புதிய ஊருக்கு சென்றான் இளைஞன் ஒருவன். அங்கிருந்த முதியவரிடம் இங்கு வாழ நினைக்கிறேன். இது எப்படிப்பட்ட ஊர் எனக் கேட்டான். உன்னுடைய ஊரைப் போலத்தான் இதுவும் என்றார். அவன் பதிலளிக்காமல் நின்றான். என்ன யோசிக்கிறாய் எனக் கேட்டார் முதியவர். என் ஊரில் அனைவரும் ஏமாற்றுக்காரர்களாக இருக்கிறார்கள் அதனால் இங்கு வரலாம் என நினைத்தேன் எனச் சொல்லி நடந்தான்.
சிறிது நேரம் கழித்து வேறொரு இளைஞன் வந்தான். அதே முதியவரிடம் இந்த ஊர் எப்படி பட்டது எனக் கேட்டான். அதற்கு உன் ஊரைப் போலத்தான் இந்த ஊரும் என்றார். என் ஊரில் எல்லோரும் நல்லவர்கள். இருந்தாலும் புதிய இடத்தில் வாழ விரும்புகிறேன் என்றான் அவன். இது நல்லவர்கள் வாழும் ஊர் என்றார் முதியவர்.
உடன் இருந்த நண்பர் இது பற்றி கேட்ட போது, '' ஏமாற்றுக்காரர்கள் வாழும் ஊரில் இருந்து வருபவனுக்கும் அந்த கெட்ட புத்தியே இருக்கும் என்பதால் 'உன் ஊரைப் போலத் தான் இந்த ஊரும்' எனச் சொல்லி வர விடாமல் தடுத்தேன். நல்லவன் ஒருவன் குடி வந்தால் நம் ஊராருக்குத்தான் நன்மை. அதனால் இரண்டாவது இளைஞனிடம் நல்ல ஊர் என்றேன். இவ்வளவு காலம் பழகி வந்த குணத்தை எளிதில் மாற்ற முடியாது'' என்றார் முதியவர்.