sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

டாக்டரைக் கேளுங்கள்

/

டாக்டரைக் கேளுங்கள்

டாக்டரைக் கேளுங்கள்

டாக்டரைக் கேளுங்கள்


PUBLISHED ON : பிப் 15, 2026

Google News

PUBLISHED ON : பிப் 15, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாதவி, மதுரை: சின்னம்மை நோய் வராமல் காப்பது எப்படி?

சின்னம்மை எனும் சிக்கன்பாக்ஸ் வெயில்காலத்தில் பரவும் வைரஸ் தொற்று. குழந்தைகள், சிறுவர், சிறுமியர் பாதிப்புக்குள்ளாவர். ஒருமுறை தொற்று வந்தால் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி பெறப்படுவதால் மீண்டும் சின்னம்மை வராமல் தடுக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு குழந்தைப் பருவத்தில் சின்னம்மை வந்தாலும் வளரிளம் பருவத்தில் அல்லது முதுமையிலும் தொற்று ஏற்படலாம். பெரும்பாலும் அச்சறுத்தல் தராத சாதாரண நோயாகக் கடந்து செல்லும். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள், எடை குறைவான, ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர், முதியோருக்கு தீவிரத்துடன் தொற்று பரவலாம்.

இதர வைரஸ் காய்ச்சல் போல இரண்டு நாட்கள் கடுமையான காய்ச்சலுடன் ஆரம்பிக்கும். அதன்பின் நெஞ்சு, முதுகு, முகம் எனத் தொடங்கி உடலின் அனைத்துப் பகுதியிலும் கொப்புளம் உருவாகும். ஏழு முதல் பத்து நாட்களுக்குள் கொப்புளம் சருகாகி விழுந்துவிடும். இந்த காலக்கட்டத்தில் பாதிப்புக்குள்ளானோர் இருமும் போது, தும்மும் போது அருகில் உள்ளவர்களுக்கு எளிதில் பரவும். எனவே நோய் தாக்கினால் தனிமையில் இருக்க வேண்டும். சின்னம்மை வந்தால் டாக்டரிடம் சிகிச்சை பெறுவதே நல்லது. சின்னம்மைக்கு எதிரான தடுப்பூசி உள்ளது. விருப்பத்தின் பேரில் செலுத்திக் கொள்ளலாம்.

- டாக்டர் அ.ப. பரூக் அப்துல்லா, பொது மருத்துவ நிபுணர், மதுரை

சிவக்குமார், வடமதுரை: சிறுநீரக கல் பிரச்னைக்காக வயிற்றை ஸ்கேன் செய்தபோது கொழுப்பு கல்லீரல் இருப்பதாக கூறிய டாக்டர் எனது உடல் எடையை குறைக்கவும் அறிவுறுத்தினார். மது அருந்தும் பழக்கம் என்னிடம் இல்லை. கொழுப்பு கல்லீரல் என்றால் என்ன அது ஏன் வருகிறது. எந்த மாதிரி பாதிப்பை ஏற்படுத்தும், வராமல் தடுப்பது எப்படி?

கொழுப்பு கல்லீரல் என்பது கல்லீரலில் 5 முதல் 10 சதவீதத்திற்கு மேல் கொழுப்பு அதிகமாக படிந்தால் வரும் நோயாகும். வழக்கமாக மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகமாக வரும். 20 ஆண்டுகளாக மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் இந்த நோய் வந்து அச்சுறுத்துகிறது. உலகம் முழுவதும் இதன் பாதிப்பு அதிகமாய் கொண்டுள்ளது. ஆரம்ப நிலையில் இந்த நோய்க்கு எந்த அறிகுறியும் தெரியாது. சில பேருக்கு வயிறு பொருமல், அஜீரணம், ஏப்பம், வலது பக்க மேல் வயிற்றில் வலி இருக்கக்கூடும்.

இந்த நோய் ஏற்பட அதிக உடல் பருமன், உணவில் அதிகமாக மாவு சத்துகள், இனிப்பு வகைகள், எண்ணெய் பலகாரங்கள், துரித உணவுகள், இனிப்பு பானங்கள் சேர்த்தல், போதிய உடற்பயிற்சி இல்லாமை, அதிக மன அழுத்தம் போன்றவை முக்கிய காரணங்களாகும். கல்லீரலில் அழற்சி, சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் பாதிப்புகள், மஞ்சள் காமாலை போன்றவற்றை அதிகரிக்க செய்யும். மேலும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உருவாக வாய்ப்பு அதிகம். மேற்கூறிய உணவு வகைகளை தவிர்த்தல், அன்றாட உடற்பயிற்சி, மதுப் பழக்கத்தை அறவே தவிர்த்தல் மூலம் இந்நோயை தடுக்க முடியும். பாதிப்புகளையும் குறைக்க முடியும்.

-- டாக்டர் ஜே.சி.சேகர், பொதுநல மருத்துவர், வடமதுரை



ஆர்.மலர்கொடி, போடி: தோல்நோயில் இருந்து விடுபட ஆலோசனை கூறுங்கள்?


தேவையற்ற அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது. வெளியில் துரித உணவு, பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் தினமும் இருவேளை குளிக்க வேண்டும். முடிந்த வரை அதிக வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் அதிகமாக பருகுவதோடு, பழங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், கீரை, காய் கறிகளை அதிகளவில் சாப்பிடுவது நல்லது. காற்றோட்டம் உள்ள தளர்ந்த பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். விஷப் பூச்சிகள் கடித்து தடிப்புகள், அரிப்பு உள்ளிட்ட தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்பட்டால் தோல் மருத்துவரை அணுகாமல் ஏதாவது கிரீம்களை தேய்ப்பது தவறு. முறையான தோல் மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

- டாக்டர் ஜெ.ஜெயானந்த், தோல் சிகிச்சை, அழகியல் நிபுணர் அரசு மருத்துவமனை, போடி

ச.முருகேசன், ராமநாதபுரம்: இரு மாதங்களுக்கு முன் டூவீலரில் சென்ற போது ஏற்பட்ட சிறிய விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டது. அப்போது பெரிதாக வலி ஏதும் இல்லை. கடந்த ஒரு வாரமாக தலைச்சுற்றல், வாந்தி போன்ற பிரச்னை உள்ளது. இதற்கு எப்படி தீர்வு காண்பது?

எதிர்பாராத விபத்துக்களால் தலையில் ஏற்படும் காயத்தை கவனத்துடன் கையாள வேண்டும். வெளிக்காயம் ஏதும் இல்லை என நினைத்து அலட்சியமாக விடக் கூடாது. தலையின் உள்பகுதியில் ரத்தக் கசிவு, எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில் எந்த பாதிப்பும் தெரியவில்லை என்றாலும் நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதன் அறிகுறியாக தலைவலி, குமட்டல், தலைச்சுற்றல் ஏற்படும். அதை கவனிக்காமல் விட்டால் நரம்பு தொடர்பான வலிப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும். சில நேரங்களில் கோமாவிற்கு செல்ல கூட வாய்ப்பு உள்ளது. விபத்து ஏற்பட்டவுடன் சுயமாக முடிவு எடுக்காமல் டாக்டரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். காயமில்லாமல் வீக்கம் இருந்தால் ஐஸ்கட்டி மூலம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் எதிர்காலத்தில் தலை சம்பந்தமான பிரச்னைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

- டாக்டர் எம்.பரணிதரன், உதவி பேராசிரியர், நரம்பியல் அறுவைச் சிகிச்சைத் துறை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்.

ச.சுவாமிநாதன், சிவகங்கை: பறவைக்காய்ச்சல் நோய் எதனால் வருகிறது. எவ்வாறு தற்காத்துக் கொள்வது?

பறவை காய்ச்சல் பொதுவாக கோழி, வாத்து போன்ற பறவைகளின் மலம், உமிழ்நீர் மூலம் மனிதர்களுக்குப் பரவும் ஒரு வைரஸ் தொற்று. இதன் முக்கிய அறிகுறி கடுமையான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, தசை வலி, மூச்சுத் திணறல், மற்றும் சோர்வு. பாதிக்கப்பட்ட பறவைகளுடன் தொடர்பில் இருந்த 4-6 நாட்களுக்குள் இந்த அறிகுறி தோன்றும்.

வழக்கத்திற்கு மாறான அதிக உடல் வெப்பநிலை, மூச்சுக்குழாய் பாதிப்பு காரணமாக இருமல், கடுமையான சுவாசக் கோளாறு, உடல் முழுவதும் கடும் வலி, அதிகப்படியான உடல் சோர்வு, தலைவலி. சிலருக்கு வயிற்று உபாதை ஏற்படலாம். இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும். அவரின் அறிவுறுத்தலோடு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகளைத் தொடக்கூடாது. கோழி இறைச்சி, முட்டைகளை நன்கு வேகவைத்து உண்ணவும். பாதுகாப்பற்ற பறவை பண்ணைகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.

-டாக்டர் மு.தென்றல், மகப்பேறு மற்றும் பொது மருத்துவர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை.



செல்வம், சிவகாசி: எனது குழந்தைக்கு 4 வயது ஆகிறது. அடிக்கடி சளி பிடித்து விடுகிறது. இதனை தடுப்பதற்கு என்ன செய்யலாம்?


காலநிலை மாற்றம் எப்போது ஏற்பட்டாலும், குளிர் இருந்தாலும் சளி பிடிப்பது இயல்புதான். கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடிக்க வேண்டும். சித்த மருத்துவத்தில் ஆடாதொடா டானிக், இருமல், சளிக்கு பால சஞ்சீவி மாத்திரை குழந்தைகளுக்கு கொடுக்கப்படும். வீட்டிலேயே இதற்கான தடுப்பு மருந்தாக கிராம்பு, சித்தரத்தை, ஏலக்காய், கற்பூரவள்ளி இலை, துளசி, துாதுவளை ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிய பின்னர் குடிக்க வேண்டும். இது சளி பிடிக்காமல் தடுப்பதற்கு உதவும்.

- டாக்டர் மணிமேகலை, சித்த மருத்துவர் அரசு மருத்துவமனை, சிவகாசி






      Dinamalar
      Follow us