
தனசேகரன், மதுரை: எனது வயது 60, கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பாட்டில் உள்ளது. 5 மி.கி., அட்டோர்வா சாட்டின் மாத்திரையை தினமும் எடுத்துக்கொள்கிறேன். அந்த மாத்திரையை தொடர்ந்து எடுக்க வேண்டுமா. எனது சகோதரனுக்கு 50 வயது. கெட்ட கொழுப்பு இல்லை. ஆனால் நல்ல கொழுப்பான எச்.டி.எல்., அளவு 40ஐ தாண்டவில்லை. எந்தமாதிரியான உணவுகளை எடுக்க வேண்டும்?
முதல் கேள்வியான 5 மில்லிகிராம் என்பது புரோபைலாடிக் டோஸ், அதாவது மாரடைப்பு வருவதைத் தடுப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த மாத்திரை சாப்பிடுவது நல்லது. உங்கள் சகோதரனுக்கு எச்.டி.எல்., அளவு பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதைக் கூட்டுவதற்கு எந்த ஒரு உணவும் பலன்தராது.
- டாக்டர் பி.ஆர்.ஜெ., கண்ணன், இதயநோய் சிறப்பு நிபுணர், மதுரை
கே.அபிநயா, கூடலுார்: கூடுதலான பனிப்பொழிவு ஏற்படும் இரண்டு மாதங்களில் கால்களில் உள்ள தோல் வறண்டு போகிறது. இதற்கு தீர்வு என்ன?
தோல் வறண்டு போவதைத் தடுக்க தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் தேய்க்க வேண்டும். இது தோலில் எண்ணெய் சுரப்பியின் அளவை சமன்படுத்தி பாதுகாக்கும். பனிக் காலங்களில் எண்ணெய் சுரப்பியின் அளவு குறையும்போது தோலில் அரிப்பு, வெடிப்பு, அலர்ஜி ஏற்படும். இதற்காக மருந்து உட்கொள்ள வேண்டியதில்லை. ஆடை அணியும்போது வெளியில் தெரியும் உடல் பாகங்களில் மட்டும் இது போன்ற பிரச்னை ஏற்படும். அதனால் குளிர் காலங்களில் கை, கால்கள் முழுவதும் மூடும் வகையில் ஆடை அணிவது நல்லது. உணவில் உலர் பழங்கள், ஆலிவ் ஆயில், தேங்காய், நெய் போன்ற நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்கவேண்டும். சீரகத் தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்னைகள் சீராவதுடன் தோல் பளபளக்கும். பனிக்காலங்களில் சோப்பு போட்டு குளிப்பதை தவிர்க்கலாம். ஆஸ்துமா, சைனஸ் பிரச்னைகள் உள்ளவர்கள் நீர்க்காய்கறிகளை சேர்ப்பதை தவிர்த்து அதிக நார்ச்சத்து உடைய காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும்.
- டாக்டர் பி.முருகன், வட்டார மருத்துவ அலுவலர், கூடலுார்
எஸ். வசந்தகுமார், ராமநாதபுரம்: எனக்கு வயது 44. சர்க்கரை நோய் அதிகரித்தால் பார்வை இழப்பு ஏற்படும் என்கின்றனர். அது உண்மை தானா. எவ்வாறு சரிசெய்யலாம்?
உண்மை தான். சமீப காலமாக சர்க்கரை நோய் பாதித்தவர்கள் தான் அதிகளவில் கண் சிகிச்சைக்காக வருகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் இதற்கு காரணம். சர்க்கரை நோய் ரத்தக் குழாய் சம்பந்தப்பட்ட நோய். ஆரம்ப கட்டத்தில் சரியாக கவனிக்காமல் விட்டு விடுவதால் இதய நோய் அதாவது மாரடைப்பு, சிறுநீரகம் பாதிப்பு, கண் நரம்பு பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
சர்க்கரை நோயாளிகளுக்கு கண் நரம்புகளில் பாதிப்பு இருந்தாலும் பரிசோதனை செய்யாமல் அவர்களால் தெரிந்து கொள்ளவே முடியாது. ரத்த ஓட்டம் குறைந்து கண் நரம்பு ரத்தம் ஓட்டம் குறையும் போது, அதாவது ஒளி குவிக்கும் இடத்தை பாதிக்கும் போது தான் நமக்கு தாமதமாக தெரிய வரும். ஆகவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாத்திரை சாப்பிட்டு வந்தாலும் பார்வை இழப்பை தடுக்க கட்டாயம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டும். அதன் மூலம் சிறிதாக இருக்கும் போதே சர்க்கரை அளவை குறைத்து ஊசி, அல்லது லேசர் முறையில் சிகிச்சை அளிக்க முடியும்.
இதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை. யாராக இருந்தாலும் கண் பார்வை குறைந்தால் உடனடியாக டாக்டரின் ஆலோசனை பெறுவது அவசியம். உணவை பொறுத்தமட்டில் கிழங்கு வகைகளை குறைத்து விட்டு இயற்கையான காய்கறி, பழங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- டாக்டர் எஸ்.சுபாசங்கரி, உதவிப் பேராசிரியர், கண்சிகிச்சை பிரிவு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
அ.அபிநயா, சிவகங்கை: பிரசவ காலத்தில் சினைப்பையில் உருவாகும் கட்டியால் குழந்தைக்கு ஆபத்தா?
கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தின் முதல் மாதத்தில் இருந்தே டாக்டரின் ஆலோசனை பெற்று கருவின் வளர்ச்சியை கண்காணிக்க வேண்டும். சிலருக்கு சினைப்பையில் கட்டி இருப்பதை உணர்ந்தால் உடனடியாக டாக்டரிடம் ஆலோசனை பெற்று ஸ்கேன் மூலம் கட்டியின் அளவு கட்டியின் வகை குறித்து அறிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து பயப்படத் தேவையில்லை. சில தினங்களுக்கு முன்பு கூட ஒரு பெண்ணிற்கு கர்ப்பம் அடைந்த ஐந்து மாதத்தில் ஸ்கேன் மூலம் இடது பக்க சினப்பையில் ஒரு கட்டி கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு கட்டி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சாதாரண கட்டி என்று தெரிந்தவுடன், கருவில் உள்ள குழந்தை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு 39 வாரங்கள் கடந்த பின்பு அந்தப் கர்ப்பிணி ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர். எனவே கர்ப்ப காலத்தில் ஏற்படும் கட்டிகள் குறித்து கர்ப்பிணிகள் அச்சப்பட தேவையில்லை. டாக்டரின் முறையான ஆலோசனை பெற்று அவர்கள் பரிந்துரை செய்யக்கூடிய சிகிச்சையின் மூலம் அவற்றை சரி செய்து கொள்ளலாம்.
- டாக்டர் தென்றல், அரசு மகப்பேறு மற்றும் பொதுநல மருத்துவர், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை
முத்துகருப்பன், மல்லாங்கிணர்: எனக்கு 60 வயதாகிறது சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்றால் அவதிப்படுகிறேன். இதற்கான பரிசோதனை, சிகிச்சைகள் என்ன?
சிறுநீரக பாதை தொற்று ஆண்களில் 60 வயது, பெண்களில் 50 வயதை கடந்தவர்களுக்கு அதிகமாக காணப்படுகிறது. இரவில் 5 முறைக்கும் மேல் சிறுநீர் கழித்தல், சிறுநீரை வெளியேற்றுவதில் எரிச்சல், சிரமப்படுதல், கட்டுப்பாடு இல்லாமல் வருதல், சிறுநீருடன் ரத்தம் சேர்ந்து வெளியேறுதல், சிறுநீர் பாதையில் அடைப்பு, ஆண்களுக்கு விந்துப்பை வீக்கம், பெண்களுக்கு நீர்ப்பை அடியிறுக்கம் போன்றவை அறிகுறிகளாகும். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் சிறுநீர் பரிசோதனை, ஆண்கள் விந்துப்பை வீக்கம் பரிசோதனை, பெண்கள் சிறுநீர்ப்பை, கர்ப்பப்பை பரிசோதனைகள் செய்ய வேண்டும். பரிசோதனையில் சிறுநீர் பாதையில் கிருமி தொற்று இருப்பது தெரிந்தால் அதற்கான மருத்துவரை அணுக வேண்டும். பெண்கள் சிறுநீர் வெளியேறும் வாய்ப்பகுதியில் தொற்று ஏற்பட்டால் உடனடியாக அதற்கான மருத்துவரை அணுகி பரிசோதனை, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- டாக்டர் பி.கே. பிரபு, சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, விருதுநகர்

