தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...


PUBLISHED ON : ஆக 09, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கலைச்செல்வி, மதுரை: வாய் சுத்தம் முக்கியம் ஏன். சிலர் பல்லை பிரஷ்ஷால் விளக்காமல் 'மவுத்வாஷ்' பயன் படுத்துகிறார்களே. அது சரியா?



மூன்று விஷயங்களுக்கு வாய் சுத்தம் அவசியம். ஒருவரது வாய் தான் அவரின் உடலின் எதிர்ப்பு சக்திக்கு முதல் அரணாக இருக்கிறது. அதேபோல் உடலில் வரும் நோய்களில் பலவற்றிற்கு வாயில் அறிகுறிகள் இருக்கும். முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு ஈறுநோய் எளிதில் வந்து விடும். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய தேவை உணவு கட்டுப்பாடு. சரியான உணவை முறையாக மென்று சாப்பிடுவதற்கு ஆரோக்கியமான பற்களும் ஈறுகளும் இருக்க வேண்டும். மூன்றாவது மனதில் தன்னம்பிக்கை. வாய் துர்நாற்றம், கோணல் பற்கள், ஆடும் பற்கள், பற்கள் இல்லாமல் இருப்பது போன்ற சூழ்நிலையில் பேசுவதும் சிரிப்பதும் குறைந்து விடும். வாய் சுத்தமாக, நல்ல பற்களுடன் இருக்கும்போது மனதில் மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் தானாக வரும்.

'மவுத்வாஷ்' என்பது வாய் கொப்பளித்து சுத்தம் செய்ய உதவும் திரவம். வாயை புத்துணர்ச்சியாக வைக்கவும் துர்நாற்றம் வராமல் தடுக்கவும் பல் சொத்தை வருவதை குறைக்கும் 'புளூரைடு' உள்ள 'மவுத்வாஷ்'கள் உண்டு.

ஈறுநோய் உள்ளவர்கள் அல்லது பல் எடுத்த இடத்தில் வீக்கம் உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் கிருமிகளை குறைக்கும் 'மவுத்வாஷ்' மற்றொரு வகை. ஒருபோதும் பல் தேய்ப்பதற்கு பதிலாக 'மவுத்வாஷ்' பயன்படுத்தக்கூடாது. சரியான டூத் பிரஷ்ஷை தேர்வு செய்து ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது அவசியம். வாய் ஆரோக்கியத்தை பொறுத்து டாக்டரின் ஆலோசனைப்படி 'மவுத்வாஷ்' தேர்ந்தெடுப்பது நல்லது.

- டாக்டர் அனுஷா கண்ணபெருமான், பல் மருத்துவ நிபுணர், மதுரை

பழனிகுமார், ஒட்டன்சத்திரம்: எனக்கு வயது 62 ஆகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சர்க்கரை நோய் உள்ளதால் நரம்பு பாதிப்புகள் வர வாய்ப்பு உள்ளதா. அதற்கான அறிகுறிகள், தடுக்கும் வழிமுறைகள் என்ன?



சர்க்கரை நோய்க்கு முறையான சிகிச்சை இல்லாவிட்டால் 30 முதல் 40 சதவீதம் நரம்பு பாதிப்புகள் வர வாய்ப்பு உள்ளது. ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையின் அளவால் நரம்புகள் பாதிக்கின்றன.

உடலிலேயே பாதத்தில் உள்ள நரம்புகள் தான் மிகவும் நீளமானவை என்பதால் பாதிப்பு அறிகுறிகள் முதலில் பாதத்தில் ஆரம்பிக்கின்றன.

கால், கைகளில் எரிச்சல், கால் விரல்களின் நுனியில் ஊசி குத்துவது போன்ற வலி, மரத்துப் போகுதல், எறும்பு ஊர்வது போன்ற உணர்ச்சிகள் இருக்கும். சிலருக்கு இந்த அறிகுறிகள் பாதங்களில் தொடங்கி மேல் நோக்கி தொடை பகுதி, கைகளுக்கும் பரவக்கூடும். தசைகளில் பலவீனம், சமநிலையின்மை போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

எனவே கால்களை தினமும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு முறைகளான நார்ச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி மூலம் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த வேண்டும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவை ஒரே சீராக வைத்துக்கொள்ள வேண்டும். நரம்பு தளர்ச்சி குறைபாடுகளை அறிய உதவும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். உடல் பருமனை தடுக்க வேண்டும். உயர் ரத்த அழுத்த நோய் இருந்தால் சிகிச்சை எடுக்க வேண்டும். புகைபிடித்தல், நிக்கோட்டின் பொருள்கள் பயன்பாடு சம்பந்தமானவற்றை உடனே நிறுத்த வேண்டும்.

- டாக்டர் ஆசைத்தம்பி, சிறப்பு பொது மருத்துவர், ஒட்டன்சத்திரம்

ப.நீலகண்டன், கூடலுார்: தோல் அடிக்கடி வறண்டு போகிறது. மழைக்காலங்களில் அதிகமாகிறது. காரணம் என்ன?



மழைக் காலங்களில் எண்ணெய் சுரப்பியின் அளவு குறையும்போது தோலில் அரிப்பு, வெடிப்பு, அலர்ஜி ஏற்படும்.தோல் பளபளப்பாகவும் பாதுகாப்பாகவும் வைக்க எண்ணெய் சுரப்பி உதவுகிறது. இதற்காக மருந்து உட்கொள்ள வேண்டியதில்லை. தோல் வறண்டு போவதைத் தடுக்க சாதாரண தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் தேய்க்க வேண்டும். இது தோலில் வழக்கமாக இருக்க வேண்டிய எண்ணெய் சுரபியின் அளவை சமன்படுத்தி பாதுகாக்கும். மழைக்காலங்களில் இதை செய்தால் தோல் வறண்டு போகாது. ஆடை அணியும்போது வெளியில் தெரியும் உடல் பாகங்களில் மட்டும் இது போன்ற பிரச்னை ஏற்படும். அதனால் மழைக் காலங்களில் கை, கால்கள் முழுவதும் மூடும் வகையில் ஆடைகளை அணிவது நல்லது.

உணவில் உலர் பழங்கள், ஆலிவ் ஆயில், தேங்காய், நெய் போன்ற நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். மழைக்காலம் முடியும் வரை வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்கவேண்டும். தினமும் இரவில் சீரகத் தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்னைகள் சீராவதுடன் தோல் பளபளக்கும். பனிக்காலங்களில் சோப்பு போட்டு குளிப்பதை தவிர்க்கலாம்.

ஆஸ்துமா, சைனஸ் பிரச்னைகள் உள்ளவர்கள் நீர்க்காய்கறிகளை சேர்ப்பதை தவிர்த்து அதிக நார்ச்சத்து உடைய காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும். இவைகளை தொடர்ந்து கடை பிடித்தால் தோல் வறண்டு போகாமல் உடல் ஆரோக்கியமும் சீராகும்.

- டாக்டர் பி.முருகன், வட்டார மருத்துவ அலுவலர், கூடலுார்

விஷ்ணுகுமார், ராமநாதபுரம்: கடந்த ஒரு மாதமாக சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல் உண்டாகிறது. இதற்கு தீர்வு கூறவும்?



இயற்கையாக ஏப்., மே மாதங்களை விட ஜூன் முதல் ஆக., வரை அதிக வறட்சி காணப்படும். இந்த காலத்தில் எவ்வளவு தண்ணீர் அருந்தினாலும் வியர்வையாக வெளியேறி விடுவதால் நீர்ச்சத்து குறைவாக இருக்கும். அதனால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படும். ஒரே நேரத்தில் அதிகமான தண்ணீர் குடிப்பதை விட அவ்வப்போது தேவையான அளவு குடிக்க வேண்டும்.

தினமும் இளநீர், எலுமிச்சை சாறு போன்ற நீராகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள், பால் சார்ந்த உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டாம். கல்லடைப்பு உள்ளதா என பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சிறிய அளவில் கல்லடைப்பு இருந்தால் ஆரம்பத்தில் எளிதாக உணவு மூலம் சரிசெய்ய முடியும். சித்த மருத்துவமனைகளில் ஜலமஞ்சரி போன்ற மூலிகை மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.

- டாக்டர் ரவிச்சந்திரன், ஆயுஷ் மருத்துவ அலுவலர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கோவிலாங்குளம், ராமநாதபுரம்

க.பிரியா, சிவகங்கை: கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வந்து விட்டால் எவ்வாறு பராமரிப்பது?

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய் ஹார்மோன் மாற்றங்களால் உருவாகிறது. இந்த நோய் உடலில் கணையம் பாதிப்பதாலும் உருவாகிறது. உடற்பயிற்சி இல்லாத உணவு பழக்கங்களும் தற்போது கர்ப்ப கால சர்க்கரை நோயை அதிகரிக்கிறது. பெரும்பாலான பெண்களுக்கு அறிகுறி தெரிவதில்லை. சிலருக்கு அதிகரித்த தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சோர்வு மற்றும் மங்கலான பார்வை போன்ற பாதிப்பு இருக்கலாம்.

இந்த அறிகுறிகள் இருந்தால் அது குழந்தைக்கு பாதிப்பாகும் என்பதை உணர்ந்து கவனமுடன் இருக்க வேண்டும். குழந்தையின் எடை அதிகமாதல் தாய்க்கு ரத்த அழுத்தம் அதிகரித்தல் உள்ளிட்டவை ஏற்படலாம்.

உரிய காலத்தில் பரிசோதனை செய்து டாக்டரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். டாக்டரின் ஆலோசனையுடன் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிகமாக புரோட்டீன் உள்ள உணவு, கீரை வகைகள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை பிறக்கும் வரை டாக்டரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும்.



- டாக்டர் மு.தென்றல், மகப்பேறு மருத்துவர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us