தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சூரிய ஒளியை பார்ப்பதால் பார்வை கூர்மையாகும்!

சூரிய ஒளியை பார்ப்பதால் பார்வை கூர்மையாகும்!

சூரிய ஒளியை பார்ப்பதால் பார்வை கூர்மையாகும்!


PUBLISHED ON : ஜூலை 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயோபியா எனப்படும் கிட்டப் பார்வை கோளாறு, குழந்தைகளிடையே கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

இதற்கு பிரதான காரணமாக நான் பார்ப்பது, அளவுக்கு அதிகமான 'மொபைல் போன், லேப்-டாப், டேப்' போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாடு. இவை தவிர, குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதே இல்லை.

ஆன்லைன் பாடங்கள், மொபைல் போன் பார்ப்பது, டேப்லெட், லேப்-டாப் என்று பெரும்பாலான நேரங்களில், கண்களுக்கு மிக அருகில் வைத்து பார்க்கும் விதமாகவே குழந்தைகளின் தினசரி வேலைகள் அமைந்து விட்டன.

போதுமான இடைவெளி இல்லாமல், கண்களுக்கு மிக அருகில் வைத்து மின் திரைகளை பார்ப்பது, கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி, கிட்டப் பார்வை பிரச்னையை அதிகரிக்கும்.

இதனால், தற்போது எங்களிடம் வரும் பெற்றோரிடம், தினமும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் குழந்தைகளை சூரிய ஒளியில் விளையாட விட வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.

காரணம், குழந்தைகளின் ஆரோக்கியமான கண் வளர்ச்சிக்கு, சூரிய வெளிச்சம் முக்கிய பங்கு வகிப்பதை, மருத்துவ அறிவியல் ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.

ரெடினா எனப்படும் விழித்திரையில் உள்ள பிரத்யேக செல்கள், பார்வையை கூர்மையாக்க உதவும், 'டோபமைன் ஹார்மோன்' உற்பத்தியை துாண்டுகிறது.

கிட்டப் பார்வைக்கு காரணமான கருவிழியின் அதிகப்படியான வளர்ச்சியை தடுக்க உதவும்.

காலை, மாலையில் சைக்கிள் ஓட்டுவது, திறந்த வெளியில் விளையாடுவது, பள்ளி நேரம் முடிந்ததும் மைதானத்தில் நடப்பது என்று தினசரி குழந்தைகளை வெட்ட வெளியில் இருக்க பழக்குவது, கிட்டப் பார்வை கோளாறை தடுக்க உதவும்.

குழந்தை பருவத்தில் ஏற்படும் கிட்டப் பார்வை குறைபாடு ஆபத்தானது. காரணம், மிகச் சிறிய வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. கண்களின் 'பவர்' வேகமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதோடு, முறையாக சிகிச்சை செய்யாத பட்சத்தில், தீவிர கிட்டப் பார்வை குறைபாட்டுக்கு வழி வகுக்கும். இது, விழித்திரை விலகல், கண் அழுத்தம், கண் புரை போன்ற கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

வெளியில் போய் தினமும் விளையாடுவதோடு, சரியான தொலைவில் புத்தகத்தை வைத்து படிப்பது, அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்தாமல் இருப்பது, ஆண்டிற்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் குறைந்தது இரண்டு மணிநேரம் இயற்கையான வெளிச்சத்தில் இருப்பதை உறுதி செய்வது, உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றை தினசரி நடவடிக்கையாக்குவது முக்கியம்.

வெளிப்புற செயல்பாடுகளை ஒதுக்கி வைக்காமல், குழந்தைகளின் கண் பார்வையை பாதுகாப்பதற்கான வழிமுறை என்பதை உணர வேண்டும்.



டாக்டர் அன்புசெல்வி, கண் மருத்துவர், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, சென்னை 95949 24048p.adhirai@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us