
குதிரை வண்டிக்காரனான போரஸ் மிகவும் நல்லவன். எது நடந்தாலும் நன்மைக்கே என எண்ணிக் கொள்வான். கிடைத்த சொற்ப வருமானத்தில் நிம்மதியுடன் வாழ்ந்தான். ஒருநாள் அவனது குதிரை காணாமல் போனது. குடும்பமே நிலைகுலைந்தது. ஆனால் போரஸ் மட்டும்,
'எல்லாம் நன்மைக்கே' என எண்ணிக் கொண்டான். இரண்டு நாள் கழித்து காணாமல் போன குதிரை வேறு இரண்டு குதிரையுடன் வந்து சேர்ந்தது. அவற்றை கொண்டு தொழிலை விரிவுபடுத்தலாம் என குடும்பத்தினர் மகிழ்ந்தனர்.
பழக்கப்படுத்தாத புதிய குதிரைகளில் ஒன்று எட்டி உதைக்க, போரஸின் மூத்த மகனின் கால் முறிந்தது. இதுவும் நன்மைக்கே எனக் கருதினான் போரஸ். இந்த சமயத்தில் எதிரி நாட்டின் மீது போர் தொடுக்க மன்னர் தயாரானார். அதற்காக ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் இளைஞர் ஒருவர் போரில் பங்கேற்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. தன் மகனின் நிலையை எடுத்துச் சொல்லி போரில் இருந்து விலக்கு பெற்றான் போரஸ்.