மன்னர் ஒருவருக்கு திடீரென பார்வை போனது. பரிசோதித்த வைத்தியர் 'பிரச்னை தீர்வதற்கு காட்டில் இருந்து அபூர்வ மூலிகையைக் கொண்டு வர வேண்டும். அதற்கு காட்டில் உள்ள தேவதை தான் வழிகாட்ட வேண்டும்' என்றார். மன்னரின் மூத்த மகன் காட்டுக்குப் புறப்பட்டான். வழிகாட்ட தேவதையும் வந்தது. ஆனால் நிபந்தனை ஒன்றை விதித்தது.
'நான் பின்னே வருவேன். முன்னே நீ நடந்து செல்ல வேண்டும். என்ன நடந்தாலும் திரும்பி பார்க்கக் கூடாது மீறினால் சிலை ஆகிவிடுவாய்' என்றது. ஒப்புக்கொண்ட அவனும் நடந்தான். சிறிது துாரம் சென்ற பின் தேவதையின் காலில் அணிந்துள்ள சலங்கை ஒலி கேட்கவில்லை. தன்னையும் அறியாமல் திரும்பி பார்க்க அவன் சிலையானான். மூத்தவன் வராததால் மன்னரின் இரண்டாவது மகன் புறப்பட்டான்.
மீண்டும் அதே கதை தான். விபரம் அறிந்ததும் மூன்றாவது மகன் புறப்பட்டான். அலறல் சத்தம், சிரிப்பு ஒலி கேட்டது. எதையும் அவன் லட்சியம் செய்யவில்லை. கடைசியில் மூலிகையை கொண்டு வந்தான். மன்னருக்கு பார்வை வந்தது. இளவரசனின் மனஉறுதியைக் கண்ட தேவதை சகோதரர்களையும் உயிருடன் விடுவித்தது.
இதில் வரும் தேவதை தான் மனிதனின் மனம். அதுவே நிபந்தனையை விதிக்கும். ஆனால் அதை மீறவும் வைக்கும். அதை கட்டுப்படுத்தினால் தான் வெற்றி சாத்தியம்.