில் உள்ள நரம்புகள் தான் கொடுக்கின்றன. சிலருக்கு பிறவியிலேயே உள் காது நரம்புகள் வளர்ச்சி இல்லாமல் இருக்கலாம். இதனால், உள் காதுக்கும் மூளைத் தண்டுக்கும் தொடர்பு இருக்காது. இதனால் மூளைத்தண்டுக்கு ஒலி எட்டாது.
இது தவிர, உள் காதின் பின் புறத்தில் உள்ள நரம்புகள் துண்டிக் கப்படலாம். மூளைத்தண்டில் கட்டி அல்லது வேறு ஏதேனும் காரணங் களுக்காக அந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அதனால் நரம்புகள் சிதைந்து இருக்கலாம்.
உள் காதில் இருந்து மூளைக்கு செல்லும் நரம்பு இல்லாவிட்டால், காக்கிளியார் இம்ப்பிளான்ட் செய்து பலன் இல்லை.
இப்படிப்பட்டவர்களுக்கு நேரடியாக மூளை தண்டில் தான் கருவியைப் பொருத்த வேண்டும். அது தான் ஏ.பி.ஐ.
மூளைத் தண்டில் நேரடியாக கருவியைப் பொருத்தினால், இப்பகுதியில் உள்ள நரம்புகளை துாண்டி, ஒலிகளை உணரச் செய் யும். காதுகள் கேட்க ஆரம்பிக்கும்.
செவித்திறன் குறைபாடு உள்ளதா என்பதை, குழந்தை பிறந்த அன்றே கண்டுபிடித்து விடலாம். ஒரு மாதத்திற்கு பின் ஸ்கேன் செய்து உறுதிப்படுத்தலாம்.
ஒன்றரை வயதால் ஏ.பி.ஐ., கருவியை பொருத்தலாம்.
இது மிகவும் சிக்கலான, நுட்பமாக செய்ய வேண்டிய சிகிச்சை என்பதால், நரம்பியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற டாக்டரும் உடனிருக்க வேண்டும். நானும், வி.ஹெச்.எஸ்., மையத்தின் நரம்பியல் மருத்துவர் டாக்டர் வாசுதேவனும் இணைந்து செய்வோம்.
பயிற்சி
மின் சாதனக் கருவி உதவியுடன் ஒலிகளை குழந்தை கேட்க ஆரம்பிப்பது என்பது முதல் படி. அதன்பின், மூளையில் சத்தங்கள் பதிந்து, மொழியைக் கற்று, பேச வேண்டும். ஏபிஐ செய்த குழந்தைகளுக்கு அதற்கென்று இருக்கும் எங்களின் மையங்களில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பயிற்சி தருவோம்.
பயிற்சிக்கு பின், 40 சதவீதம் குழந்தைகளுக்கு இயல்பாக பேச்சு வந்து விடும். 20 சதவீத குழந்தைகள் பேச்சு வந்தாலும், சில சமயம் உதட்டு அசைவு செய்வர். மீதி 20 சதவீத குழந்தைகளுக்கு பேச்சு சரியாக வராது. காரணம், பெற்றோர் முறையாக பயிற்சிக்கு அழைத்து வர மாட்டார்கள்.
எந்த அளவு முறையாக பயிற்சி செய்கின்றனரோ அந்த அளவு மொழியைக் கற்றுக் கொள்ள முடியும்.
என்னிடம் சிகிச்சை பெற்ற ஒரு குழந்தை, இந்த ஆண்டு மதுரை மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்துள்ளது. இன்னொ-ரு பையன் ஐ.ஏ.எ.ஸ்., தேர்ச்சி பெற்றுள்ளான். ஹார்வேர்லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்கலில் ஒரு மாணவன் சேர்ந்து படிக்கிறான். ஐந்து மொழிகள் தேர்ச்சி பெற்றுள்ளான்.
காது கேட்காத குழந்தை களுக்கு நவீன மருத்துவ தொழில் நுட்ப உதவுயுடன் காது கேட்கும் திறனை நாங்கள் கொடுத்தாலும், அவர்களிடம் உள்ள திறமையை வளர்ப்பது என்பது பெற்றோர் கைகளில் தான் உள்ளது.
டாக்டர் மோகன் காமேஸ்வரன், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர், மெட்ராஸ் இ.என்.டி. பவுண்டேஷன், சென்னை 99414 94457merfmk30@yahoo.com

